கார், வீடு, கல்விக்கு கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி?

மாத இறுதியில் இருக்கிறோம். இந்த மாதத்தில் மட்டும் கடன் வேண்டுமா என்று கேட்டு போன் வராத நபர்கள் யாரேனும் இருந்தால் கையைத் தூக்குங்கள் என்றால் மிக சொற்பமான நபர்களே கையை தூக்குவார்கள். ஏனெனில் இன்றைய நிலையில் நம் வாழ்க்கையில் கடன்களுக்கு பஞ்சமே இல்லை. அந்த அளவுக்கு கடன்களை நம் தலையில் கட்டுவதில் கடன் நிறுவனங்கள் தீவிரமாக இருக்கின்றன. கைமாத்து முதல், காலம் முழுக்க வட்டி கட்டுவது வரை எல்லா தேவைகளும் கடன்களைச் சுற்றியே நிகழ்கிறது.

கடன்

தேடிவந்து கொடுக்கிறார்களே என்று தேவையிலாமல் கடன் வாங்கி அவதிக்குள்ளானவர்களே அதிகம். கையில் பணமே இருந்தாலும் கூட, இ.எம்.ஐ- யிலும் கிரெடிட் கார்டிலும் தான் செலவு செய்ய விரும்புகிறார்கள். இதன் விளைவுகளைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை. கடன் பட்டார் நெஞ்சம் என்பது ஒருபோதும் நிம்மதி அடையாது. கடன் வாங்கிவிட்டு அடைக்க முடியாமல் உயிரை மாய்த்தவர்களையும் பார்த்திருக்கிறோம்.

டிவி, எஸ்எம்எஸ், ஃபேஸ்புக் என்று எல்லா இடத்திலும் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் நம்மை கடன் வாங்க வைத்துவிட்டுத்தான் தூங்குவோம் என்ற நிலையில் கடன் நிறுவனங்களோ கடன் வலைகளை வீசிக் கொண்டேதான் இருக்கின்றன. ஏன் கடன் இல்லாமல் ஒருவர் தன் எல்லா தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவே முடியாதா? 

நிச்சயமாக முடியும். எப்படி என்கிறீர்களா?

கடன் எதற்கெல்லாம் வாங்குகிறோம் என்பதை பட்டியல் போடுங்கள். குழந்தைகள் கல்வி, அறுவை சிகிச்சை, பைக், கார், வீடு......... பிசினஸ். அவ்வளவுதானே. இதில் பிசினஸுக்கு கடன் வாங்குவதை மட்டும் விதிவிலக்காக எடுத்துக்கொள்ளலாம். பிசினஸ் செய்வது ரிஸ்க், கடன் வாங்கி செய்வது இன்னும் ரிஸ்க். ரிஸ்க் எடுக்க துணிந்தவர்கள் சிலரே. எனவே அதை விட்டுவிடுவோம். 

 கல்வி, திருமணம், மருத்துவம், கார், வீடு இவற்றைக் கடன் வாங்காமல் சமாளிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. கல்விக் கடன் என்பது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கானது. நம்முடைய சம்பாத்தியத்திலிருந்து பிள்ளைகளின் கல்விக்கென்று ஒரு தொகையை அவர்களின் சிறு வயதிலிருந்தே ஒதுக்கி சேமித்து வந்தாலே பிள்ளைகளுக்குக் கல்விக்கடன் வாங்க வேண்டிய அவசியமே வராது. கல்விக் கடனைப் போலவேதான் திருமணமும். பிள்ளைகளின் திருமணத்துக்கென்று ஒரு தொகையைச் சேமித்து வரலாம். குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ், அஞ்சலகத் திட்டங்கள் என அனைத்திலும் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் இப்போது வந்துவிட்டன. 

மருத்துவ செலவுகளுக்கான கடன். விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டையும் மிகக் குறைவான பிரீமியச் செலவில் எடுத்துக்கொள்வதன் மூலம் மருத்துவச் செலவுக்கான செலவையும், உயிரிழப்புக்குப் பின் ஏற்படும் நிதி நெருக்கடியையும் சமாளிக்க முடியும். திடீர் நிதி நெருக்கடிகளுக்கு ஆளாகாமல் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால் சரியான பாலிசிகளைத் தேர்வு செய்வது அவசியம். 

வீட்டுக் கடனைப் பொறுத்தவரை சற்று நிதானம் அவசியம். வாடகை கட்டி மாளவில்லை என்பது உண்மைதான் என்றாலும் நகரங்களில் கடன் வாங்கி வீடு வாங்குவதில் அவ்வளவு விரைவாக முடிவெடுத்துவிடக் கூடாது. நகர வாழ்க்கையும் சரி, நாம் பார்க்கும் வேலையும் சரி ஒரே இடம் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. அவசரப்பட்டு கெளவரத்துக்காக கடனை வாங்கி வீடு வாங்குவதைத் தவிர்க்கலாம். மேலும் ரூ. 40 லட்சம் கடனுக்கு இருபது வருடத்துக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் இ.எம்.ஐ செலுத்த வேண்டியிருக்கும் பட்சத்தில் நீங்கள் 20 வருடங்களில் தோராயமாக ரூ. 60 லட்சம் செலுத்துவீர்கள். ஆனால் வீடு வாங்குவதில் அவசரம் கொள்ளாமல் அதே ரூ. 30 ஆயிரத்தை ரூ. 10 ஆயிரம் வாடகைக்குப் போக மீதமுள்ள ரூ. 20 ஆயிரத்தை மியூச்சுவல் ஃபண்ட் ஃபிக்சட் டெபாசிட், பிபிஎஃப் போன்றவற்றில் முதலீடு செய்துவந்தீர்கள் எனில் 20 வருடங்களில் உங்களின் முதலீடானது ரூ. 1 கோடியைத் தாண்டியும் வருமானமாக ஈட்ட முடியும். அப்போது உங்களுடைய நிரந்தர வசிப்பிடமும் உறுதியாகியிருக்கும். கடனில்லாமல் உங்களுடைய பணத்தை வைத்தே அழகான தனி வீட்டை கூட உங்களால் வாங்க முடியும். 

கார் என்பது ஆடம்பரம். சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு கார் உரிமையாளர்கள் மிக முக்கிய காரணம். அந்த நெரிசலில் பாதிக்கப்படுபவர்களும் அவர்களே. கொஞ்சம் யோசித்த்துப் பாருங்களேன் சென்னை போன்ற மாநகரங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மட்டுமே இயங்கினால் அந்தச் சூழல் எவ்வளவு அழகாக இருக்கும்!  விரைவான பயணமும், காற்று மாசில்லா நகரமும் சாத்தியமாகும். அதுமட்டுமல்லாமல் கார் வாங்குபவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் மாதத்தில் ஓரிரு முறைதான் பயன்படுத்துகிறார்கள். மற்ற நேரங்களில் பார்க்கிங் வசதியில்லாமல் சாலைகளை அடைத்துக்கொண்டிருக்கின்றன. கார் வாங்குவதற்கு பதிலாக வாடகைக் கார்களை பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம்.

இவை தவிர தவிர கிரெடிட் கார்டு, மொபைல் போன், காய்கறி வாங்க கடன் என எல்லாவற்றையும் நம்மால் தாராளமாகத் தவிர்க்க முடியும். சிம்பிள் விஷயம்தான். கையில் பணம் இருக்கும் போது ஏன் கடன் வாங்க வேண்டும்? என யோசித்தாலே போதும், கடனில்லாத வாழ்க்கை வசமாகும். 

முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது, வருமானம் ஈட்டக்கூடிய எந்தக் காரியத்துக்காகவும் கடன் வாங்கலாம். நம்முடைய செலவை அதிகரிக்கும் காரியங்களுக்காகக் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். கடனில்லாத வாழ்க்கைக்கு நீங்கள் உடனடியாகத் துவங்கும் சேமிப்பும், முதலீடும் தான் மருந்து.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!