குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படும் நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! - அவசியம் தேவை விழிப்புஉணர்வு! #InternationalChildhoodCancerDay | Ramanadhan, Who Works For Cancer Patients speaks about International Childhood Cancer Day 

வெளியிடப்பட்ட நேரம்: 08:27 (15/02/2018)

கடைசி தொடர்பு:10:26 (15/02/2018)

குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படும் நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! - அவசியம் தேவை விழிப்புஉணர்வு! #InternationalChildhoodCancerDay

`வ்வொரு வருடமும் 40,000 குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்’ என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று. 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இன்னோர் ஆய்வு, `குழந்தைகள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படும் நகரங்களில் இந்தியாவிலேயே சென்னைக்குத்தான் முதலிடம்’ என்று சொல்லி அதிரவைக்கிறது. குழந்தைகள் புற்றுநோயைச் சரிசெய்வது பெரிய சவால். ஆனால், ``குழந்தைகளுக்கு வர்ற புற்றுநோய் பாதிப்புகளில் முக்கியமானது ரத்தப் புற்றுநோய். சரியான நேரத்துல அதைக் கண்டுபிடிச்சுட்டா பாதிக்கப்பட்ட 80 சதவிகிதம் பேரை முழுமையா குணப்படுத்திடலாம்’’ என நம்பிக்கை கொடுக்கிறார் ரத்தப் புற்றுநோய் நிபுணர் இராமநாதன் ஜெயராமன். இவர், புற்றுநோய் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காகவே `வசந்தா மெமோரியல் ட்ரஸ்ட்’ (Vasantha Memorial Trust) என்ற அமைப்பையும் ஆரம்பித்து, நிர்வகித்துவருகிறார்.

 புற்றுநோய்

மது, புகை போன்ற தீய பழக்கங்களின் வாடையே அறிந்திடாத சின்னஞ்சிறு குழந்தைகளும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மரபு வழியான பிரச்னைகள், உடல் பருமன், ஜங் ஃபுட்ஸ், வாழ்வியல் மாற்றங்கள்கூட குழந்தைக்குக் புற்றுநோய் ஏற்படக் காரணமாகலாம். புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நமக்குள் எழும் பிம்பங்கள் அனைத்தும் சோகப் பக்கங்களே. ரத்த வாந்தி, கீமோதெரபி, ரேடியேஷன், வறட்டு இருமல், முடி உதிர்வு... என நம் சினிமாக்கள் சித்திரித்ததையெல்லாம் நம்மில் பலர் உண்மை என நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் எத்தனையோ பேர் புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த கதைகளும் இங்கே இருக்கின்றன.

மருத்துவர் இராமநாதன் ஜெயராமன்

புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த ராதிகா சந்தானகிருஷ்ணன் 'புற்றுநோயிலிருந்து மீண்டவர்களைவிடவும், அது பற்றி விழிப்புஉணர்வில்லாமல் இறந்தவர்கள் அதிகம்' எனக் கூறியிருக்கிறார். புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பல தன்னார்வ அமைப்புகள், ஏராளமான விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இராமநாதனின் அமைப்பு கடந்த 24 வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது. "24 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு ஆறு வயசுப் பெண் குழந்தை ரத்தப் புற்றுநோய் பாதிப்போட எங்ககிட்ட வந்துச்சு. ரொம்பப் போராடி, அந்தக் குழந்தையைக் காப்பாத்தினோம். அந்தக் குழந்தையோட சேர்ந்து, இப்படிப் பல குழந்தைகளைக் காப்பாத்த முடியும்கிற எங்க நம்பிக்கையும் வளர ஆரம்பிச்சுது. இப்போ, அந்தக் குழந்தை வளர்ந்து, திருமணமாகி, அவங்களுக்கே ஒரு குழந்தை இருக்கு... அது தனிக்கதை! குழந்தைங்க சந்தோஷம், அவங்களோட வாழ்க்கைக்கு முன்னால பணம் பெரிய விஷயமே இல்லைனு அப்போதான் எங்களுக்கு அழுத்தமாப் புரிஞ்சுது.

புற்றுநோய்

என்னோட அம்மா பேரு வசந்தா. சாதாரண மிடில் க்ளாஸ் ஃபேமிலி. சின்னக் குடும்பம். எல்லாம் சந்தோஷமாப் போய்கிட்டிருந்தப்போதான், ஒருநாள்  அம்மாவுக்குப் புற்றுநோய் இருக்குறது தெரியவந்துது. இது நடந்தது 20 வருஷத்துக்கு முன்னாடி... அன்னைக்கு இருந்த சூழல்ல அம்மாவை எங்களால காப்பாத்த முடியலை. அம்மா இறந்துட்டாங்க. இது மாதிரி இன்னோர் உயிர் போகக் கூடாதுனு முடிவு செஞ்சோம். 'புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை அளிக்கணும், விழிப்புஉணர்வு கேம்ப் நடத்தணும்'-ங்கிறது எங்க லட்சியமா இருந்தது. எங்க பணியை 1993-ல ஆரம்பிச்சோம். நாங்க இந்த ட்ரஸ்ட்டை ஆரம்பிச்சப்போ, நிலைமை வேற மாதிரி இருந்துச்சு. புற்றுநோய் பத்திப் பேசவேவிட மாட்டாங்க. குழந்தைக்கு கேன்சர் வந்தா, 'என்ன சிகிச்சை கொடுத்தாலும் கேன்சரை குணப்படுத்த முடியாது. என் குழந்தை கண்டிப்பா இறந்துடும்'னு சொல்வாங்க. ஒரே சோகமயமாகி, சிகிச்சையே எடுக்காத குடும்பங்களை நாங்க பார்த்திருக்கோம். ஆனா, இன்னைக்கு புற்றுநோய் பத்தி நிறையப் பேர் பேசறாங்க, சிகிச்சை இருக்குங்கிறதைப் புரிஞ்சிக்கிறாங்க. விழிப்புஉணர்வு ரொம்ப அதிகரிச்சுக்கு. இந்தப் புரிதல்தான் எத்தனையோ உயிர்களைக் காப்பாத்த எங்களுக்கு உதவியா இருந்திருக்கு, இருக்கு..!" என்று புன்னகைக்கிறார்.

பெற்றோர் - குழந்தைகள்

தன்னுடைய அமைப்பு சார்பாக, பல பள்ளிகளுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் புற்றுநோய் வராமல் தடுக்க என்னவெல்லாம் செய்யலாம், எந்த உணவுகளையெல்லாம் தவிர்க்க வேண்டும், அறிகுறிகள் என்னென்ன... என்பது பற்றிய தகவல்களையெல்லாம் பகிர்ந்துவருகிறார் இராமநாதன். அதோடு, பெற்றோருக்கான சில குழந்தை வளர்ப்பு பயிற்சிகளையும் அளித்துவருகிறார். ''குழந்தைகள் புற்றுநோயைச் சரிசெய்வதில் பெரிய சவால், குழந்தைங்க ஹாஸ்பிட்டல்ல தங்க விரும்ப மாட்டாங்க. அதனால வாரத்துக்கு மூணு நாள் இங்கே வந்தா போதும்னு சொல்லிடுவோம். ஏன்னா, உடல்ரீதியா அவங்களுக்கு இருக்குற பிரச்னை போதாதுனு உளவியல்ரீதியாவும் அவங்க பாதிக்கப்பட்டுடுவாங்க. அவங்களோட வீடும், அவங்களுக்கு ஆதரவு காட்டுற அன்பான மனுஷங்களும்தான் புற்றுநோயைத் தீர்க்குற முக்கியமான மருந்து. ஆறு மாசம் அல்லது ஒரு வருஷம் கழிச்சு அவங்க ஸ்கூலுக்குப் போகும்போது, தன்னை மத்தவங்க பரிதாபமாகப் பார்க்காம இயல்பாகப் பார்க்கணும்னு எதிர்ப்பார்ப்பாங்க. எங்ககிட்ட வரும் ஒரு குழந்தையை உளவியல்ரீதியாக சந்தோஷமான ஒரு வாழ்க்கைக்குள்ள அனுப்புறதுங்கிறது எங்களுக்கு மறுபிறவி மாதிரி! அப்படி குணமாகிப் போய், இப்போ மகிழ்ச்சியா வாழுற குழந்தைகளை நினைச்சாலே எங்களுக்குப் புத்துணர்வு கிடைச்ச மாதிரி ஆகிடும். சில வருடங்களுக்கு முன்னால, ஒரு 15 வயசுப் பொண்ணு, ரத்தப் புற்றுநோய்னு எங்ககிட்ட சிகிச்சைக்கு வந்திருந்துச்சு. ஒரு வருஷத்துல குணப்படுத்திட்டோம். அந்தப் பொண்ணு வெளி உலகத்தைப் பார்க்கறதுக்கே பயந்தது. இன்னைக்கு, லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கு. `வாழ்க்கை ரொம்ப அழகானது’னு அந்தப் பொண்ணு மாதிரி குணமான குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் தோணும்" புற்றுநோயோடு போராடி, எதிர்காலம் குறித்தக் கவலையோடும் பயத்தோடும் வருபவர்களை அரவணைப்பதும், அவர்கள் வாழ்க்கையை அழகாகவும் அற்புதமாகவும் மாற்றுவதும்கூட மகத்தான சேவைதான்!

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்