கஷ்டமோ, கவலையோ... துணையின் கரம் பிடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?!

'மனக் கஷ்டமோ அல்லது உடல் கஷ்டமோ, உங்கள் துணையின் கைகளைக் கொஞ்ச நேரம் பிடித்துக்கொண்டால் போதும், எல்லாம் பறந்தோடிவிடும்' என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. இது, எந்த அளவுக்கு சாத்தியமானது? தாம்பத்யம் மற்றும் தம்பதிகளுக்கான மனநல மருத்துவரான அசோகன் அவர்களிடம் கேட்டோம். அதற்கான சாத்தியக்கூறுகளை விளக்க ஆரம்பித்தார். 

துணை

 

நமக்காக ஒருவர் இருக்கிறார்! 

''காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதியராக இருந்தாலும் சரி, இருவரில் ஒருவர் மன வருத்தத்திலோ, உடல் உபாதையிலோ இருக்கும்போது, பாதிக்கப்பட்டவரின் கையை மற்றவர் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்யும்போது, நமக்காக ஒருவர் இருக்கிறார் என்கிற ஆறுதல், பாதிக்கப்பட்ட துணைக்குக் கிடைக்கும். 'நான் இருக்கிறேன்' என்று தைரியம் கொடுத்த நபரின் அன்பையும் அந்த ஸ்பரிசம் உணர்த்திவிடும். சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ் சினிமாக்களில் கவலையாக இருக்கிற கணவனின் கை மேல் மனைவி  கைவைத்து மென்மையாக ஒரு அழுத்தம் கொடுப்பார் இல்லையா? அதையே, தேவைப்படும் தருணங்களில் யதார்த்த வாழ்க்கையிலும் ஃபாலோ பண்ணுங்கள். 

எம்பதி வளரும்! 

ஆங்கிலத்தில், 'எம்பதி' என்பார்கள். அதாவது, வாழ்க்கைத் துணையின் துன்பத்தில் 'உச்' கொட்டி இரக்கப்படுவதோடு நின்றுவிடாமல், அந்தக் கஷ்டத்தை அவரின் இடத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்தான் எம்பதி. அந்த வெளிநாட்டு ஆராய்ச்சியின்படி, கைகளைப் பிணைத்துக்கொள்ளும்போது, தம்பதியிரிடையே ஒருவர் கஷ்டத்தை அடுத்தவர் புரிந்துகொள்கிற எம்பதி வளரும். 

துணை

பாதுகாப்பு உணர்வைத் தரும்! 

தன் பாய் ஃப்ரெண்டு அல்லது கணவர் உயரமாக இருந்து, அவர் பக்கத்தில் நிற்கும்போது, சம்பந்தப்பட்ட பெண்கள் பாதுகாப்பாக உணர்வார்கள் என்பது உளவியல் உண்மை. அதே பாதுகாப்பு உளவியல், ஆணும் பெண்ணும் கைகளை இணைத்துக்கொள்வதிலும் வொர்க் அவுட் ஆகும். இந்த உணர்வு, இருவருக்குமே வரும் என்பது கூடுதல் சிறப்பு. 

நெருக்கம் நல்லது! 

'பகல் முழுக்க கீரியும் பாம்புமாக இருக்கும் தம்பதியர்கூட, இரவில் ஒன்றாகிவிடுவர்' என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது, பகலில் குடும்பப் பிரச்னைகள் காரணமாகச் சண்டையிடும் தம்பதியரும், பொழுது சாய்ந்த வேளையில், வயல் வேலை செய்து களைத்துப்போன கணவனுக்கு மனைவி தொட்டுத் தொட்டு செய்கிற உதவிகள் காரணமாக சமாதானமாகிவிடுவார்கள். அதனால், எத்தனை பிரச்னைகள் வந்தாலும், அந்த தாம்பத்யம் உடைந்துபோகாது. இதற்குக் காரணம், ஒருவரையொருவர் தொட்டுக்கொள்கிற ஸ்பரிசமே. 

துணை

உணர்வுகள் புரிந்துகொள்ளப்படும்! 

காதலரோ, தம்பதியரோ எப்போதும் அருகருகே இருந்தாலும், ஒருவரையொருவர் தொடும்போதும் அணைத்துக்கொள்ளும்போதும்தான் இருவரின் மூளையின் மின் அலைவரிசைகளில் சில மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றமே, தன் துணையின் மனம் மற்றும் உடல் வேதனையைச் சரிசெய்கிறது. 'நான் இருக்கிறேன்' என்று ஆறுதல்படுத்துகிறது. 

இந்தக் காலத்துக்கு இது ஏற்றது!

சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவழிப்பது பெருகிவிட்ட இந்தக் காலத்தில், கணவனும் மனைவியும் அடிக்கடி ஒருவர் கையை மற்றவர் பிடித்துக்கொள்வது உறவை நீட்டிக்கச் செய்யும் ஒரு வழி. இது, இல்லாதபட்சத்தில்தான், தங்கள் கஷ்டங்களை முகமறியாத சமூக வலைதள நண்பர்களிடம் சொல்லி பிரச்னைகளில் மாட்டிக்கொள்கிறார்கள் பலர்.  சமூக வலைதளத்தில் உங்களுக்குக் கிடைக்கும் ஆயிரம் லைக்குகள், உங்கள் துணையின் சிறிய ஸ்பரிசத்துக்கு ஈடாகாது'' என்று முடித்தார் மனநல மருத்துவர் அசோகன். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!