வெளியிடப்பட்ட நேரம்: 19:28 (26/11/2017)

கடைசி தொடர்பு:19:28 (26/11/2017)

முதல் திருமணநாள் முடிந்துவிட்டதா... 'ஒன் இயர் இட்ச்' தவிர்க்க பர்சனல் டிப்ஸ்

திருமணம் ஆகி ஒருவருடம் ஆகிவிட்டதா உங்களுக்கு...பொதுவாக திருமண வாழ்க்கையில் 'அட என்ன வாழ்க்கை இது' என்கிற சலிப்புத் தட்ட ஏழு வருடங்களாகும் என்கிறது மருத்துவ உலகமும், சர்வேக்களும்.செவன் இயர் இட்ச் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் அதற்கு. ஆனால், இப்போது அந்த இட்ச் ஒருவருட திருமணம் முடிந்தவுடனேயே வந்துவிடுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். என்னாது ஒருவருஷமா என்று திருமணம் ஆகாதவர்கள் அதிர்ச்சி ஆவது தெரிகிறது. ஒன் இயர் இட்ச் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  அதைப் பற்றி பார்ப்போமா... 

திருமணம்

''முன்பெல்லாம் ஒரு திருமணத்தில் இரண்டு குடும்பங்கள் இணைகின்றன என்று உளவியல் ஆலோசகர்கள் சொல்லிவந்தார்கள். இப்போதோ, இரண்டு நபர்கள் ஒன்றிணைகிறார்கள் என்றுதான் சொல்கிறோம். அந்தளவுக்கு ஆண்களும் பெண்களும் இன்று தனித்து இருக்கிறார்கள். இரண்டு வெவ்வேறு தனித்தன்மைகள் ஒன்று சேரும்போது, ஒரு வருடம் வரை காதலாக பார்க்கப்படுகிற அம்சங்கள், பிறகு பிடிக்காமல் போகின்றன. உதாரணமாக... திருமணத்துக்கு முன்பு ஒரு பெண்ணின் புத்தக வாசிப்பு/ இணைய வாசிப்பு போன்றவை காதலனால் பெருமையாகப் பார்க்கப்படுகிறது. கணவனான பிறகோ, 'எப்பவும் புத்தகத்திலேயே/போனிலேயே இருக்கியே' என்று எரிச்சலாக மாறுகிறது. இன்னும் சிம்பிளாக சொல்வதென்றால், திருமணத்துக்கு முன்பு சில்லறையைக் கொட்டியது போன்ற காதலியின் சிரிப்பு, பின்னாளில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. அதாவது, 'ஒன் இயர் இட்ச்' வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். இந்த விஷயங்களை மனைவிக்கும் அப்ளை பண்ணலாம். சம்பவங்கள்தான் சற்று மாறும். 

'ஒன் இயர் இட்ச்' வருவது ஒரு குடும்ப அமைப்புக்கு நல்லதல்ல. தம்பதிகளிடையே செக்ஸுவல் லைஃபும் நட்பும் வலிமையாக இருந்தாலே இதைத் தவிர்க்கலாம்'' என்கிறார் உளவியல் நிபுணர், அசோகன். 

தாம்பத்தியம்

கணவன் மனைவிக்கு இடையேயான நட்பை வலிமைப்படுத்தும் வழிகள்... 

1. இருவரும் வெளிப்படையாக இருங்கள். நூறு சதவிகிதம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், 'இன்று நண்பனுடன் லன்ச் சாப்பிட போனேன்' என்பதுவரை சொல்லலாம். அங்கே நண்பருடன் பேசியதெல்லாம் ஒப்புவிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த வெளிப்படைத்தன்மை, 'என் துணை எனக்குத் தெரியாமல் எதுவும் செய்யமாட்டார்' என்ற கர்வத்தை ஏற்படுத்தும். இந்த கர்வ உணர்வு, தாம்பத்தியத்தில் சலிப்பு தட்டாமல் பார்த்துக்கொள்ளும். 

2. உங்களுடைய சின்னச் சின்ன தவறுகளை உங்கள் வாழ்க்கைத் துணையிடம் மறைக்க வேண்டாம். நீங்கள் மறந்துவிட்டதைக் கணவன்/ மனைவி சுட்டிக்காட்டினால், ஒப்புக்கொள்ளுங்கள். பரஸ்பரம் ஒரு மரியாதை உருவாகும். தன் துணை மீது இந்த மரியாதை உணர்வு வரும்போது, உடம்பில் சிலிர்ப்பு ஒன்று வரும். இதுபோதும் சலிப்பை தூக்கித் தூர எறிய. 

3. ஃப்ரெண்ட்ஸ் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் அதை லைட்டாக எடுத்துக்கொள்வோம் இல்லையா? இதே உணர்வை வாழ்க்கைத் துணையிடமும் அப்ளை பண்ணிப் பாருங்கள். ரிசல்ட் செம பாசிட்டிவாக இருக்கும். 

தாம்பத்தியம்

4. பெண்கள் தங்களின் தனித்துவத்தை நிரூபிக்க களமிறங்கியிருக்கும் காலம் இது. அதன் விளைவாகப் பேச்சில், செயலில் வேகம் அதிகமாக இருக்கும்தான். இதன் பெயர் தன்னம்பிக்கை. இது, உங்கள் மனைவியிடம் இருந்தால் பாராட்டுங்கள். இந்தப் பாராட்டின் ரசவாதம் உங்கள் தாம்பத்தியத்தில் எதிரொலிக்கும். 

5. கணவர்களுக்கு ஒரு விஷயம்... காலங்காலமாக நீங்கள் பெண்களை அடக்கி ஆண்ட குணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். நல்ல தாம்பத்தியத்துக்கு இது எப்போதும் எதிரிதான். 

6. ஒருவரையொருவர் சார்ந்து இருங்கள். அதற்காக, பக்கத்துத் தெரு கடைக்குச் செல்ல துணை வேண்டும் என்பதில்லை. 'நீயில்லாமல் நான் இல்லை' என்ற உணர்வில் மிகப்பெரிய காதல் இருக்கிறது. அதை அனுபவித்தால், தாம்பத்தியத்தில் எந்தச் சலிப்பும் வராது. 

தாம்பத்தியம்

7. ஆங்கிலத்தில் 'ஸ்வீட் நத்திங்' என்பார்கள். அதாவது, உங்கள் இருவருடைய சின்னச் சின்ன ரசனைகளையும் பரிமாறிக்கொள்ளுங்கள். மழை நேரத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது முதல் இளையராஜா இசை வரை ரசனைகளைச் சேர்ந்து அனுபவியுங்கள். சினிமா, இசைக் கச்சேரி என்று தம்பதியாகச் செல்லுங்கள். 

இனி தாம்பத்யத்தை வலிமைப்படுத்துவதற்கான வழிகள்... 

1. தாம்பத்யத்தில் சலிப்பு வராமல் தடுப்பதில், செக்ஸுக்கு முக்கிய இடம் இருக்கிறது. ஒரே மாதிரி இல்லாமல் விதவிதமாக ட்ரை பண்ணுங்கள். அதில் தவறே இல்லை. 

2. உறவு நேரத்தில் உங்கள் துணையின் உணர்வுகளைப் புரிந்து செயல்படுங்கள். உங்களுக்குப் பிடித்த ஒரு நிலை, உங்கள் துணைக்குப் பிடிக்காவிட்டால் தவிர்த்துவிடுங்கள். அல்லது உங்கள் ஆசையை நாசுக்காக உங்கள் துணையிடம் சொல்லுங்கள். 

3. பொதுவாக, சாப்பாட்டின் மேல் கோபம் காட்டக்கூடாது என்பார்கள். தாம்பத்ய உறவிலும் கோபம் தவிர்க்க வேண்டும். வேறு ஏதோ கோபத்தை மனதில்வைத்து, படுக்கையில் காட்டக்கூடாது. இது நிறையப் பெண்களிடம் இயல்பாக இருக்கும் குணம். கணவன் மீதான கோபத்தை, அது எந்த விஷயம் சம்பந்தப்பட்டதோ அதில் நேரடியாகச் சொல்லி கோபப்படுங்கள். மாறாக, படுக்கையறையில் காட்டாதீர்கள். 

4. 'வார இறுதியில்தான் செக்ஸ்' என்று தீர்மானித்துவிட்டார்கள் இன்றைய வேலைக்குப் போகும் தம்பதியினர். உணர்வுரீதியாக இது சரியல்ல. பசி வரும் நேரத்தில் சாப்பிடுவதுபோல உணர்வு வரும் நேரத்தில் உறவுகொள்வது காதலை அதிகப்படுத்தும். 

தாம்பத்தியம்

5. தாம்பத்ய நேரத்தில் குளித்து சுத்தமாக இருப்பது, பல் துலக்குவது மிகவும் முக்கியம். 'ஒன் இயர் இட்சி'ல் இவைதான் முதலில் நிற்கும். 

மேலே சொன்ன விஷயங்களில் கோட்டை விடும்போதுதான், திருமணப் பந்தத்தில் மூன்றாவது நபர் நுழைகிறார். கடைசியாக ஒரு விஷயம், திருமணமாகி 15 வருடங்கள் கழித்துதான் ஒரு தம்பதிகளுக்குள் பரஸ்பரம் ஈர்ப்பு அதிகமாகும். இது உளவியல் உண்மை. பிள்ளைகள் வளர்ந்திருப்பார்கள். அவர்கள் வேலையை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். தம்பதியருக்கு 'அக்கடா' என்ற உணர்வு வரும். மறந்துபோன காதல் ஊற்றெடுக்கும். இதை மனதில் வைத்து வாழ்க்கைத் துணையைக் காதலித்தால், எந்தச் சலிப்பும் தட்டாது. 


டிரெண்டிங் @ விகடன்