வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (06/03/2018)

கடைசி தொடர்பு:18:36 (06/03/2018)

"திறமையிருந்தும் தமிழ்ல பேசினா வேஸ்ட்டா?!" - ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி

இதுவரை...

ஃப்ளாஷ் பேக் 1 :

4 வயதுப் பெண். வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத நேரத்தில் தன் செல்ல அம்மாவின் புடவையை உடுத்தி, தன்னையே அம்மாவாக பாவித்து மழலை செய்யும் சேட்டையை, கண்களில் மை ஒழுக, திட்டுத்திட்டாகப் படர்ந்திருக்கும் பவுடருடன் அவளின் சுட்டித்தனம் முடிந்த பிறகுதான் நாம் பார்த்திருப்போம். யாரும் இல்லா தனி அறையில் அவ்வளவு நேரம் கண்ணாடி முன் நின்று என்னவெல்லாம் செய்திருப்பாள் அந்தக் குட்டி தேவதை? 

அம்மாவைப்போல் சிரித்திருப்பாளா?

அப்பாவைபோல் கோபப்பட்டிருப்பாளா?

சித்தியைப்போல் வெட்கப்பட்டிருப்பாளா?

அண்ணனைப்போல் சண்டையிட்டிருப்பாளா?

அக்காவைப்போல் சோறூட்டிப் பார்த்திருப்பாளா?

தாத்தா, பாட்டியைப்போல் நடந்து பார்த்திருப்பாளா?

என்னதான் செய்திருப்பாள் அந்தச் சுட்டி நாயகி?

ஃப்ளாஷ் பேக் 2 :

குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த 18 வயது பெண். நகரத்துக்கு முதல்முறையாக வருகிறாள். அங்கே உள்ள ஒரு விஷயம் அவளை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. அது என்ன? பனை ஓலைகளாலும் ஓடுகளாலும் கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்தவளின் கால்கள் பட்ட உயர்ந்த கட்டடங்களா?

விறகடுப்பை மட்டுமே பார்த்து வளர்ந்தவளின் கண்களில்பட்ட டேபிள் டாப் கேஸ் ஸ்டவ்வா?

மரம் அசைந்தால் காற்று வரும் என்று அறிந்தவளை, சுவிட்ச் போட்டாலும் காற்று வரும் என்று அவளை அண்ணாந்துப் பார்க்கவைத்த மின்விசிறியா?

அடடா! அவள் பார்த்து வியந்தது இவற்றில் ஏதுமில்லை...
`அட! இங்கேயும் ஒரு சிறிய குளம் இருக்கிறதே!' என்றபடி தன் ஊரின் தெப்பக்குளத்தை நினைவூட்டிய `Bath Tub' அது.

ஃப்ளாஷ் பேக் 3 :

அழகு என்றால் பெண்கள் மட்டும்தானா? கண்டாங்கியில் நாங்கள் அழகாய் இருக்க மாட்டோமா? ஆபரணம் எல்லாம் பெண்களுக்குதானா? வெட்கம், பெண்களுக்கு மட்டும் உரித்தானதா? அச்சம், மடம் போன்ற உணர்ச்சிகளின் காட்சியைப் புகைப்படமாக்குவதற்கு பெண்கள் மட்டும்தான் தகுதியானவர்களா?

இப்படி பல கேள்விகளை முன்வைத்து, `அனைத்தும் எங்களுக்கும் வேண்டும்' என்று அழகுக்கெல்லாம் அழகு சேர்த்த ஆணாய் நின்றார் அந்த 25 வயது இளைஞர்!

இனி...

சூடா ஒரு கப் காபி அர்ச்சனாவுடன்... 
ஸ்டைலிஸ்ட், ஃபேஷன் டிசைனர், கிராஃபிக் டிசைனர், ஃபேஷன் எடிட்டர் இப்படி தலைக்குமேல வேலைகளை வெச்சிருந்தாலும், அர்ச்சனா ஆர்த்தி``வாங்களேன் ஒரு கப் காபி சாப்பிடுட்டே பேசலாம்''னு கேட்டதும், `எப்படா ரெஸ்ட் கிடைக்கும்'னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். `இதோ வந்துடுறேன்'னு விரைந்து வந்தார் புதுமையான பல விளம்பரப் படங்களின் இயக்குநரும், சமீபத்தில் வெளியான `சென்னை டு சிங்கப்பூர்' திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளருமான அர்ச்சனா ஆர்த்தி. அவரிடம்...

``ஃபேஷன் மீது ஆர்வம் வரக் காரணம்?''

``அரியலூர் பக்கத்துல இருக்கிற ஜெயம்கொண்டம்தான் என் சொந்த ஊர். ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சதெல்லாம் தமிழ் மீடியம்தான். இன்ஜினீயரிங் பீக்ல இருந்த டைம்வேற. எல்லாரும் என்ன இன்ஜினீயரிங் படிக்கலாம்னு பேசிட்டு இருந்தப்போ, நான் மட்டும் ஃபேஷன் டிசைனிங்னு சொல்வேன். எல்லாரும் ரொம்பவே வித்தியாசமா பார்ப்பாங்க. எனக்கு சின்ன வயசுலயிருந்தே ஃபேஷன் டிசைனிங் ரொம்பப் பிடிக்கும். வீட்டுல ஏதாவது கிராஃப்ட் வொர்க் பண்ணிட்டே இருப்பேன். என்னோட இன்ட்ரெஸ்டைப் பார்த்துட்டு, எங்க வீட்டுல எல்லாரும் ரொம்பவே சப்போர்ட் பண்ணாங்க. அப்புறம் UG, PGனு எல்லாமே ஃபேஷன் சம்பந்தப்பட்டதுதான்". 

`` `ஸ்டைலிஸ்ட்' துறையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்?''

``என் குரு அன்ஸாரி சாருக்குதான் முதல்ல நன்றி சொல்லணும். `ஸ்டைலிஸ்ட்' என்னோட பலம்னு எனக்குப் புரியவெச்சது அவர்தான். படிக்கிறப்போ நிறைய டிசைனிங் வொர்க் பண்ணுவோம். அப்போ `நீ நல்லா ஸ்டைலிங் பண்ற'னு சொன்னார். `கூட்டத்துல ஒருத்தியா இல்லாம, உனக்குப் பிடிச்சதை தைரியமா பண்ணு'னு நிறைய என்கரேஜ் பண்ணினார். அதுக்கு அப்புறம் என்னை நானே இம்ப்ரூவ் பண்ணிக்கிற களத்துல இறங்கிட்டேன். காலேஜ்ல நான் பண்ண டிசைன்ஸ், ஸ்டைலிங் வொர்க் எல்லாமே ரொம்ப பாப்புலர். இப்படித்தான் ஸ்டைலிங்ல நுழைஞ்சேன்."

மாடல் 1

``இதுவரை எத்தனை ஆர்ட்ஸ் பண்ணிருக்கீங்க?''

``மொத்தமா 300 ஷூட்ஸ் முடிச்சுட்டேன். 15 ஃபேஷன் போட்டோகிராஃபி, 15 TVC ஆர்ட்ஸ் பண்ணிருக்கேன். காலேஜ்ல க்ளாஸ் எடுக்கிறேன். பட வாய்ப்பு வருது. ஆனா, பயமும் கூடவே வருது. ரொம்பவே பார்த்துப் பார்த்துதான் செலெக்ட் பண்றேன். `சென்னை டு சிங்கப்பூர்' படவாய்ப்புகூட என்னோட வேலைப்பாடுகளை எல்லாம் பார்த்துட்டுதான் கூப்பிடாங்க. இப்போ, திருமண ஆடைக்கான ஸ்டைலிங் வேலையிலயும் இறங்கிட்டேன்."

மாடல் 2

``உங்களையே வியக்கவைத்த வேலைப்பாடு?''

``ம்ம்ம்ம்ம்... நிறையா இருக்கே. மகளிர் தினத்துக்கு ஒரு விளம்பரம் பண்ணிருந்தேன். அதுல ரெண்டு பொண்ணுங்க. ஒருத்தர், மீன் விக்கிறவங்களோடப் பொண்ணு. இன்னொருத்தர், தினக்கூலிக்கு வேலை பார்க்கிறவங்களோடப் பொண்ணு. கேமரா முன்னாடி நிக்கிறது அவங்க ரெண்டு பேருக்குமே அதுதான் முதல் அனுபவம். ஆனா, எக்ஸ்பீரியன்ஸ்டு மாடல்ஸைவிட ரொம்பவே சூப்பரா பண்ணாங்க.

அதுக்கப்பறம், ஒருமுறை ரொம்பவே அவசரமா ஒரு விளம்பரம் பண்றதுபோல இருந்துச்சு. ஒருநாள்தான் டைம். காஸ்டியூம், கான்செப்ட்னு எதுமே ரெடி பண்ணலை. அப்போ என்கிட்ட இருந்த ஸ்கர்ட், ஜிமிக்கி எல்லாம் எடுத்துட்டுப் போயிட்டேன். அது என்னோட பர்த்டே டிரஸ். அங்கே இருந்த `Male மாடல்' இதல்லாம் பார்த்துட்டு, `இன்னிக்கு எனக்குதான ஷூட்?'னு கேட்டார். `ஆமாம், உங்களுக்குதான்'னு சொன்னதும், அவர் முகத்துல ஒரு த்ரில் ரியாக்‌ஷன். `உடனே ஷூட் பண்ணலாம்'னு சொன்னார். இந்த ஷூட் கான்செப்ட், ஃபேஷனுக்கு எந்தத் தடையும் இல்லைங்கிறதுதான். அமெரிக்காவுல இருந்து ஒருத்தர் இந்திய உடையைப் பார்க்கிறப்போ அவனுக்கு ஸ்கர்ட், லுங்கி ரெண்டுமே ஒண்ணுதான். இங்கேதான் நாம ஸ்கர்ட் பொண்ணுங்களுக்கு, லுங்கி பசங்களுக்குனு பிரிச்சிருக்கோம். ஆண், பெண், திருநங்கைனு எல்லாருக்குமே ஃபேஷன் ஒண்ணுதான். பணத்துக்கும் ஃபேஷனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கையில இருக்கிறதை வெச்சே ட்ரெண்டியாவும் ஃபேஷனாவும் இருக்கலாம். என்னோட மெயின் மோட்டிவே எல்லா ஃபேஷன் ஸ்டீர்யோடைப்பையும் உடைக்கணும்".

மாடல் 3

``உங்க டிரேட்மார்க்?''

``புடவைக்கான ஸ்டீர்யோடைப்பை உடைச்சதுதான். புடவைங்கிறது ரொம்பவே comfortable உடை. ஆனா, ஒரு விளம்பரத்துக்காக 300 pins குத்தி, அழகுக்காக உண்மைத்தன்மையை அழிச்சு ஷூட் பண்றது எனக்குப் பிடிக்கலை. செயற்கையான விஷயத்தை மக்களுக்குக் காமிக்க சுத்தமா விருப்பமில்லை. நாம எப்படி புடவையைக் கட்டுவோமோ, அதுபோல ரொம்ப நார்மலா கட்டித்தான் ஷூட் பண்ணுவேன். அப்படித்தான் இதுவரைக்கும் என்னோட ஷூட்ஸ் இருந்திருக்கு; இனிமேலும் இருக்கும்.

என்னோட விளம்பரத்துல நான் தேர்ந்தெடுக்கிற மாடல்ஸ் பெரும்பாலும் பொதுமக்கள்தான். வெளிர் நிறம், கொள்ளை அழகு, கட்டுக்கோப்பான உடலமைப்பு இப்படி எல்லா ஃபேஷனுக்கான கோட்பாடுகளையும் உடைச்சிருக்கேன். கலரா காட்டுறதோ, அளவுக்கு மீறி காட்டுறதோ எல்லாம் என் விளம்பரத்துல இல்லை. இருக்கிறதை அப்படியே காட்டுவேன். சுட்டிப்பெண்ணின் புடவை அலங்காரம், இளம் பெண்ணின் பாத் டப் அனுபவம், ஆணின் அலங்கார எதிர்பார்ப்பு இவை எல்லாமே என்னோட ஃபேவரைட்".

உங்கள் மைண்ட்வாய்ஸ் சரிதான். `ஃப்ளாஷ் பேக் 1,2,3'ன் இயக்குநரும் இவரே!

மாடல் 4

``இது எல்லாத்துக்கும் ஃபீட்பேக்?''

``நிறையா நல்லவிதமான ஃபீட்பேக் வருது. கூடவே மீம்ஸ், காமெடின்னும் வருது. நான் எல்லாத்தையும் பாசிட்டிவாத்தான் எடுத்துகிறேன்.''

மாடல் 5

``டிரீம் புராஜெக்ட்?''

``என்னோட சொந்த படைப்புக்கு தீனி போடுற மாதிரி எந்த புராஜெக்ட்டுமே என் டிரீம் புராஜெக்ட்தான். நிச்சயமா 100 சதவிகிதம் உழைப்பைக் கொடுப்பேன்".

மாடல் 6

``சவால்கள்?''

``நிறைய ஃபேஸ் பண்ணிருக்கேன். சென்னையே பெரிய சவால்தான். நான் சோஷியல் பெர்சன் கிடையாது. எல்லாத்துக்கும் ரொம்பவே கூச்சப்படுவேன். ஆனா, என்னோட ஸ்டைலிங் துறையில அப்படி இருக்கிறது வேலைக்கே ஆகாத ஒண்ணு. எனக்கு ஸ்டைலிங் பண்ண தெரியும். ஆனா, எல்லார்கூடயும் ஜாலியா மிங்கிளாகத் தெரியாது. அதனால என்னோட திறமையைக் குறைச்சு எடை போட்டிருவாங்க. அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

படிப்பு, புராஜெக்ட், மூன்று வருஷங்களுக்கு ஃப்ரீ ஷூட் இப்படி எல்லாமே என் திறமையை வளத்துக்க ட்ரை பண்ணிட்டேன். இன்னும் எண்ணலாம் பண்ணணும்னு தெரியலை. எங்களைப்போல புதுசா கிராமத்துல இருந்து வர்ற இளைஞர்களுக்கும் கொஞ்சம் சான்ஸ் கொடுக்கணும். டாக்டர் அனிதா ஊருல இருந்து வந்திருக்கும் நானும் ஒரு அனிதாதான். ஃபேஷன் துறையில இருக்கிறவங்க தமிழ் பேசினாலே வித்தியாசமா பார்க்குறாங்க. மற்ற மொழிகள் எல்லாம்கூட விட்டுறாங்க. ஆனா, `தமிழ்'னு சொன்னாலே எளக்காரமா பார்க்கிறது இன்னமும் இருக்கு. ஒண்ணுமே இல்லாம இங்கிலீஷ்ல பேசினா செம டேலன்ட்; எல்லா திறமைகளும் இருந்தும் தமிழ்ல பேசினா வேஸ்ட். பெரிய ஆளுங்களைத் தெரிஞ்சுவெச்சுக்கலைன்னா இன்னும் பெரிய தப்பு".

``குடும்பத்தாரின் ஆதரவு?''

``100  சதவிகிதம் இருக்கு. `உனக்குப் பிடிச்சதை பண்ணு'னு எப்போதும் என்ன தட்டிக்கொடுத்துட்டே இருப்பாங்க. படிக்கிறப்போ `பெஸ்ட் ஸ்டூடன்ட்'னு பேர் வாங்கினேன். ஆனா, என்னோட வேலையில அவங்களை திருப்திப்படுத்துறதுபோல இன்னும் ஏதும் பண்ணலை. நிச்சயமா பண்ணுவேன்.''


டிரெண்டிங் @ விகடன்