ஏ.சியினால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபட டிப்ஸ்! #BeautyTips | how to avoid face dryness

வெளியிடப்பட்ட நேரம்: 20:21 (23/03/2018)

கடைசி தொடர்பு:20:21 (23/03/2018)

ஏ.சியினால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபட டிப்ஸ்! #BeautyTips

ன்றைய நாகரிக காலத்தில், அலுவலகம், ஷாப்பிங் மால், வீடு என எல்லா இடங்களிலும் குளிர்சாதன அறையிலேயே இருந்து பழகிவிட்டோம். தாங்கிக்கொள்ள முடியாத வெப்பமான சூழலில், இவை உடலுக்குக் குளிர்ச்சி அளித்தாலும், இதனால் பாதிப்புகளும் உண்டு. அதில் ஒன்றாக, தொடர்ந்து ஏ.சியில் இருப்பதால் சருமம் வறட்சி அடைகிறது. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள எளிமையான வழிமுறைகளைச் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

 

                                                        சருமவறட்சி 

ஏசியால் கட்டுப்படுத்தப்படும் காற்றில், ஈரப்பதம்தான் இருக்காது. அதனால், ஏசி அறையில் காற்று உலர்தன்மையுடன் இருக்கும். இந்தக் காற்று நம் உடலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, சருமத்தை வறட்சியாக்கும். அலுவலகம் செல்லும் பெண்கள் தொடர்ந்து 9 அல்லது 10 மணி நேரம் வரை ஏசிக் காற்றிலே இருப்பதால், சருமத்துடன் சேர்ந்து கேசம், உதடுகள் ஆகியவையும் பாதிக்கப்படும். இதனால், சீக்கிரமே வயது முதிர்ந்த தோற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அதைத் தடுக்க சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால், சருமம் அழகு பெறும். ஏசியில் பணியாற்றும் பெண்கள், தங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ரைசர்கள் பயன்படுத்துவது அவசியம். 

ஒரு நாளைக்குக் குறைந்து 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமான தண்ணீர் குடித்து உடலை நீர்த்தன்மையுடன் வைத்திருந்தால், சரும வறட்சி, மங்கலாக்கிப் பாதிப்பு ஏற்படுத்துவதில் இருந்து தப்பிக்கலாம். 

உங்கள் சருமத்துக்கு ஏற்ற திரவத்தன்மையுடன் கூடிய லோஷன்களை ஹேண்ட்பேக்கில் வைத்திருங்கள். இதனை 2 மணி நேரத்துக்கு ஒருமுறையோ, அல்லது சருமம் உலர்வாகத் தோன்றும் சமயத்திலோ எடுத்து அப்ளை செய்யுங்கள். ஏசி பயன்பாட்டில் அதிக நேரம் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 6 முறையாவது முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். 

                                                   சருமவறட்சி

வாட்டர் ஸ்ப்ரே பாட்டிலில், ரோஸ் வாட்டரை நிரப்பி, உங்கள் டேபிளில் வைத்துக்கொள்ளுங்கள். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தில் ஸ்ப்ரே செய்துகொண்டால், முகத்தின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும். அல்லது ஆல்ஹாகல் சேர்க்காத ஈரத்தன்மையுடன் கூடிய வைப்ஸ் மூலம் அவ்வப்போது முகத்தில் லேசாகத் துடைத்துக்கொண்டால், புத்துணர்வுடன் வைத்திருக்க முடியும். 

விலை குறைவாக கிடைக்கக் கூடிய பழங்களை வாங்கி, முகத்தில் தேய்த்து, அரை மணி நேரத்துக்குப் பிறகு லேசாக மஜாஜ் செய்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவலாம். மேலும், வாரம் ஒருமுறை ஆயில் மசாஜ் செய்துகொள்வது நல்லது. பார்லருக்குச் செல்ல நேரம் இருப்பவர்கள், ஹைட்ரேட்டிங் ஃபேஷியல் செய்துகொள்ளலாம். 

உலர்தன்மையை குறைக்க, உங்கள் மேஜையில் ஒரு சிறு பவுலில் சிறிது தண்ணீரை ஊற்றிவைத்துக்கொள்ளுங்கள். இது, உங்களைச் சுற்றி ஈரப்பதமான காற்றை வைத்திருக்கும். 

குளிக்கும்போது சில சொட்டு தேங்காய் எண்ணெய்யை நீரில் சேர்த்து குளிக்கலாம். இது, சருமத்தில் எண்ணெய்ப் பசை இருக்க உதவும். அதேபோல, குளிப்பதற்கு முன்பு தயிரை உடம்பில் தடவி, மிதமான வெந்நீரில் குளித்துவந்தால், வறண்ட சருமம் சரியாகிவிடும். 

வேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றைக் கலந்து, முகத்தில் பூசிக்கொண்டால், சருமம் பளிச்சென இருக்கும். 4 பாதாம் பருப்பு அரைத்த விழுதுடன், தேன், பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து, சருமத்தில் பூசுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். 

வாழைப்பழக் கூழுடன் பட்டர் ஃப்ரூட் கலந்து, சருமத்தில் பூசி, ஊறவைத்துக் கழுவுவதன் மூலம் சருமம் மிருதுவாகும்

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது, இந்த எண்ணெய்யை உடலில் தடவிக்கொள்ளுங்கள். 

சந்தன பவுடர், பச்சைப் பயறு மாவு, கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, முல்தானி மட்டி பவுடர், ரோஜா இதழ் தூள் இவற்றைக் கலந்துவைத்து, சருமத்தில் தேய்த்து குளித்தால், வறட்சி நீங்கி, தோல் பளபளக்கும். 


டிரெண்டிங் @ விகடன்