வெளியிடப்பட்ட நேரம்: 22:08 (08/05/2018)

கடைசி தொடர்பு:22:08 (08/05/2018)

காடுகள் அழியும் கதை... 15 படங்களில் ஓர் உயிர் வலி!

காடுகள் அழியும் கதை... 15 படங்களில் ஓர் உயிர் வலி!

மனிதனின் பேராசையால் இயற்கையின் அழிவை `Greed' எனும் தலைப்பில் `Photo story' மூலம் எடுத்துரைத்திருக்கிறார் பிரபல புகைப்படக் கலைஞர் வி.எஸ்.அனந்த கிருஷ்ணா. அதன் கண்காட்சி, சென்னை கஸ்தூரிரங்கன் ரோட்டில் உள்ள Amortela Boutique-ல் மே 4-ம் தேதி ஆரவ், சுஜா வருணீ, அருண்ராஜா காமராஜ் ஆகியோரின் முன்னிலையில் கோலாகலமாகத் தொடங்கியது.

பேராசை

தொழில்நுட்ப வளர்ச்சியால் பெற்ற நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்பதற்கு சரியான உதாரணம் இந்த `Greed' போட்டோ ஸ்டோரி. நம் அன்றாட வாழ்வில் நமக்குக் கிடைக்கும் வசதிகளை மட்டுமே பார்க்கும் சுயநலவாதிகளாக வாழ்கிறோம். ஆனால், பலரின் அழிவில் உருவானதுதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை என்பதை எண்ணிப்பார்ப்பதேயில்லை. சந்தோஷமாய் சுற்றித் திரிந்த காட்டு விலங்குகள், எண்ணிலடங்கா காட்டுவாசிகள் எனத் தன்னலமற்றவர்கள் நிறைந்திருந்த காடு, மரங்கள், புல்வெளிகள் எனப் பசுமையாக இருந்த பூமி, தொழிற்சாலைகள், கட்டடங்கள் என வறண்ட பாலைவனமாய் மாறிவிட்டது.

Greed

இத்தனை சிந்தனைகளையும் மனதில் அலைபாயவிட்ட, அந்த அற்புதமான புகைப்படங்களின் இயக்குநர் அனந்த கிருஷ்ணனிடம், இப்படிப்பட்ட எண்ணம் உருவானதற்கான காரணம் மற்றும் அதன் பின்னணி பற்றி கேட்டேன்.

Anantha Krishna``இது எல்லாத்துக்கும் இன்ஸ்பிரெஷன் நம்ம விவசாயிங்கதான். முக்கியமா, நான் என் கிராமத்துல பார்த்த விவசாயிங்க. அவங்க இயற்கையோடு வாழுறவங்க. அவங்களோட வாழ்க்கையை தியாகம் பண்ணித்தான் வாழ்ந்துட்டிருக்காங்க. நாம சாப்பிடுற சாப்பாடு அவங்க கொடுக்கிறது. அதுக்கான மரியாதை நாம யாருமே அவங்களுக்குக் கொடுக்கிறதில்லை. நாம நம்ம சந்தோஷத்துக்கு மட்டும்தான் வாழுறோம்.

பத்து வருஷத்துக்கு முன்னாடி சென்னையைப் பார்த்திருக்கேன். இப்போ மழை பெய்யுறப்போ இருக்கிற கஷ்டம் அப்போ இல்லை. இதெல்லாம் யோசிச்சப்போதான் மனுஷனோட பேராசை, எத்தனை அப்பாவி உயிர்களைப் பறிச்சிருக்குனு நினைச்சு கஷ்டமாச்சு. இந்த போட்டோ ஸ்டோரி மூலமா நான் எந்தக் கருத்தும் சொல்லலை. இயற்கையை அழிச்சதுல எனக்கும்தான் பங்கு இருக்கு. அந்தத் தப்பை இப்போ நான் உணர்ந்துட்டேன். அவ்வளவுதான். அதைத்தான் என் போட்டோ ஸ்டோரியில காட்டியிருக்கேன். சுருக்கமா சொல்லணும்னா, இந்த உலகத்துல வாழுற உயிரினங்கள் எல்லாமே இந்தப் பூமிக்கும் மக்களுக்கும் நல்லது மட்டும்தான் செய்யுது, மனிதர்களைத் தவிர" என்று கூறி நம்மைச் சிந்திக்கவைத்தார்.

``இதை உருவாக்குவதற்கு நீங்கள் மேற்கொண்ட சவால்கள் என்னென்ன?''

``ஏராளமா இருக்கு. எல்லா வேலைப்பாடுகளும் முடிச்சு, ரிலீஸ் பண்றதுக்கே எனக்கு ஒரு மாசம் ஆச்சு. ஆத்மார்த்தமா இந்த வேலையைச் செஞ்சேன். இதுக்கான ரீச் நிச்சயமா இருக்கும். `இதுபோல ஒரு போட்டோ ஸ்டோரி காட்சிக்கு வைக்கணும்'னு சொன்னப்போ, நிறைய பேரு யோசிச்சாங்க. என்ன பண்றது... இதுல கவர்ச்சி எதுவும் இல்லையே! அவங்களுக்கு ரீச் கிடைக்கணும்னுதான அவங்களும் பார்ப்பாங்க. இதுக்காக space கொடுத்த Amortele-க்கு பெரிய நன்றி" என்று கூறிவிட்டு விரைந்தார்.

இந்த நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராய் வந்திருந்த திரைப்பட நடிகை சுஜா வருணீயிடம் பேசியபோது, ``எனக்குத் தெரிஞ்ச ரொம்ப நல்லSuja Varunee மனிதர்கள்ல அனந்த கிருஷ்ணாவும் ஒருத்தர். அவரை நான் பேரு சொல்லிக் கூப்பிட்டதே இல்லை. `Talented'னுதான் கூப்பிடுவேன். அவருக்குள்ள அவ்வளவு திறமையிருக்கு. என்னோட வேலையில பெரிய திருப்புமுனையா அமைஞ்சது, அனந்த கிருஷ்ணா எடுத்த போட்டோதான். அவரோட இந்த `Greed' வேலைப்பாடும் நல்ல ரீச் ஆகும். இதுபோல இன்னும் நிறைய பண்ணணும். என் சப்போர்ட் கிருஷ்ணாவுக்கு எப்பவுமே இருக்கு. என் கரியர்ல நான் வளர்றதுக்கு அவரோட சப்போர்ட் ரொம்ப முக்கியம். இது என் பேராசை" என்று கூறி புன்னகைக்கிறார் சுஜா.

இந்த நிகழ்ச்சி நடத்திய Amortela கடையின் உரிமையாளர் டீஜாவிடம் இந்த நிகழ்வு பற்றிய கருத்தைக் கேட்டேன்.
Tija``அனந்த கிருஷ்ணாவோடு சேர்ந்து இந்த ஈவன்ட் நடத்துறதுல ரொம்பவே சந்தோஷம். இது ரொம்ப நல்ல கான்செப்ட். பேராசை, ஒரு பெரிய பாவச்செயல். இதுக்கு எல்லையே இல்லை. நாம எவ்வளவு நன்மை செஞ்சாலும், மற்றவங்களைப் பொறுத்தவரை அது போதவேபோதாதுதான். இந்த உணர்ச்சியை ரொம்ப அழகா படமாக்கியிருக்கார். எத்தனை மரங்களை அழிச்சிருக்கோம். ஒரு மரம் வெட்டினா நூறு மரங்களை நடணும்னு சொல்லுவாங்க. அப்படி நாம பண்றோமா? இதெல்லாம் யோசிக்கிறவிதத்துல ரொம்ப அழகா உருவாக்கிருக்கார். நாம நினைச்சா இந்த அழிவுகளை எல்லாம் தடுக்க முடியும். இது நம்ம வீடு, நம்ம நாடு" என்று கூறி மெய்சிலிர்க்கவைத்தார்.

Memes, காணொளி, ஓவியம் போன்றவை பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல, நல்ல கருத்துகளை பகிர்வதற்கும்தான் என்று இந்தக் காலத்து இளைஞர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அந்த வகையில், தன் போட்டோகிராஃபி திறமையை `பேராசை' எனும் தலைப்பில் 14  போட்டோவில் மிக அழகாகக் காட்சிப்படுத்திய அனந்த கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள்!


டிரெண்டிங் @ விகடன்