ஆன்லைனில் சரியான ஆடைகளைத் தேர்வுசெய்வது எப்படி?!

ஆன்லைனில் சரியான ஆடைகளைத் தேர்வுசெய்வது எப்படி?!

வெயில், மழை பாராமல் கூட்டநெரிசலில் கடைக்கடையாய் ஏறி, 100 வகையான பொருள்களை நோட்டமிட்டு, கடைசியில் சிறிய கைக்குட்டையை வாங்கிவரும் காலமெல்லாம் மாறிவிட்டது. உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை அனைத்தும் வீட்டுவாசலிலே வாங்கிக்கொள்ளும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை `ஆன்லைன் ஷாப்பிங்' மீது அதிக ஈர்ப்புள்ளது. மக்களுக்காகவே ஏகப்பட்ட வெப்சைட்டுகள் கொட்டிக்கிடக்கின்றன. இதில் உடைகளுக்கான தளங்களில்தான் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன. பிடித்த நிறம், பிடித்த பேட்டர்ன், ஸ்டைல் என நம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்திசெய்திருக்கும் ஆடையை வாங்கலாம் என நினைத்து பணம் செலுத்தும்போது ஏற்படும் சிறு பயம், `எனக்கு இந்த டிரெஸ் சரியா இருக்குமா?' என்பதுதான். உங்கள் உடலமைப்புக்கு ஏற்ற சரியான அளவுடைய ஆடைகளை ஆன்லைனில் எப்படி வாங்குவது என்பதைப் பார்ப்போம்.

Online shopping

ஆன்லைனில் வாங்கும் பொருள்கள் எந்தவிதமான சேதாரங்களும் இல்லாமல் இருக்கும் என்பதற்கான உத்தரவாதமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. பல சமயம் `நாம் ஆர்டர் செய்த பொருள் இதுதானா!' என்ற சந்தேகம்கூட வரும். நிறம், ஸ்டைல் மட்டுமே உறுதிசெய்து வாங்கும் பொருள்கள் ஏராளம். ஆனால், `ஃபிட் (Fit)' என்ற முக்கியமான அடிப்படை ரூல் பார்த்து வாங்கும் பொருள்களில் ஆடை மற்றும் காலணிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆடைகளைப் போட்டுப்பார்த்து வாங்க டிரயல் ரூம் வசதிகள் இல்லையே! எனவே, ஆடைகள் வாங்குவதற்கு முன் உங்களின் உடலமைப்பின் அளவுகளைத் தெரிந்துவைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதற்கு முன், சரியான பேட்டர்னைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

செங்குத்தான (Vertical) கோடுகளுடைய பேட்டர்ன், உங்களை ஒல்லியாகக் காண்பிக்கும். உடல் சற்று பருமானாக இருப்பவர்கள் இதுபோன்ற பேட்டர்ன்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

அதேபோல், கிடைமட்ட (Horizontal) கோடுகளுடைய பேட்டர்ன், உடலைச் சற்று பருமனாகக் காண்பிக்கும். Boxy மற்றும் அதிக Pleat கொண்ட உடைகளும் பருமனாகக் காண்பிக்கும் மாயை உருவாக்கும். எனவே, மெல்லிய உடலமைப்பைக் கொண்டவர்கள் இதுபோன்ற பேட்டர்ன்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

Low-Waist பேன்ட், உடலின் வடிவத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது, ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் உடலமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். அதற்கு, மெஷரிங் டேப் (Measuring Tape) மிகவும் அத்தியாவசியமானது.

உடலை அளக்கும் மெஷரிங் டேப்கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளை துல்லியமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

Size Chart 

1) முதலில் நிமிர்ந்த நிலையில் நிற்கவேண்டும். உறுதிப்படுத்திக்கொள்ள கண்ணாடி முன் நின்று சரிபார்த்துக்கொள்ளலாம்.

2) மேல் கையின் சுற்றளவு, கழுத்துச் சுற்றளவு (இது ஆண்களுக்கு மிகவும் முக்கியமானது), மார்பகச் சுற்றளவு, இடைகளின் (Waist and Hip) சுற்றளவு போன்றவற்றின் அளவுகளை எடுத்து, அனைத்தையும் குறித்துகொள்ளுங்கள்.

3) பிறகு, நீங்கள் எந்த இணையதளத்தில்  உங்களின் ஆடைகளை வாங்க நினைக்கிறீர்களோ அந்தத் தளத்தில் நீங்கள் தேர்வுசெய்திருக்கும் பொருள் பக்கத்தில், `Size' ஆப்ஷனை க்ளிக் செய்தால், `Measurement Chart' ஒன்று காண்பிக்கப்படும். அதில், நீங்கள் குறித்துவைத்திருக்கும் அளவுகளின் criteria சரிசெய்து அதைத் தேர்ந்தெடுங்கள்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கையில், சில குழப்பங்கள் கூடவே தொற்றிக்கொள்ளும். ஏனெனில், சில தளங்களில் Size, chest, waist, hip என எல்லாவற்றிலும் எண்கள் இருப்பதைப் பார்க்கலாம். இங்கே, `Size' காலமுக்குக் கீழ் என்ன எண் இருக்கிறதோ அதைத்தான் தேர்வுசெய்யவேண்டும். `Inches' அல்லது `Cms', S,M,L,XL போன்றவற்றையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த `சைஸ் சார்ட்' தளங்களுக்கு தளம் மட்டுமல்ல, பிராண்டுகளுக்கும் வேறுபடும். எனவே, உங்கள் உடலமைப்பின் அளவுகளைத் தெரிந்துகொண்டு ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள். குறைந்தபட்ச வேறுபாடுகளுடனாவது உடைகள் வந்து சேரும்.

என்னதான் இருந்தாலும், கூட்டநெரிசலில் அடிச்சுப்பிடிச்சு ஆடைகள் வாங்குவதுபோல வருமா பாஸ்! அதுவே ஒரு திருவிழாபோல இருக்கும்தானே ?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!