வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (08/01/2018)

கடைசி தொடர்பு:16:46 (08/01/2018)

டூவீலரில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோரின் கவனத்துக்கு 10 விஷயங்கள்

வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளைச் சேர்ப்பது என்பது, இப்போதெல்லாம் மழை வருவது போன்ற அரிதான விஷயம். ஃபேமஸான ஸ்கூல், பெஸ்ட் எஜுகேஷன் என்று தேடித் தேடி, தொலைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஓடுகிறோம். விளைவு, நம் பெற்றோர்கள் கைப்பிடித்து பொடிநடையாக அழைத்துச்சென்று நம்மை பள்ளியில்விட்டதுபோல நம் பிள்ளைகளை விடமுடிவதில்லை. பள்ளிப் பேருந்து தவிர்த்து, டூவீலரில்தான் பயணம். இன்றைக்குப் பல பள்ளிக்கூடங்கள் காலை எட்டு மணிக்கே ஆரம்பித்துவிடுகின்றன. எனவே, ஸ்பீட் பிரேக்கரில்கூட ஸ்பீடாகத்தான் பறக்கிறார்கள் அப்பாக்களும் அம்மாக்களும். சில நேரங்களில் தாத்தாக்களும் பாட்டிகளும்கூட. இப்படி, டூவிலரில் குழந்தைகளை அழைத்துச்செல்லும்போது நடக்கும் ஆபத்துகளைத் தடுக்கும் 10 விஷயங்கள் பற்றி தெரிந்துகொள்வோமே! 

ஆட்டோமெட்டிக் கியர் வண்டிகளையே அதிகம் பயன்படுத்துகிறோம். வண்டி சிக்னலில் நிற்கும்போது, பிள்ளைகள் வண்டியின் முன்பக்கம் இருக்கும்பட்சத்தில், ஆக்ஸிலேட்டரை சட்டென முறுக்கிவிட்டாலும் அவ்வளவுதான். ஸோ, சிக்னலில் நிற்கும்போது, பிரேக்கில் இருக்கும் உங்கள் கை இரண்டு மடங்கு கவனமாக இருக்கட்டும். அச்சமயத்தில் உங்கள் மேலதிகாரியின் போனே வந்தாலும் எடுக்க வேண்டாம்! 

டூவீலரில் சைலன்சர் வலது பக்கம்தான் இருக்கும். வேகவேகமாக பள்ளி வளாகத்தை அடைந்து, குழந்தைகளை வண்டியிலிருந்து இறக்கும்போது வலது பக்கமே இறக்குவோம். இந்த நேரத்தில் சூடான லைசென்சர் குழந்தைகளின் காலில் படுவதற்கு வாய்ப்புண்டு. எனவே, பதற்றம் தவிர்த்து கவனம் செலுத்துங்கள். 

காத்தாடியின் மாஞ்சா நூலால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் குழந்தைகள்தாம். காரணம், குழந்தைகள் வண்டியின் முன்னால் உட்கார்ந்திருப்பார்கள். ஸோ, காத்தாடி விடும் சீசனில் ஸ்கூலுக்கு அழைத்துச்செல்லும்போது வழியில் மிக மிக கவனமாக இருங்கள். முடிந்தவரை பிள்ளைகளை பின்னால் உட்காரவைத்து அழைத்துச்செல்லுங்கள். குழந்தையின் கழுத்தில் ஒரு துணியை மென்மையாகச் சுற்றிவிடுங்கள். இதுபோன்ற விபத்துகள் பெரும்பாலும், பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துவரும் மாலை நேரத்தில் நடக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

இன்றைய நகரச் சூழ்நிலையில் மாசுபட்ட காற்று, தூசிகளே நம்மைச் சுற்றியுள்ளன. இது, நம்மைவிடக் குழந்தைகளுக்கு அதிக உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, மாஸ்க் அணிவிக்காமல் பிள்ளைகளைப் பள்ளிக்கு மட்டுமல்ல, வெளியே எங்கும் அழைத்துச்செல்லாதீர்கள். 

பிள்ளைகளுடன் டூவீலரில் செல்லும்போது, கண்டிப்பாக சிக்னலை மதித்து நடங்கள். இது, விபத்துகளை தவிர்க்க மட்டுமல்ல, ஒழுக்கத்தை கற்றுத்தரவும்தான். நம்மைப் பார்த்துத்தான் நம் வாரிசுகள் வளர்கிறார்கள். 

பிள்ளைகளுடன் செல்லும்போது நோ ஹார்ஷ் டிரைவிங். அதிலும், மழைக்காலத்தில் வேகமாகச் சென்று ஸ்கிட்டாகி கீழே விழுந்தால்... யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறதல்லவா? 

வண்டியை ஓட்டும்போது போனில் பேசாதீர்கள் என்று எத்தனை விளம்பர போர்டுகள் வைத்தாலும், பெரும்பாலானோர் மதிப்பதில்லை. இதிலும் உங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பேசுங்கள். 

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் போட்டு அழைத்துச்செல்வது மிக நல்லது. தினமும் கொஞ்ச நேரம் மட்டுமே ஹெல்மெட் போடுவதால், அவர்களுக்கு முடியெல்லாம் கொட்டாது. 

சைடு ஸ்டாண்ட் போட்டு பிள்ளையை உட்காரவைத்துவிட்டு, கடைக்குச் செல்வதோ, யாரையாவது பார்க்கச் செல்வதோ கூடாது. குழந்தை திடீரென சரிந்துவிழுந்தால் என்ன ஆகும் என நினைத்துப் பாருங்கள். 

பிள்ளைகள் கேட்கிறார்களே என அவர்களின் கையில் ஆக்சிலேட்டரைக் கொடுத்து வண்டியை ஓட்ட விடாதீர்கள். கொஞ்சம் கவனம் தப்பினாலும் உயிருக்கே ஆபத்தாகிவிடும் ஜாக்கிரதை. 

கடைசியாக ஒரு விஷயம். கைக்குழந்தைகளை டவலில் சுற்றி கையில் வைத்துக்கொண்டு, பைக்கில் ஒரு பக்கமாக உட்கார்ந்து சென்றாலும் வழுக்காது. ஏனென்றால், காட்டன் டவல் குழந்தையின் உடலுடன் ஒட்டியிருப்பதால் கையில் வைத்துக்கொள்வதில் பிடிமானம் கிடைக்கும். ஆனால், நைலான் துணியால் பவுச்போல் தைக்கப்பட்ட ரேப்பரில் கைக்குழந்தைகளைச் சுற்றி எடுத்துச் செல்கிறார்கள். இந்த நைலான் ரேப்பர் வழுக்கும். இப்படிக் கைக்குழந்தைகளை எடுத்துச்செல்லும்போது, இரண்டு பக்கமும் கால்களைப் போட்டு உட்காருவதே பாதுகாப்பு. புடைவை கட்டிக்கொண்டு கைக்குழந்தை தூக்கிச்செல்கிறீர்கள் என்றால், டவலில் சுற்றி எடுத்துச்செல்வதே நல்லது. 


டிரெண்டிங் @ விகடன்