`க்ராக்ஸ்' - உலகில் அதிகம் வெறுக்கப்படும் ஷூ... ஏன்?! - #Crocs | Crocs is the worlds most hated and loved shoes

வெளியிடப்பட்ட நேரம்: 08:32 (04/02/2019)

கடைசி தொடர்பு:09:50 (04/02/2019)

`க்ராக்ஸ்' - உலகில் அதிகம் வெறுக்கப்படும் ஷூ... ஏன்?! - #Crocs

`க்ராக்ஸ்' - உலகில் அதிகம் வெறுக்கப்படும் ஷூ... ஏன்?! -  #Crocs

பார்க்க அவ்வளவு அழகாக இருக்காது. உலகின் நம்பர் 1 அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பக்கூடிய, சந்தைகளில் எளிதில் கிடைக்கக்கூடிய `க்ராக்ஸ்' ஷூதான் அது. அதில் அப்படி என்ன ஸ்பெஷல்? இப்படிப்பட்ட ஷூவை வடிவமைப்பதற்கான ஐடியா எப்படி இவர்களுக்குத் தோன்றியது? பார்ப்போம்...

க்ராக்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த நண்பர்களான ஸ்காட் சீமன்ஸ், லிண்டன் ஹான்சன் மற்றும் ஜார்ஜ் போடெக்கியர் தங்களின் விடுமுறையை மெக்ஸிகோவில் கழிக்க நினைத்தனர். அந்தச் சமயத்தில், கனடாவில் `Clog' எனப்படும் தடித்த காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் ஸ்காட் வேலை செய்துவந்தார். மூவரும் Boating செல்வதற்காகத் திட்டம் தீட்டியிருந்ததால், ஸ்காட் அவரின் நிறுவன காலணியை அணிய முடிவுசெய்திருந்தார். ஏனென்றால், படகுப் பயண நேரத்தில் அந்தக் காலணி மிகவும் கம்ஃபர்டபிளாக இருக்கும் என்பது ஸ்காட்டின் கணிப்பு. இது மற்ற காலணிகளைப்போல் தண்ணீரில் வழுக்காமல் இருக்கக்கூடும் என்பது கூடுதல் ப்ளஸ். இந்தக் காலணியில் ஸ்ட்ராப் பொருத்தி, முழுவடிவ ஷூ மூன்றைத் தயாரித்தார் ஸ்காட்.

அவர்களின் படகுப் பயணத்தின்போது அவருடன் இணைந்து அவரின் நண்பர்களையும் அந்தக் காலணிகளை அணியச் சொல்லியிருக்கிறார் ஸ்காட். ``பார்க்கவே ரொம்ப அருவருப்பா இருக்கு" என்றுகூறி ஆரம்பத்தில் லிண்டன் மற்றும் ஜார்ஜ் அதை அணிய மறுத்துவிட்டனர். ஆனால், ஸ்காட் விடவில்லை; அதன் நன்மைகளை எடுத்துரைத்து, தன் நண்பர்களைக் கட்டாயப்படுத்தி அணியவைத்தார். மூவருக்கும் இந்தப் போட்டிங் அனுபவம் வித்தியாசமாக அமைந்தது. இதன் பிறகே, மூவரும் இணைந்து இதுபோன்ற ஷூக்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கத் திட்டமிட்டனர். அதன் விளைவாக மியாமியில் சிறியளவில் `வேர்ஹவுஸ்' ஒன்றை முதன்முதலில் திறந்தனர். அதீத செலவுகளைக் குறைப்பதற்காக, படகிலேயே வாழவும் தொடங்கினர். 

2002-ம் ஆண்டு Fort Lauderdale-ல் நடைபெற்ற படகு நிகழ்ச்சி ஒன்றில்தான் இந்த ஷூக்களை விற்க ஆரம்பித்தனர். அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு அவர்களின் கடை, மக்கள் வெள்ளத்தில் நிறைந்தது. படகு சவாரி செய்பவர்கள் மட்டுமல்லாமல் ரெஸ்டாரன்ட், மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலரும் இவர்களின் வித்தியாச ஷுக்களை வாங்கிச் சென்றனர். இதுவே பெரியளவில் தொழில் செய்ய இவர்களை ஊக்குவித்தது.

Crocs shoes

தொடக்கத்தில் பெரியவர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட இந்த ஷூக்கள், மக்களின் வேண்டுகோளுக்கிணங்க வெவ்வேறு வண்ணங்களில் குழந்தைகளுக்கும் வடிவமைக்கப்பட்டன. சிறுவர்களே அணிந்து கழட்டவும் எளிமையாய் இருந்தது. இவர்களின் படைப்பு வெற்றி பெற்றதற்கு குழந்தைகளும் முக்கியக் காரணம் என்றே கருதுகின்றனர். இந்தக் காலணிக்கு முதன்முதலில் இவர்கள் சூட்டிய பெயர் `பீச் (Beach)'. இந்தப் பெயர் மறுக்கப்பட்டதால், `க்ராக்ஸ் (Crocs)' என மாற்றப்பட்டது.

படகு சவாரிக்கென்றே பிரேத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட க்ராக்ஸ், பின்னாளில் ஃபேஷன் காலணியாக உருவெடுத்தது. பொதுவாகவே சந்தையில் இறக்குமதியாகும் பொருள்களை `Fad', `Iconic' என இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். திடீரென டிரெண்டாகி உடனே மறையும் பொருள்களை `Fad' எனவும், பரபரப்பாகப் பேசப்பட்டு பிறகு நிலையான இடத்தைப் பெரும் பொருள்களை `Iconic' எனவும் கூறப்படுகிறது. இந்த அடிப்படை விதிகளைப் பொறுத்துதான் ஒரு பிசினஸின் வெற்றி - தோல்வி இருக்கிறது. இதை கையாளும்விதத்தில்தான் தொழில்முனைவோரின் திறமை நிர்ணயிக்கப்படுகிறது. அதை க்ராக்ஸ் நிறுவனம் மிகவும் அலட்சியமாகக் கையாண்டுவிட்டது.

தேவை அதிகம் இருக்கும் என நினைத்து, அதிகப்படியான உற்பத்தியில் இறங்கி பெரும் இழப்பைச் சந்தித்து, பிறகு மக்களுக்குப் பிடித்தமான வெவ்வேறு டிசைன்களில் வடிவமைத்து நம்பர் 1 காலணியாக மாறியது `க்ராக்ஸ்'. இந்த ஏற்ற இறக்கத்தை, ஒரு முறை இருமுறை அல்ல, பல முறை சந்தித்திருக்கிறது இந்த நிறுவனம். இதனால், வெற்றி - தோல்வி என இதன் வரைபடத்தின் ஓட்டம் வேற லெவல்.

உலகளவில், ஏராளமான விமர்சனங்கள், அதிகப்படியான ரசிகர்கள், வெறுத்து ஒதுக்கும் போட்டியாளர்கள் எனப் பல்வேறு வகையான எதிர்ப்புகளையும் ஆதரவுகளையும் கொண்டிருக்கும் ஒரே காலணி `க்ராக்ஸ்'தான்.

க்ராக்ஸ் ஆல்வேஸ் ராக்ஸ்!


டிரெண்டிங் @ விகடன்