வெளியிடப்பட்ட நேரம்: 11:33 (28/01/2018)

கடைசி தொடர்பு:17:41 (02/02/2018)

பாலும் அசைவம்தான்... சென்னையில் பரவிவரும் வீகனிசம்!

Eco பிராண்ட்களின் சங்கமம் ஜனவரி 21-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான `வீகன்' பொருள்கள் மக்களின் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டன. ``வீகன் என்றால் முட்டை, மாமிசம் போன்றவற்றை உட்கொள்ளாத வெஜிடேரியன் மட்டுமல்ல, பால் வகைகளையும் தவிர்த்து உண்ணும் `Ethical Vegan' நாங்கள்" என்கிறார் இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர் கேஷா. உணவுப்பொருள்களில் மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் டிரெஸ் முதல் ஷூ வரை அனைத்திலும் வீகனிசம் (Veganism) உள்ளது என்பதை இந்த `வின்டர் ஃபாலி (Winter Folly) நிகழ்வு உணர்த்தியது.

வீகனிசம்


``ஷூ என்றதும் நினைவுக்குவருவது லெதர் ஷூதான். விலங்குகளின் தோலிருந்து தயாரிப்பதே லெதர் பொருள்கள். வீகன், இந்த லெதர் ஷூகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மைக்ரோ ஃபைபர்கொண்டு (Micro Fibre) தயார்செய்யப்படும் இந்த ஷூ, Biomimicry எனும் முறைகொண்டு தயாரிக்கப்படுகிறது. எனவே, இது பார்ப்பதற்கு அசல் லெதர் ஷூவைப் போலவே காட்சியளிக்கும். அதுமட்டுமல்லாமல், மூன்று மடங்கு லெதர் ஷூக்களைவிட இது வலுவானது; வாட்டர் ரெஸிஸ்டன்ட் உடையது'' என வீகன் ஷூ உற்பத்தியாளர் மயாங்க் கூறுகிறார்.

வீகன் ஷு

``முற்றிலும் இயற்கைப் பொருள்களைக்கொண்டு தயார்செய்த இந்த சானிட்டரி நாப்கின் துவைக்கக்கூடியதும்கூட" என்கிறார் வீகன் நாப்கின்களைத் தயாரிக்கும் க்ரிப்பா. பல ரசாயனங்கள்கொண்டு தயாரிக்கப்படும் நாப்கின்கள், சந்தையில் ஏராளம். அதைப் பயன்படுத்துவதால் பல நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது. இதற்கிடையே காட்டன் போன்ற இயற்கைப் பொருள்களை மட்டும் கொண்டு தயாரித்த இந்த சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்திய பிறகு, துவைத்து சூரிய ஒளியில் காயவைத்து மறுமுறை பயன்படுத்திக்கொள்ளலாம். அந்தக் காலத்தில் பின்பற்றிய முறைதான் என்றாலும், இது முற்றிலும் சுகாதாரமானது. இரவு, காலை என தேவைக்கு ஏற்ப இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

வீகன் நாப்கின்

ஐஸ்க்ரீம் என்றாலே பாலில் தயாராகும் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், வீகன் ஐஸ்க்ரீமில் இயற்கையான முறையில் கிடைக்கும் பாலை உபயோகிப்பதில்லை. சோயா அல்லது தேங்காய்ப்பால்கொண்டு ஐஸ்க்ரீம்களைத் தயார்செய்கிறார்கள். ஸ்டிராபெர்ரி, பட்டர்ஸ்காட்ச், சாக்லெட், மாம்பழம் முதலிய ஃபிளேவர்களைக்கொண்டிருக்கும் இந்த எத்திக் வீகன் ஐஸ்க்ரீம் சிலவற்றில், கூடுதல் சர்க்கரை ஏதும் இல்லாமல் பழங்களின் சர்க்கரை மட்டுமே உள்ளது.

வீகன் ஐஸ் க்ரீம்

எத்திக் வீகன் ஐஸ்க்ரீம்போலவே சீஸ் (Cheese), பட்டர் வகைகளும் பால் இல்லாமல் தயாரிக்கிறார்கள். முந்திரி, கொழுப்பிலிருந்து தயாராகிறது. இந்த எத்திக் வீகன் சீஸ், மோசரெல்லா, கார்லிக், சில்லி ஆகிய ஃபிளேவர்களில் கிடைக்கும். தேங்காய்ப்பாலில் இருந்து பட்டர் தயாரிக்கப்படுகிறது. இது முற்றிலும் கொலஸ்ட்ரால் ஃப்ரீ பட்டர். ``நாச்சுரல், கார்லிக், பெப்பர், பெரி-பெரி, பேசில் ஆகிய ஃபிளேவர்களில் வரும் இந்த பட்டர், நான் வீகன்களுக்கும் ஃபேவரைட்" என்று கூறுகிறார் வீகன் பட்டர் தயாரிப்பாளர் தர்ஷினி.

வீகன் பட்டர்

``வீகனாக மாற நினைப்பவர்களுக்கு இது சிறந்த களம். பால், சீஸ், பட்டர் போன்றவற்றுக்கு மாற்றீடு செய்யும்விதமாக ஏராளமான சாய்ஸ் உள்ளன. பாக் (Bag) மற்றும் வாலெட்களை (Wallet) `கார்க்' ஃபேப்ரிக்கொண்டு தயார்செய்கிறோம். மரப்பட்டையிலிருந்து தயாராவதுதான் கார்க். அதனால் இது முற்றிலும் வீகன் பொருள். மேலும் இதுபோன்ற பொருள்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது" என்று கூறி பூரிக்கிறார் வீகன் பேக் தயாரிப்பாளர் கேஷா.

வீகன் வாலெட்ஸ்

உணவு மற்றும் ஆடம்பரப் பொருள்களில் மட்டுமல்ல, சமைக்கும் பாத்திரத்திலும் வீகனிசம் உள்ளது என்கிறது களிமண் பொருள்களை கலைநயத்துடன் விற்கும் வீகன் கிட்சன்வேர். முற்றிலும் களிமண்ணால் தயாரித்த சமையல் பொருள்கள்.

வீகன் வாட்டர்பாட்டில்

இயற்கைச் சாயங்களால் டிசைன் செய்யப்பட்டிருக்கும் அத்தனை மண்பொருள்களும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. இங்கே தண்ணீர்பாட்டில் முதல் அத்தனை பொருள்களும் எத்திக் வீகன் பொருள்களே!


டிரெண்டிங் @ விகடன்