Published:Updated:

2008 - ல் அம்பேத்கர் பெயரால் நடந்த சட்டக்கல்லூரி மோதலின் நிலவரம் என்ன ? #DoubtOfCommonman

சட்டக்கல்லூரி
சட்டக்கல்லூரி

கல்லூரி வாயிலில், பொதுமக்கள், போலீஸார் பார்த்துக்கொண்டிருக்க, இரும்புக் கம்பிகள், அரிவாள் என ஆயுதங்களை கொண்டு மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

சட்டக்கல்லூரி என்றாலே இன்றைய தமிழகத்தில் பலருக்கு நினைவுக்கு வருவது, அங்கு நடந்த நியாயமான போராட்டங்களும், மனிதாபிமானமற்ற கலவரங்களும்தான். தமிழகத்தின் மொத்த அரசியலும் கொட்டிக்கிடக்கும் ஓரிடமாகத்தான் பல ஆண்டுகளாக இருக்கிறது சட்டக்கல்லூரி. அப்படிச் சட்டக் கல்லூரியின் மீது, சாதி அரசியல் பூசிய கறையின் சாட்சியாக இருந்ததுதான் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டக் கல்லூரி மோதல்.

Doubt of common man
Doubt of common man

சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்ன ஆனது என்பதுகுறித்து விகடனின் #DoubtOfCommonman பகுதியில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் கமென்ட் பகுதியில், ``15 ஆண்டுகளுக்கு முன்பு சட்டக்கல்லூரியில் நடந்த மாணவர் மோதலின் இன்றைய நிலை என்ன?" எனக் கேட்டிருந்தார் வாசகர் எஸ்.ஜே.உசேன். அவருக்கான பதில் இதோ.

சுமார் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர், 2008 நவம்பர் 12 -ம் தேதி, தேவர் ஜயந்தி விழா எடுப்பதற்கு அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கையில், கல்லூரியின் பெயரான டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி எனும் பெயரைப் போடாமல் சட்டக்கல்லூரி என்று மட்டும் போட்டதுடன், 'சிங்கங்களே, ஒன்று சேருங்கள்' என போஸ்டர் ஒட்டினார்கள். இதுதான் பிரச்னைக்கு வித்திட்டது. இரு சமூக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறை வரை நீண்டு, பட்டப்பகலில், கல்லூரி வாயிலில், பொதுமக்கள், போலீஸார் பார்த்துக்கொண்டிருக்க, இரும்புக் கம்பிகள், அரிவாள் என ஆயுதங்களால் மாணவர்களில் சிலர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

 சட்டக்கல்லூரி கலவரம்
சட்டக்கல்லூரி கலவரம்

இதைத் தொடர்ந்து, எஸ்பிளனேடு காவல் நிலைய அதிகாரிகள், இரு தரப்பு மாணவர்களின் புகார்களையும் கருத்தில் கொண்டு 41 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஐ.பி.சி பிரிவு 148 (கொடூரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி கலவரம் செய்தல்) ஐ.பி.சி பிரிவு 325 ( தானாக வந்து, தெரிந்தே தீவிர காயம் ஏற்படுத்துதல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

இவ்வழக்கில் 2016-ம் ஆண்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் 22 பேரை விடுதலை செய்தும், 21 பேருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின் போது, 45 சாட்சிகள், 73 ஆதாரங்கள் மற்றும் 15 ஆயுதங்கள் ஆகியவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உடனடியாக தண்டனை வழங்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதாகக் கூறி, தண்டனையை நிறுத்தி வைக்க மெமோ வழங்கினர். இதையடுத்து மேல்முறையீடு செய்ய அவகாசம் கொடுத்து அவர்கள் தண்டனையை இரண்டு மாதங்கள் நிறுத்தி வைத்தது.

தண்டனை பெற்ற, 21 பேர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டனையை ரத்து செய்யக் கோரியும், சட்டப்பிரிவு 148 ற்கு பதிலாக சட்டப்பிரிவு 325 இன் கீழ் வழக்கை நடத்தச்சொல்லியும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார், சட்டப்பிரிவுகளை மாற்ற முடியாது எனக் கூறினார். அதேசமயத்தில், விசாரணை முறையாக நடைபெறாததை சுட்டிக்காட்டி, சந்தேகத்தின் பலனாக மீதம் உள்ள 21 பேரையும் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலை செய்தார்.

 சட்டக்கல்லூரி கலவரம்
சட்டக்கல்லூரி கலவரம்

இவ்வழக்கின் தீர்ப்பில் நீதிபதி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார், ``வழக்கின் போக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களையும், ஆதாரங்களையும் கவனிக்கும்போது, போலீஸார் கட்டாயமாக செய்திருக்க வேண்டிய 'identification parade' எனப்படும் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டுவதற்கான அணிவகுப்பு நடத்தப்படவில்லை.

வழக்கின் முக்கிய சாட்சியான சட்டக் கல்லூரி முதல்வர், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை மட்டுமே அடையாளம் காட்ட முடிந்தது. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பதற்கும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பலமான ஆயுதத்தால் புகார்தாரர்களை தாக்கியதற்கும், சம்பவத்தை கண்ணால் பார்த்த சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இவ்வழக்கின் மனுதாரர்களான, காயம்பட்டவர்களே, பொய் சாட்சியாகிப் போனதால், போதிய சாட்சியங்கள், ஆதாரங்கள் இல்லை என்கிற அடிப்படையில் இவ்வழக்கின் தண்டனையிலிருந்து இவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்" என்று தீர்ப்பளித்தார்.

சட்டக்கல்லூரியில் கலவரச் சம்பவம் நடந்ததும் உண்மை, அதைத் தமிழகமே பார்த்ததும் உண்மை. ஆனால், ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்கிற உன்னதமான தத்துவத்தின் அடிப்படையில் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்தது.

இதுபோன்ற கேள்விகள் உங்களிடமும் இருக்கின்றனவா? இங்கே கேளுங்கள்...

அடுத்த கட்டுரைக்கு