வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (19/03/2018)

கடைசி தொடர்பு:16:57 (19/03/2018)

சன் டேனிங் vs சரும பராமரிப்பு... எளிய பத்து டிப்ஸ்! #BeautyTips

டிப்ஸ்

வெயில் காலம் வந்துவிட்டாலே, சிலருக்குத் தோலில் நிறமாற்றம் ஆரம்பித்துவிடும். 'இதுக்காக, பார்லர் போக நேரம் இல்லையே' என்கிற பெண்களுக்காக, எளிமையான ஸ்கின்டேன் பராமரிப்பு முறைகளைச் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. 

வெயில் காலத்தில் நம் சருமத்தை புறஊதாக் கதிர்களிடமிருந்து காக்க, உடலில் மெலனின் அதிகமாகச் சுரக்கிறது. இதுதான் நிறமாற்றத்துக்கான முக்கிய காரணம். சரியான நேரத்தில் பாரமரிப்பு எடுத்துக்கொண்டால், இது எளிதில் சரிசெய்துவிடும் விஷயமே. ஆனால், அந்த முயற்சிகளில் சரியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். விளம்பரங்களில் வரும் மாடல்களைப் பார்த்து மயங்கி, புதுப் புது கிரீம்களை உபயோகிப்பதில் பயனில்லை. எளிமையான பொருள்களைப் பயன்படுத்தியே சன் டேனிங்கை சரிசெய்துகொள்ளலாம். 

சோற்றுக்கற்றாழையை இரண்டாகக் கீறி, உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பொருளைத் தனியே எடுத்து, சுத்தமான தண்ணீரில் கழுவவும். பிறகு, மிக்ஸியில் போட்டு, பேஸ்ட் போன்று அரைக்கவும். முகம், கை, கால்கள், கழுத்து என நிறமாற்றம் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவிவிடவும். சன் டேன் காணாமல் போகும். 

நன்கு பழுத்த தக்காளியின் சதைப் பகுதியுடன் இரண்டு டீஸ்பூன் தயிர், எட்டு சொட்டு தேன் கலந்து நன்கு கலக்கி, டேன் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவிவிட்டால், நிறமாற்றம் பிரச்னையைச் சரிசெய்து விடலாம். 

சிறிதளவு காய்ச்சாத பால், பாதாம் நான்கு, கசகசா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். பாதாமை, தண்ணீரில் ஊறவைத்து, தோல் உரித்துக்கொள்ளவும். அதனுடன் கசகசா, பால் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து, டேனிங் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கழுவிவிடவும். இப்படி தினமுமோ, வாரம் ஒரு முறையோ செய்தால் சன் டேனுக்கு டாட்டா சொல்லலாம். 

சந்தனத்தைச் சிறிது இழைத்து, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து, டேனிங் இடத்தில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும். வெயிலினால் ஏற்படக்கூடிய மற்ற சரும பிரச்னைகளும் வராது. 

முல்தானிமெட்டி மற்றும் கேரட் ஜீஸை சமஅளவில் எடுத்து, 10 சொட்டு எலுமிச்சைசாறு கலந்து, டேனிங்கான இடத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிட்டால், சருமம் பழைய நிறத்தை அடைந்து பளபளப்பாக இருக்கும். 

சருமம் அதிக நிறமாற்றத்துடன் உள்ளது என்பவர்கள், குங்குமப்பூவை சிறிது எடுத்து, காய்ச்சாத பாலில் கசக்கி ஊறவைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து, சிறிது பாலாடையுடன் சேர்த்து முகத்தில் பூசவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிட, டேனிங் காணாமல்போகும்.                                                                                 டிப்ஸ்

வெயில் காலத்தில் சரும நிறமாற்றத்திலிருந்து தப்பிக்க, வாரம் ஒருமுறை வீட்டிலே எளிமையான பேக் செய்து பயன்படுத்தலாம். காய்ச்சிய பால் கால் கப், ஓட்ஸ் இரண்டு டீஸ்பூன், கசகசா இரண்டு டீஸ்பூன் சேர்த்து வேகவைக்கவும். இரண்டு டீஸ்பூன் ஆரஞ்சு பழ ஜூஸ், இரண்டு டீஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து பேக் செய்து, முகத்தில் பூசவும். அரை மணி நேரம் கழித்து கழுவலாம். தினமும் நேரம் ஒதுக்க முடியாதவர்கள், வாரம்  ஒருமுறை இதைச் செய்தாலே முகம் பளிச்சென்று இருக்கும். 

ரோஸ் வாட்டர் மிகச்சிறந்த ஆன்ட்டிடேன். கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த ரோஸ் வாட்டரைத் தவிர்த்து, வீட்டிலேயே செய்யலாம். ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்கவைக்கவும். அத்துடன் 100 கிராம் ரோஜா இதழ்களைச் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஆறிய பிறகு நீரை வடிகட்டி, சுத்தமான பாட்டிலில் ஊற்றிவைக்கவும். தேவையானபோது சுத்தமான பஞ்சில் நனைத்துப் பயன்படுத்தலாம். இந்த ரோஸ் வாட்டரை பிரிட்ஜில் வைத்துப் பராமரித்தால், நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்கும். 

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடி சாமந்திப் பூவை கொதிக்கவைத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். சாமந்தியின் சத்துக்கள் அந்தத் தண்ணீரில் இறங்கி மஞ்சள்தன்மை அடைந்திருக்கும். அதன்பின், நீரை வடிகட்டி, சுத்தமான பாட்டிலில் ஊற்றிவைக்கவும். இந்தத் தண்ணீரைத் தூய்மையான பஞ்சில் நனைத்து, டேனிங் இடங்களில் தேய்க்கவும். இது, உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து எப்போதும் ப்ரெஷ்ஷாக வைத்திருக்கும். 

முகம் கறுத்து வெப்பத்தால் தோல் வறட்சி அடைந்துள்ளது என்பவர்களுக்கு... ஆலிவ் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்யை ஒன்றாகக் கலந்து பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட், சருமத்துக்குத் தேவையான வைட்டமின் ஈ-ஐ தருவதுடன், முகத்தை வறட்சியிலிருந்தும் காக்கிறது. சருமம் நிறமாறாமல் இருக்கவும் உதவும். வெளியில் செல்வதற்கு முன்பு, இந்த எண்ணெய்களைத் தடவிக்கொள்ளலாம். 

டிப்ஸ்

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வெயில் காலத்தில் கிடைக்கும் நுங்குடன், சிறிது இளநீர் சேர்த்து கலந்து, நிறமாற்றம் ஏற்பட்டுள்ள இடங்களில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ, டேனிங் பிரச்னையை எளிதில் நீக்கலாம். 

வெயில் காலத்தில் காலை, மாலை குளித்தாலே நிறமாற்ற பிரச்னையிலிருந்து ஓரளவு தப்பித்துவிடலாம். இவற்றைத் தினமும் கடைப்பிடிக்க முடியவில்லை என்பவர்கள், கடைகளில் கிடைக்கும் சன்ஸ்கீரின் கிரிம்களைப் பயன்படுத்தலாம். ஆனால், வெளியில் செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே, சன்ஸ்கிரீன் லோசனை முகத்தில் அப்ளை செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக, உங்கள் சருமத்துக்கு பொருத்தமானதா? தீங்கு ஏற்படுத்துமா என்பதைக் கவனித்து தேர்வுசெய்யவும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்