குளிரை வெல்லும் ஃபர், டெனிம், பஃபர்... ஸ்வெட்டருக்கு டாட்டா சொல்லலாமா?!

சுட்டெரிக்கும் சூரியனுக்கு லீவு கொடுத்து, சில்லென உறையவைக்கும் மழைக்காலம் வந்தாச்சு. ஸ்லீவ்லெஸ் (sleeveless), ஷார்ட் ஸ்கெர்ட் (short skirt), ஷார்ட்ஸ் போன்ற உடைகள் அலமாரியில் தூங்கும் நேரம் இது. ஆனால், அதற்கான அவசியம் இனி இல்லை. உங்களுக்குப் பிடித்த உடைகளை எந்த வெப்பநிலையிலும் உடுத்தலாம். குளிர்காலத்தில் பயன்படுத்தப்படும் கோட் மற்றும் ஜாக்கெட்களின் ஃபேஷன் டிப்ஸ் கார்னர் இது.

winterfashion கோட்


ஃபேக் ஃபர் (Fake Fur) :
குளிர் காலங்களில் மார்க்கெட்டில் அதிகம் காணப்படும் இணை ஆடை வகை `ஃபேக் ஃபர்'. பல டிசைன்களில் வடிவமைக்கப்படும் இந்த ஃபேக் ஃபர், குளிருக்கு ரொம்பவே இதமளிக்கும். கோட் மாடல், ஷ்ரக் (shrug) மாடல் எனப் பல்வேறு வடிவங்களில் வரும் ஃபேக் ஃபரை எந்த உடைக்கு மேலும் அணிந்துகொள்ளலாம். போரடிக்கும் ஸ்வெட்டர்களுக்கு மத்தியில் ஃபேஷன் அப்டேட்தான் ஃபேக் ஃபர். வண்ண வண்ண நிறங்களில் வெவ்வேறு பிரின்ட் பேட்டர்ன், சமச்சீரற்ற பேட்டர்ன் போன்றவை கூடுதல் ப்ளஸ். ஆயிரம் ரூபாய் முதல் மார்க்கெட்டில் கிடைக்கும் ஃபேக் ஃபர் கலெக்‌ஷன், மழைக்காலத்தின் ஃபேஷன்.

fakefur கோட்

ட்ரென்ச் கோட் :
முதலாம் உலகப்போரின்போது ராணுவ அதிகாரிகளுக்காக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த `ட்ரென்ச் கோட்'. நாளடைவில் மக்களால் வரவேற்கப்பட்டு, தற்போது `ஃபேஷன் ஸ்டேட்மென்ட்' ஆகிவிட்டது. சாதாரண பேன்ட் ஷர்ட் உடையாகட்டும், ட்ரெண்டிலிருக்கும் `ஷார்ட் டிரெஸ்' உடைகளாகட்டும் ட்ரென்ச் கோட் பக்கா ஜோடி. எண்ணி பத்து பட்டன்கள், அகன்ற முன் மடிப்பு, இடுப்புப் பகுதியில் பெல்ட், முழுநீள கை இவைதான் ட்ரென்ச் கோட்டின் 1945-ம் ஆண்டின் அடையாளம். ஆனால் இப்போதோ, விதவிதமான நெக் டிசைன், பட்டன் டிசைன் என முற்றிலும் புதிய தோற்றத்தைத் தருகிறது. இரண்டாயிரம் ரூபாய் முதல் சந்தையில் கிடைக்கும் இந்த ட்ரென்ச் கோட், காட்டன், சிந்தடிக் வகைகளில் மட்டுமல்லாமல், `ரெயின்கோட்' வகையிலும் ஆக்கம் அதிகம்.

trench coat கோட்

பஃபர் ஜாக்கெட்: (Puffer Jacket) :
1990-களில் கலக்கு கலக்கு எனக் கலக்கிய பஃபர் ஜாக்கெட், மறுபடியும் உலா வந்துகொண்டிருக்கிறது. முன்பைவிட அதிக பஃப்களைக்கொண்டு இந்தக் குளிர்காலத்துக்கு இதமளிக்கும்விதமாக அமைந்திருக்கிறது. `எக்ஸ்ட்ரா பஃப் எக்ஸ்ட்ரா லாங்' என அதிக பஃப், நீளமான வடிவம், ஏராளமான வண்ணம்கொண்டு மார்க்கெட்டில் குவிந்துள்ளன. வழக்கமாக அணியப்படும் `கேஷுவல்' உடைகளை அணிந்து அதன் மேல் பஃபர் ஜாக்கெட்டை உடுத்தினால் முற்றிலும் புதிய தோற்றத்துக்கு சொந்தக்காரராகலாம். மேலும் அழகைக் கூட்ட, பூட்ஸ் (boots), ஹீல்ஸ் போன்றவற்றை அணிந்துகொள்ளலாம்.

Puffer jacket

டெனிம் ஜாக்கெட்:
டெனிம் ஜீன்களை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் டெனிம் ஜாக்கெட்களுக்கும் என்றைக்கும் வரவேற்பு அதிகம். மாடர்ன் உடைகளுடன் டெனிம் ஜாக்கெட் ட்ரெண்ட் செட் செய்கிறது. பாரம்பர்ய உடைகளுடன் இணையும்போது `கான்டெம்ப்ரரி' எனச் சொல்லப்படும் முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்பைத் தருகிறது. ஐந்நூறு ரூபாய் முதல் கடைகளில் கிடைக்கும் டெனிம் ஜாக்கெட்களை, எப்போதும் உங்கள் கையில் வைத்துக்கொள்ளுங்கள். ஃபிளீஸ், ஃபர் எனப் பல்வேறு டிசைன்களும் டெனிமுடன் இணைந்திருக்கின்றன. அதனால் அதிக வெரைட்டிஸ் அதிக ஆப்ஷன்ஸ். எந்த உடையாகட்டும் ஒரே ஒரு டெனிம் ஜாக்கெட் இருந்தால் போதும் குளிரையும் எதிர்த்திடலாம்; மற்றவர்களின் பார்வையையும் ஈர்த்திடலாம்.

Denim Jacket


ஃப்ளீஸ் லைன் ஜாக்கெட்: (fleece line jacket)
பஃபர், ஃபர் போன்ற ஜாக்கெட்கள் உங்களின் சாய்ஸ் இல்லையென்றால், உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டதுதான் ஃப்ளீஸ் லைன் ஜாக்கெட். நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணங்களில், மிகவும் எளிமையான டிசைன்களில் கிடைக்கும் ஃப்ளீஸ் லைன் ஜாக்கெட், மழைக்காலத்துக்குக் கிடைத்த கலக்கல் கவசம். மற்ற ஜாக்கெட்களைவிட குளிரைத் தாங்கும் வலிமை ஃப்ளீஸ் லைன் ஜாக்கெட்களுக்கு அதிகம். ஜிப்பர், பட்டன் போன்ற வகைகளில் வரும் இந்த வகை ஜாக்கெட், ஐந்நூறு ரூபாய் முதல் கிடைக்கிறது.

Fleece jacket

நாம் ரசித்து வாங்கிய உடைகள், அலமாரிக்கு அழகு சேர்ப்பதற்கல்ல. குளிர்காலம், கோடைக்காலம் எந்தக் காலமாக இருந்தாலும் பிடித்த ஆடைகளை இதுபோல் இணை ஆடைகளுடன் உடுத்தி தனித்தன்மையைக் காட்டிடுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!