ஸ்கின்னி, ஸ்லிம், ரெகுலர்... உடலமைப்புக்கு ஏற்ற சரியான ஜீன்ஸ் எது? | How to choose the perfect jeans according to the men body type

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (28/05/2018)

கடைசி தொடர்பு:21:00 (28/05/2018)

ஸ்கின்னி, ஸ்லிம், ரெகுலர்... உடலமைப்புக்கு ஏற்ற சரியான ஜீன்ஸ் எது?

ஆண், பெண் என அனைவருக்குமான அத்தியாவசிய உடை `ஜீன்ஸ்'. கல்லூரி, அலுவலகம், ஷாப்பிங், பார்ட்டி... என எல்லா இடங்களுக்கும் கம்ஃபர்டபிளாக இருக்கும் ஒரே உடை ஜீன்ஸ்தான். சாதாரணமாக இடுப்பளவு, நிறம், ஃபிட்(Fit) போன்றவற்றைச் சரிபார்த்து வாங்குவோம். என்னதான் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் அதை உடுத்தி வெளியே செல்லும்போது, `ஏதோ ஒன்று சரியில்லையே!' என்று நம்மில் பெரும்பாலானோர் உணர்ந்திருப்போம். அப்படி எந்தச் சந்தேகமும் இல்லாமல் உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற சரியான ஜீன்ஸைத் தேர்ந்தெடுக்க, சில குறிப்புகள்...

ஜீன்ஸ்

ஸ்கின்னி, ஸ்ட்ரெயிட், ஸ்லிம், மிட் ரைஸ் (Mid Rise), Low Rise போன்ற ஏராளமான ஜீன்ஸ் வகைகளை கடைகளில் பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தங்களைத் தெரிந்துகொள்வோமா...

1. ரெகுலர் அல்லது ஸ்ட்ரெயிட் ஜீன்ஸ் - இடுப்பிலிருந்து முழங்காலை கடந்து கணுக்கால் வரையிலும் அகன்ற ஒரே அளவைக்கொண்டிருக்கும் டெனிம் துணியினாலான பேன்ட், ரெகுலர் அல்லது ஸ்ட்ரெயிட் ஜீன்ஸ்.

2. ஸ்கின்னி ஃபிட் - மிகவும் குறுகிய பேன்ட் பிளவுகளைக்கொண்டிருக்கும் இந்த வகை ஜீன்ஸ், இடுப்பிலிருந்து கணுக்கால் வரை உடலை ஒட்டியிருக்கும்.

3. ஸ்லிம் ஃபிட் - மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் உடலைக் கச்சிதமாகப் பொருத்திக்கொள்ளும் அமைப்புகொண்டது ஸ்லிம் ஃபிட். இது இடுப்பிலிருந்து தொடைப் பகுதி வரை ஸ்ட்ரெயிட் அமைப்பிலும், தொடைப் பகுதியிலிருந்து கணுக்கால் வரை சிறிது இறுக்கமாகவும் இருக்கும்.

4. ரிலாக்ஸ் அல்லது லூஸ் ஃபிட் - இடுப்பிலிருந்து கணுக்கால் வரை மிகவும் தளர்வான அமைப்புடைய பேன்ட் வகைகள் ரிலாக்ஸ் அல்லது லூஸ் ஃபிட்டில் சேரும். இதுபோன்ற அமைப்பு, உடலின் எந்தப் பாகத்திலும் ஒட்டியிருக்காது.

இதோடு, ஜீன்ஸ் வாங்கும் முன் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் Rise. அதாவது பேன்ட் பட்டன் பொருத்தப்படும் இடம். அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

High Rise - தொப்புள் அதாவது பெல்லி பட்டனுக்கு மேல், பேன்ட் பட்டன் பொருத்துவது High Rise. இது, உடல் பருமனாக இருப்பவர்களுக்குச் சரியான தேர்வு. இதனுடன் ஷர்ட், டீ-ஷர்ட் போன்ற மேலாடையை `டக்' செய்யாமல் போடுவது நல்லது.

Mid Rise - பெல்லி பட்டனுக்கு நேராக பேன்ட் பட்டன் பொருந்துவதுதான் mid rise. இந்த வகை பேன்ட்களுடன் ஷர்ட் அல்லது டீ-ஷர்ட்டை டக் செய்துகொள்ளலாம்.

Low Rise -  பெல்லி பட்டனுக்குக் கீழே பேன்ட் பட்டன் இருந்தால், அது Low rise. இதுதான் பெரும்பாலான இந்திய மக்களின் சாய்ஸ்.

செவ்வகம் உடலமைப்பு :

தோள்பட்டை முதல் இடுப்பு வரை ஒரே அளவைக்கொண்டிருப்பவர்கள் செவ்வக உடலமைப்பைச் சேர்ந்தவர்கள். பொதுவாகவே இவர்கள் ஒல்லியாக இருப்பார்கள். Mid rise-ல் ரெகுலர் மற்றும் ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் இவர்களுக்கேற்றது. நிச்சயம் ஸ்கின்னி ஃபிட் ஜீன்ஸ்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது மேலும் உடலை ஒல்லியாகக் காட்டும். அதேபோல High rise மற்றும் லூஸ் ஃபிட்டிங் ஜீன்ஸ்களையும் தவிர்க்க வேண்டும்.

Anirudh in Jeans

சரிவகம் உடலமைப்பு :

விலா எலும்புகள் சீராக காலர் எலும்பு வரை சென்று அளவான அகன்ற தோள்பட்டைகொண்டிருப்பவர்கள், சரிவகம் உடலமைப்பில் சேர்வர். மிகவும் கட்டுக்கோப்பான உடலமைப்பைக்கொண்டிருக்கும் இவர்களுக்கு எல்லாவிதமான உடைகளும் கச்சிதமாகப் பொருந்தும். அந்த வகையில், Low rise-ல் ஸ்லிம், ஸ்ட்ரெயிட் ஃபிட் போன்ற ஜீன்ஸ் பேன்ட்கள் பர்ஃபெக்ட் சாய்ஸ்.

தளர்வான பிளவுகொண்ட ஜீன்ஸ் வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

Athletic body shape


தலைகீழ் முக்கோணம் :

தோள்பட்டை அதிகமாக அகன்றும், இடைப்பகுதி மிகவும் குறுகியும் இருக்கும் உடலமைப்பு தலைகீழ் முக்கோணம். இவர்களின் கால் பகுதி சற்று தடித்திருப்பதால் ஸ்லிம், ஸ்கின்னி போன்ற உடலை ஒட்டிய ஜீன்ஸ்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Mid rise-ல் செமி-லூஸ் மற்றும் ஸ்ட்ரெயிட் ஃபிட்டிங் ஜீன்ஸ் இவர்களுக்கானது.

Triangular Body Type


ஓவல்:

தோள்பட்டை மற்றும்  இடுப்பைவிட வயிற்றுப் பகுதி தடித்திருப்பவர்கள் ஓவல் உடலமைப்பில் சேர்வார்கள். அதிக தொப்பை உடையவர்கள் எனவும் சொல்லலாம். இவர்களுக்கு High rise-ல் ஸ்ட்ரெயிட் மற்றும் லூஸ் ஃபிட்டிங் ஜீன்ஸ் மிகவும் சிறந்தது.

Oval Body type

உடலை ஒட்டியிருக்கு ஸ்கின்னி, ஸ்லிம் போன்ற ஜீன்ஸ் வகைகளையும் வயிற்றுப் பகுதியை மேலும் பெரிதாக்கிக் காட்டும் low rise ஜீன்ஸ் வகைகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்