Published:Updated:

``ஆயுதப்படை தண்டனைப் பகுதியா?” - விளக்குகிறார் முன்னாள் டி.ஜி.பி ஜாங்கிட்

ஜாங்கிட்
ஜாங்கிட்

காவல்துறைக்குள் ஆயுதப்படை என்பது `பனிஷ்மென்ட்’ ஏரியாவாகவே பார்க்கப்படுகிறது. அது ஏன் என விளக்குகிறார் முன்னாள் டி.ஜி.பி ஜாங்கிட்

மேலதிகாரிகளை அனுசரித்துப் போகாதவர்கள் தொடங்கி குற்றப் புகார்களில் சிக்குபவர்கள் வரை காவல்துறைக்குள் ஒதுக்கப்படுபவர்கள் பணிமாற்றம் செய்யப்படுவது முதலில் ஆயுதப்படைக்குத்தான். சுருக்கமாக ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாலே, `பனிஷ்மென்ட்டா’ என மக்கள் முணுமுணுத்துவிடுகிறார்கள். ஆயுதப்படையின் பணி என்ன, காவல் அதிகாரிகளின் சிறைச்சாலையாக இப்பிரிவு ஏன் மாற்றப்பட்டுள்ளது?

கேள்விகளுடன் ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி ஜாங்கிட் உடன் பேசினோம். விரிவாக விளக்கமளித்தார்.

ஜாங்கிட்
ஜாங்கிட்

``காவல்துறையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை தாலுகா காவல்துறையினர். இவர்கள்தான் சட்டம் ஒழுங்கு, குற்ற வழக்குகளை விசாரிப்பார்கள். போலீஸ் ஸ்டேஷன் மூலமாக மக்களோடு நேரடித் தொடர்பில் இருப்பார்கள். சி.பி.சி.ஐ.டி., சிவில் சப்ளைய்ஸ், பொருளாதாரக் குற்றப்பிரிவு என இதில் பல பிரிவுகள் உண்டு.

இரண்டாவது வகை ஆயுதப்படை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஆயுதப்படைப் பிரிவு இருக்கும். இப்பிரிவை தேவைக்கேற்ப மாவட்ட எஸ்.பி. பயன்படுத்திக்கொள்ளலாம். கோயில் விசேஷங்கள், திருவிழாக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, முக்கிய வி.ஐ.பிக்கள் வரும்போது பாதுகாப்புக்காகச் செல்வது, சிறைக்கைதிகளைப் பாதுகாப்பாக நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்து வருவது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இதன்மூலமாக அவ்வப்போது பொதுமக்களோடு நேரடித் தொடர்பில் ஆயுதப்படையினர் இருப்பார்கள். இங்கு பணிபுரிபவர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் தாலுகா காவல்துறைக்கு மாற்றப்படுவார்கள். இன்ஸ்பெக்டர் ரேங்கிற்கு மேல் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் பெற்றுச் செல்பவர்கள், பெரும்பாலும் அங்கேயே பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிடுவார்கள்.

கலவரத் தடுப்பு போலீஸார்
கலவரத் தடுப்பு போலீஸார்

ஆயுதப்படை போன்றே மூன்றாவது வகை காவல் பிரிவு ஒன்றுள்ளது. தமிழ்நாடு சிறப்புக் காவல்துறை மற்றும் ஆயுதமேந்திய காவல்துறையினர் எனப்படும் பட்டாலியன்ஸ்தான் அவர்கள். சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இவர்கள், பெரும் கலவரம் ஏற்பட்டால் அதைத் தடுக்க மட்டும் பயன்படுத்தப்படுவார்கள். ஒரு பட்டாலியனுக்கு சுமார் 800 பேர் வீதம், ஆவடி, உளுந்தூர்ப்பேட்டை, மணிமுத்தாறு, திருச்சி எனத் தமிழகம் முழுவதும் 16 பட்டாலியன்கள் உள்ளன. கலவரத் தடுப்பைத் தவிர வேறு பணி இவர்களுக்கு இருக்காது. கலவரத்தை அடக்கிவிட்டு, தங்கள் முகாமுக்கே இவர்கள் திரும்பிவிடுவார்கள்.

காவல்துறை பணிக்கு ஆள் எடுக்கும் பொழுது, ஆயுதப்படை மற்றும் பட்டாலியன்ஸ் மூலமாகத்தான் ஆள் எடுக்கப்படும். இதில் இருந்துதான் பதவி உயர்வு அடிப்படையில் தாலுகா காவல்துறைக்கு அவர்கள் மாறுவார்கள். இதில் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) தேர்வு என்பது தனி. தேர்ச்சி பெறும் எஸ்.ஐக்கள் மார்க் ரேங்க் அடிப்படையில், தாலுகா காவல், ஆயுதப்படை, பட்டாலியன் என மூன்று வகையிலும் பிரித்து அனுப்பப்படுவர். இந்த மூன்றுவகை காவல்பணியிலும் மூன்றாவது வகையான பட்டாலியன்களின் வாழ்க்கைதான் மிகவும் சிரமத்திற்கு உரியது.

ஜாங்கிட்
ஜாங்கிட்

தாலுகா போலீஸார் தங்கிக்கொள்ள அவர்கள் பணிபுரியும் காவல்நிலையத்திற்கு அருகிலேயே போலீஸ் குடியிருப்புகள் இருக்கும். ஆயுதப்படை போலீஸாருக்கு அந்தந்த மாவட்டத்திலேயே போலீஸ் வீடுகள் இருக்கும். ஆனால், பட்டாலியன்ஸ் போலீஸார் எங்கு கலவரம் ஏற்படுகிறதோ அங்குள்ள பள்ளிகள், சமூகநலக் கூடங்களில்தான் தங்க வேண்டியதிருக்கும்” என்றவரிடம், ``காவல்துறைக்குள் புகாருக்கு உள்ளாகும் போலீஸாரை ஆயுதப்படைக்குத் தூக்கியடிக்கும் கலாசாரம் பின்பற்றப்படுகிறதே, ஆயுதப்படை என்ன தண்டனை பகுதியா?” என்றோம்.

``சிற்சில காரணங்களால் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்படும் முதல் வகை தாலுகா காவல்துறையினரை அதிகபட்சம் மூன்று மாதத்திற்கு மேல் ஆயுதப்படையில் வைத்திருக்க முடியாது. மீண்டும் தாலுகா காவல்நிலையத்திற்கு மாற்ற வேண்டும். இந்த மூன்று மாத உச்சவரம்பு ஆய்வாளர்கள் வரையிலான காவலர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

போலீஸ்
போலீஸ்

டி.எஸ்.பி. ரேங்க்குக்கு மேல் உள்ள அதிகாரிகளை தாலுகா காவல்துறையிலிருந்து நேரடியாகப் பட்டாலியனுக்குத் தூக்கியடிக்கலாம். அங்கேயே விரும்பும் வரை வைத்திருக்கலாம். ஒரு மாவட்ட எஸ்.பியாகச் சிறப்பாகப் பணிபுரிந்து வருபவரை, அரசாங்கம் நினைத்தால் மணிமுத்தாறு பட்டாலியனுக்கு கமாண்டன்ட்டாக நியமித்து உட்கார வைக்கலாம். பட்டாலியன் கமாண்டன்ட்டாகப் பணிபுரிபவர்களில் 50 சதவிகிதம் பேர் அங்கேயே பணிபுரிந்து பதவி உயர்வு பெற்றவர்கள். மீதம் 50 சதவிகிதம் பேர், மாவட்ட எஸ்.பியாகவும் துணை ஆணையர்களாகவும் இருந்து தூக்கியடிக்கப்பட்டு வருபவர்கள்தான். பட்டாலியன் ரேஞ்ச் டி.ஐ.ஜியாக இருப்பவர்கள் எல்லாருமே ஐ.பி.எஸ் அதிகாரிகள்தான். துடிப்புடன் செயலாற்றும் அதிகாரிகளை பட்டாலியனுக்குள் முடக்கிவைத்தால் அவர்களின் மனநிலை என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., சென்னை மாநகரக் காவல் ஆணையர், ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. எல்லா பதவிகளுமே ஒரே ரேங்க்தான். ஆனால், இம்மூன்றுக்கும் உள்ள அதிகாரம் வித்தியாசப்பட்டது. ஒரு கலவரம் நடைபெற்றால், தேவைப்படும் பட்டாலியன் காவலர்களை பாதுகாப்புப் பணிக்கு ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி அனுப்பி வைக்கலாம். ஆனால், அவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அந்த ரேஞ்ச் ஐ.ஜி., டி.ஐ.ஜி.க்குத்தான் உண்டு. இதில் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதனால்தான் பட்டாலியன் ஆயுதப்படை பிரிவு ஒரு தண்டனைப் பகுதியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், ஆயுதப்படையும் பட்டாலியன் காவல்பிரிவும் ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அவசியம் தேவை” என்றார் தெளிவாக. இறுதியாக, ``ஆயுதப்படையில் என்ன சீர்திருத்தம் வரவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?” என்றோம்.

ஜாங்கிட்
ஜாங்கிட்

``இந்தியா முழுவதும் ஆயுதப்படை இப்படித்தான் செயல்படுகிறது. இதில் சீர்த்திருத்தம் வரத் தேவையில்லை. ஆனால் நான் நீண்ட நாள்களாக ஒருவிஷயத்தைக் கூறிவருகிறேன். 1991 முதல் 2010 வரை பட்டாலியன் மூலமாக மட்டுமே காவல்துறைக்குள் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இதனால் பட்டாலியன், ஆயுதப்படை, தாலுகா காவல் என அனைத்திலும் அனுபவம் பெற்றவர்கள் காவல்துறையில் இருந்தார்கள். 2010-க்குப் பிறகு, போலீஸ் கமிஷனின் பரிந்துரைப்படி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் (பட்டாலியன்) மற்றும் ஆயுதப்படை மூலமாக காவல்துறைப் பணிக்கு ஆள் எடுப்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையை மாற்றி பழைய நடைமுறையில், பட்டாலியன் மூலமாகவே காவல்துறைக்கு ஆள் எடுக்கும் பணியைத் தொடங்க வேண்டும். இதுதான் காவல்துறைக்குச் சிறப்பானது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு