வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (29/11/2017)

கடைசி தொடர்பு:14:52 (29/11/2017)

தங்கம் வாங்கும் முன் யோசிக்க வேண்டிய விஷயங்கள்!

தொலைக்காட்சி விளம்பரங்களில் இப்போது முன்னணியில் இருப்பவை, தங்கம் அடகு வைக்கும் அல்லது விற்கும் கம்பெனிகளின் விளம்பரங்கள்தான். இதுவரை இல்லாமல் இப்போது திடீரென வரிந்துகட்டிக்கொண்டு இந்த விளம்பரங்கள் வந்திருப்பதன் காரணம் ஒருபக்கம் இருக்க, தங்கத்தை வாங்கி, பின்னர் அதைப் பணமாக்கும் விதத்தில் நாம் முக்கியமான சில விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது.

தங்கம்

ஆண்டாண்டு காலமாக தங்கம்தான் பெரும்பாலானோரின் முதலீடாக இருந்துவருகிறது. இதற்குக் காரணம் அழகு, அந்தஸ்து மற்றும் திருமணம் ஆகிய மூன்றையும் சொல்லலாம். அதுபோக, எப்போது வேண்டுமானாலும் கையில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து நமக்குத் தேவையான பணத்தைத் திரட்டிக்கொள்ள முடியும் என்பதும் ஒரு முக்கியக் காரணம். 

பெரும்பாலும் தங்கம் முதலீடாகப் பார்க்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. தங்கம், பயன்பாட்டுக்கானதாக மட்டுமே இருந்துவருகிறது. எளிதில் தங்கத்தை விற்றுப் பணமாக்கலாம் என்பது மட்டும்தான் அதில் இருக்கும் ஒரே ப்ளஸ். எனவே, தங்கத்தில் பணம் போடும்போது அதை எதற்காகச் செய்கிறோம் என்பதை நன்றாக யோசித்து செய்யவேண்டும்.

தங்கத்தைப் பொறுத்தவரை, இப்போது சந்தையில் தங்க நகைகள், தங்க நகைச் சீட்டு, தங்கப் பத்திரங்கள், கோல்டு ஃபண்டுகள் மற்றும் தங்கப் பங்குகள் எனப் பல்வேறு வகைகளில் முதலீடு செய்யலாம். தங்க நகைகளை வாங்கும்போது அவற்றை எதற்காக வாங்குகிறோம், அந்த நகை அவசியம்தானா என்பதையும் பார்க்க வேண்டும். தங்க நகையை வாங்கி வீட்டில் பூட்டிவைத்துவிட்டு எப்போதாவது போடுவதாக இருந்தால், தங்க நகைகளை வாங்குவதைத் தவிர்க்கலாம். விலை உயர்ந்த தங்க நகைகளை வெளியே போட்டுச் செல்லவும் முடிவதில்லை. 

மேலும், பழைய நகைகளை அடிக்கடி மாற்றி புதிய நகைகளை வாங்குவதையும் தவிர்க்கலாம். ஏனெனில், இன்று வாங்கி நாளைக்கே தங்க நகையை மாற்றினாலும் நாம் வாங்கும்போது கொடுத்த விலையைத் தர மாட்டார்கள். செய்கூலி, சேதாரமும் கணக்கில் வராது. நகையை அடிக்கடி மாற்றுவது, விற்பது பெரும் நஷ்டத்தையே கொடுக்கும். தேவையான அளவில் மட்டும் தங்கத்தை வாங்கிக்கொள்ளலாம்.

நகைச் சீட்டு மூலம் சேமித்து தங்க நகைகளை வாங்கும் திட்டங்களில், பெரும்பாலும் நடுத்தரவர்க்க மக்கள்தான் முதலீடு செய்கிறார்கள். இதில் நூறு ரூபாய் செலுத்தியும் சேமிக்கலாம் என்பதுதான் காரணம். ஆனால், பல நேரங்களில் இந்தத் திட்டங்களில் தொடர்ந்து பணத்தைச் செலுத்த முடியாமல்தான் இருக்கிறார்கள். அப்படி தொடர்ந்து கட்ட முடியாதவர்களுக்கு, இதனால் கிடைக்கும் பலன் என்று எதுவும் இல்லை. 

தொடர்ந்து கட்ட முடிந்தால் செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகைகளை வாங்கிக்கொள்ளலாம். நகை வாங்க விரும்புபவர்கள், திருமணம், அன்பளிப்பு மற்றும் சீர் போன்ற காரணங்களுக்காகத் தங்க நகைகள் தேவையாக இருப்பவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டு ஓராண்டுக்கு முன்பே நகைச் சீட்டு மூலம் சேமித்து, நகைகளை வாங்கலாம். ஆனால், நகைச் சீட்டு போடும் முன் அந்த நிறுவனம் பற்றித் தெரிந்துகொண்டு போடுவது நல்லது. நன்கு பரிச்சயமான, பாரம்பர்யம்கொண்ட நேர்மையான நகைக் கடைகளில் நகைச் சீட்டு போடலாம்.  

தங்க நகைகளை எளிதில் பணமாக்கலாம் என்பதால், அதிகம் திருடப்படும் பட்டியலில் தங்கத்துக்குத்தான் எப்போதும் முதல் இடம். தங்கத்தில் முதலீடு செய்ய, தங்க நகைகளைத்தான் வாங்க வேண்டும் என்றில்லை... மாறாக தங்கப் பத்திரங்களிலும், கோல்டு ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். தங்கத்தை மேலும் மேலும் அதிகமாக இறக்குமதி செய்துவருகிறோம். இதனால் நாட்டின் பல்வேறு காரணங்களுக்காகப் புழக்கத்தில் இருக்கவேண்டிய பணம் தங்கமாக முடங்கிப்போய்விடுகிறது. தங்கத்தின் மீதான மோகத்தைக் குறைக்க, அரசே தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது. தங்கமாக வாங்கி வைப்பதில் லாபம் பெரிய அளவில் இல்லை. ஆனால், தங்கப் பத்திரங்களில் கணிசமான லாபத்தை நம்மால் பெற முடியும். எனவே, தங்கத்தில் பணம் போடும் முன் யோசித்துச் செயல்படவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்