உங்கள் அலமாரியில் இருந்தே ஆக வேண்டிய எந்த சீஸனுக்கும் பொருந்தும் உடைகள்..! #TimeslessFashion | Five mandatory things you must have in your wardrobe

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (06/03/2018)

கடைசி தொடர்பு:11:02 (07/03/2018)

உங்கள் அலமாரியில் இருந்தே ஆக வேண்டிய எந்த சீஸனுக்கும் பொருந்தும் உடைகள்..! #TimeslessFashion

தலையில் அணியும் க்ளிப் முதல் கால்களில் அணியும் காலணி வரை அனைத்தும் அந்தந்த வடிவமைப்பாளர்களால் காலத்துக்கு ஏற்ப டிசைன் செய்யப்படுகின்றன. இது, பிரபலங்கள் மூலம் பொதுமக்களிடம் சென்றடைந்து, பெரும்பாலான மக்களால் ஈர்க்கப்பட்டு `ஃபேஷன்' என்றாகிறது. `ஃபேஷன்', நிலையானதல்ல; அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். அதை `FAD' எனும் `குறுகியகால ஃபேஷன்' எனலாம். ஆனால், என்றைக்கும் மாறாத ஃபேஷன் ஒன்று உள்ளது. அதுதான் `Timeless Fashion'. டைம்லெஸ் ஃபேஷன் பொருள்களை உங்கள் அலமாரியில் நிறைத்திருந்தால், ட்ரெண்டி லுக் எந்தக் காலத்திலும் நிச்சயம் உங்களுடையதே!

ஃபேஷன்


ஜீன்ஸ்:

ஃபேஷன் என்பது, மினுமினுக்கும் ஆடைகளோ அரைகுறை ஆடைகளோ அல்ல; ஏற்கெனவே உபயோகத்தில் இருக்கும் பொருள்களைக்கொண்டு தனிப்பட்ட வடிவமைப்பைத் தருவது. அந்த வகையில் ஜீன்ஸுக்கு என்றைக்குமே முதல் இடம். அதிலும் நீல நிற ஜீன்ஸ் உங்கள் அலமாரியில் இருக்கவேண்டியது அவசியம். குர்த்தி, வெஸ்டர்ன் டாப்ஸ், ஷர்ட், டீ-ஷர்ட், ப்ளௌஸ் என்று எல்லாவிதமான இணை ஆடைகளும் கச்சிதமாகப் பொருந்தும். அதிலும் சாலிட் டீ- ஷர்ட் பக்கா மேட்ச். 2018-ம் ஆண்டின் ட்ரெண்டி நிறம் பேஸ்டல் என்பதால், அந்த நிறத்திலேயே இணை ஆடையைத் தேர்வு செய்துகொள்ளலாம். வெள்ளை மற்றும் கறுப்பு டாப்ஸ் அலமாரியில் உள்ளனவா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஹீல்ஸ், தட்டையான காலணி, ஷூஸ் என, பெரும்பாலும் அனைத்துக் காலணிகளும் ஜீன்ஸுக்கு சூப்பர் ஜோடி!

Jeans


வெள்ளை மற்றும் கறுப்பு நிற ஆடைகள்:

ஜீன்ஸ் போலவே, கட்டாயம் வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களில் உங்களுக்காகவே வடிவமைத்த பெண்கள் குர்த்தாவையும் ஆண்கள் சட்டையையும் தங்களின் அலமாரியில் வைத்திருப்பது அவசியம். இது காலவரம்பற்ற ஃபேஷன். எந்த நிகழ்வுக்கும் உடனடி ஃபேஷன் லுக் இந்தக் கறுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகள் தரும். இந்த இரண்டு நிறங்களுடன், வேறு எந்த நிறத்தில் இணை ஆடை அணிந்தாலும் மிடுக்கான தோற்றத்தைத் தரும். குர்த்தாவுடன் வெவ்வேறு வண்ணங்களில் `ஸ்டோல்' அல்லது `ஷால்' அணிந்துகொள்ளலாம். வெள்ளைச் சட்டையுடன் கறுப்பு பேன்ட்டும், கறுப்புச் சட்டையுடன் வெள்ளை பேன்ட்டும் என்றைக்குமே ஃபேஷன்தான். பார்ட்டி, வரவேற்பு என அனைத்து நிகழ்வுகளிலும் க்ளாசிக் டச் இந்தக் கறுப்பு-வெள்ளை நிறங்கள் கொடுக்கும்.

Black and White

ஷால்ஸ் மற்றும் ஸ்டோல்ஸ்:

வெவ்வேறு நிறங்களிலும், அளவுகளிலும், துணி வகைகளிலும் `ஷால்' மற்றும் `ஸ்டோல்' வாங்கி அலமாரியை நிறைத்துக்கொள்ளுங்கள். இதை ஷாலாகவும் ஷ்ரக்காகவும் நொடியில் மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம். விதவிதமான டிசைன்களில் தற்போது மார்க்கெட்டில் ஆண், பெண் இருவருக்கும் கிடைக்கிறது. பூக்கள் மற்றும் விலங்குகள் அச்சிட்ட பிரின்ட் டிசைன், வட்டம், சதுரம் போன்ற வடிவியல் டிசைன், அப்ஸ்ட்டிராக்ட் பிரின்ட், சாலிட் அல்லது பிளைன் எனப் பல ட்ரெண்டி டிசைன்களில் சந்தையில் ஏராளமாகக் குவிந்துள்ளது. வெவ்வேறுவிதமாக ஷாலை உடுத்தும்போது முற்றிலும் புதுமையான தோற்றத்தைத் தருகிறது. சாலிட் டாப்புடன் அச்சிட்ட ஷாலையும், பிரின்டட் டாப்புடன் சாலிட் ஷாலையும் இணைத்து அணிவதன்மூலம் உங்களின் தோற்றம் மெருகேறும். சிவப்பு, கறுப்பு, வெள்ளை மற்றும் நீலம் முதலிய நிறங்கள் அவசியமானவை.

Stoles and Shawls

சில்வர் ஆபரணம்:

2018-ம் ஆண்டின் ஆபரணங்களின் ட்ரெண்ட், `மெட்டாலிக் பாலிஷ்'. கனமான ஆபரணங்கள் என்றைக்கோ பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. `லைட்வெயிட்' எனப்படும் எடை குறைவான ஆபரணங்களே இப்போதைய ட்ரெண்ட். அதிலும் மெட்டாலிக் ஃபினிஷ் செய்யப்பட்ட சில்வர் ஆபரணங்கள் ஆஹா ரகம்! எடை குறைவாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும் இந்த ஆபரணங்களை குர்த்தி, சல்வார் கமீஸ் உள்ளிட்ட அனைத்து ஆடைகளுடனும் உபயோகப்படுத்தலாம். நெக்லெஸ், சோக்கர், வளையல், பிரேஸ்லெட், ஜிமிக்கி எனப் பல்வேறு அணிகலன்கள் இந்த மெட்டாலிக் பாலிஷ்கொண்டு மார்க்கெட்டில் கிடைகின்றன. ட்ரெண்டி, எத்னிக் முதலிய டிசைன்களிலும் இந்த சில்வர் ஆபரணங்கள் உங்கள் அலமாரியில் கட்டாயம் இந்த ஆண்டு தேவை.

Silver Jewellery

காலணிகள்:

கட்டாயம் உங்கள் வார்ட்ரோபில் ஸ்னீக்கர்ஸ், பீஜ் நிறத்தில் தட்டையான செருப்பு, கிரே நிறத்தில் ஸ்போர்ட்டி ஃப்ளோட்டெர் (Sporty Floater), ஒரு Flip -Flop மற்றும் கறுப்பு ஹீல்ஸ் இருப்பது அவசியம்.

Footwear

அன்றாடம் உடுத்தும் கேஷுவல் உடையாகட்டும் விசேஷங்களுக்கு உடுத்தும் தணிவகை ஆடையாகட்டும் அல்லது அலுவலகத்துக்கு உடுத்தும் ஃபார்மல் உடையாகட்டும் அனைத்துக்கும் இந்தக் காலணிகளில் ஏதேனும் ஒன்று நிச்சயம் பொருந்தும்.


டிரெண்டிங் @ விகடன்