Published:Updated:

`சைல்ட் போர்னோகிராஃபி'... இந்திய தண்டனைச் சட்டம் என்ன? தண்டனை என்ன?

குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள், பகிர்ந்தவர்களைப் பட்டியல் தயாரித்து வைத்திருக்கும் காவல் துறை, அவர்களின் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கமுடியும்? இந்திய சட்டம் என்ன சொல்கிறது?

Representational Image
Representational Image

குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் ஆகியோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறைக்கு அனுப்பியுள்ளது. அடுத்த கட்டமாக பட்டியலில் இருப்பவர்கள்மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவின் கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ``போர்னோகிராஃபி தொடர்பான இந்தியச் சட்டங்கள் என்ன சொல்கின்றன, அடுத்து என்ன நடக்கும் என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அந்தக் கேள்விகளுக்கான விடையே இந்தக் கட்டுரை.

Representational Image
Representational Image

இந்தியச் சட்டம் என்பது பெருங்கடல். சமயங்களில் ஒரே விஷயம் பல்வேறு சட்டங்களின், ஒன்றிற்கு மேற்பட்ட பிரிவுகளின் கீழ் கையாளப்படும். அப்படித்தான், `போர்னோகிராஃபி' எனப்படும் ஆபாசப் படங்கள் மற்றும் 'சைல்டு போர்னோகிராஃபி' எனப்படும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றையும் ஒன்றுக்கும் மேற்பட்ட இந்தியச் சட்டங்கள் கையாளுகின்றன. அவை பின்வருமாறு...

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 292 :

ஆபாச உணர்வுகளைத் தூண்டும் விதமாகவோ, பாலியல் ஈடுபாட்டை மிகவும் அதிகரிப்பதாகவோ, ஒருவரின் மனதைக் கெடுப்பதாகவோ இருக்கும் எந்த விதமான ஆபாச வீடியோ அல்லது புகைப்படப் பதிவுகளை விற்பது, வாடகைக்கு விடுவது, பொது இடங்களில் காட்சிப்படுத்துவது, பலருக்குப் பகிர்வது, இந்த ஆபாசப் பதிவுகளை வைத்து லாபம் சம்பாதிப்பது, விளம்பரப்படுத்துவது, தயாரிப்பது உள்ளிட்டவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 293 :

இருபது வயதுக்குக் குறைவான ஒரு நபருக்கு இத்தகைய ஆபாசப்படங்களை, வீடியோக்களை விற்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கிறது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294 :

ஆபாசமான பாடல்கள் பாடுவது, பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்வது ஆகியவற்றைத் தண்டனைக்குரிய குற்றம் என்கிறது.

சட்டம்
சட்டம்

தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 A :

இந்தச் சட்டம், ஒருவர் ஆபாசப் படங்களைத் தனிமையில் பார்ப்பதைக் குற்றமாக வரையறுக்கவில்லை. மாறாக, அந்தப் படங்களை மின்னணு வடிவில் வெளியிட்டால் அல்லது பகிர்ந்தால் அவர் குற்றம் புரிந்தவர் ஆவார்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 B :

இந்தச் சட்டம், குழந்தைகளின் ஆபாசக் காணொளிகள், படங்கள் ஆகியவற்றை வெளியிடுவது, பகிர்வது மட்டுமின்றிப் பார்ப்பதும் கூட குற்றம் என்கிறது. மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் இழைப்பவர்களுக்கு அபராதமும், ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் வழங்குகிறது இந்தச் சட்டம்.

போக்ஸோ சட்டம்

2019 -ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தப்பட்ட `போக்ஸோ' சட்டத்தின்படி, குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வரையும், குழந்தைகளின் ஆபாசப் படங்களை வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள்,பார்ப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, குழந்தைகளின் ஆபாசப் படங்கள் அதாவது, `சைல்டு போர்னோகிராஃபி' என்றால் என்ன என்பதன் விளக்கம் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி , புகைப்படம், வீடியோ, டிஜிட்டல் படம் அல்லது கணினியில் உருவாக்கிய படம் என எந்த வடிவில் குழந்தைகளை ஆபாசமாக சித்திரிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் படம் குழந்தைகளை வைத்து நேரடியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அல்லது குழந்தைகளின் படத்தை எடிட் செய்து சேர்த்திருந்தாலும்கூட, அது சட்ட விரோதமே. மேலும், பெரியவர்கள் சிறியவர்களைப் போல நடித்திருந்தாலும் அது `சைல்டு போர்னோகிராஃபி' எனும் வகைப்பாட்டில்தான் வரும்.

போக்ஸோ சட்டம்
போக்ஸோ சட்டம்

குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள், பகிர்ந்தவர்களைப் பட்டியல் தயாரித்து வைத்திருக்கும் காவல் துறை, அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறது.

காவல் துறையினால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? இந்தக் குற்றங்களுக்கான தண்டனை என்ன? எனும் விவரங்கள் பின்வருமாறு...

புதிய சட்டத் திருத்தத்தின்படி, யார் ஒருவர் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்காமல், அத்தகைய படங்களை முழுவதும் அழிக்காமல் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தாலும் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையும் அதே தவறைச் செய்தால், அபராதத்தொகை பத்தாயிரம் ரூபாய் வரை உயரும். வாட்ஸ்அப் உட்பட, எந்த வகையில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பகிர்ந்திருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் வரை சிறையும் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.

``சசிகலா முதல்வராவதைத் தடுக்கவே நான் பதவியேற்றேன்!'' - ஆடிட்டர் குருமூர்த்தி

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும்பான்மை நாடுகளில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பதுகூட சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. பொதுவாக, ஆபாசப் படங்களுக்குத் தடை இல்லாத நாடுகளில்கூட, குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது, பகிர்வது, தயாரிப்பது போன்றவற்றிற்கு கடும் தண்டனைகள் உள்ளன.

இந்தியாவில், குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பது போலவே, இணையப் பயன்பாடு பெருகிய கடந்த 20 ஆண்டுகளில், உலகம் முழுக்க பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு, அயர்லாந்து நாட்டில் `ஆபரேஷன் அமெதிஸ்ட்' எனும் பெயரில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்த 100 -க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். அந்நாட்டின் மிகப்பெரிய போலீஸ் ஆபரேஷன் இது. அதேபோல, ஆஸ்திரேலியாவில் `ஆபரேஷன் ஆக்ஸின்', அமெரிக்காவில் `ஆபரேஷன் அவலாஞ்சே' மற்றும் `ஆபரேஷன் ப்ரீடேடர்', பிரிட்டனில் `ஆபரேஷன் ஓர்' மற்றும் 'ஆபரேஷன் பின்' எனப் பல பெயர்களில் பல நூறு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதே சமயம், தமிழகத்தில் இருப்பது போல ஆயிரக்கணக்கில் நீளும் பட்டியல், உலகில் வேறு எங்கும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் அதிகபட்சம் ஒரே நேரத்தில் 1,300 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, இந்தக் குழந்தைகளின் ஆபாசப் படங்களை விநியோகிக்கும் கூட்டத்தின் தலைவனான தாமஸ் ரீடி எனும் ஒருவருக்கு அமெரிக்கா நீதிமன்றம் 1,335 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

Representational image
Representational image
`5,000 பக்கங்கள்; அடுத்த வாரம் ஆக்‌ஷன்!'- தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பார்த்தவர்கள் விவரம்

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு தனிநபர், அவரது பர்சனல் லேப்டாப் அல்லது மொபைல் போன்களில், தனிமையில் வெறும் நுகர்வோராக இருந்து ஆபாசப் படங்களைப் பார்ப்பது சட்டப்படி குற்றம் இல்லை. ஆனால், அந்த ஆபாசப் படத்தை ஒருவருக்குப் பகிர்ந்தால்கூட, அது சட்டப்படி குற்றம். அதேசமயம், குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது, பகிர்வது, பதிவிறக்கம் செய்வது என அனைத்துமே சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.

பொதுவாக, குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் என்றாலே மன ரீதியாகக் குழந்தைகளை பாலியல் நோக்கில் பார்க்கும் `பீடோஃபைல்' எனும் பாதிப்பு உள்ளவராக இருக்க வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான இந்த வக்கிர மனநிலை, அவர்களைக் குழந்தைகளுக்கு ஆபத்தானவர்களாகவே அடையாளப்படுத்துகிறது. இந்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே வரும் இந்த காலச்சூழலில், இத்தகைய நடவடிக்கைகளும், சமீபத்திய சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கும் கடுமையான சட்டங்களும் வரவேற்கத்தக்கவையே.