கேஷுவலுக்கு பேஸ்டல், பார்ட்டிக்கு ஆம்ப்ரே... கலக்கல் கலர் காம்போஸ்! | The best color combinations for all types of dresses

வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (21/02/2019)

கடைசி தொடர்பு:09:53 (21/02/2019)

கேஷுவலுக்கு பேஸ்டல், பார்ட்டிக்கு ஆம்ப்ரே... கலக்கல் கலர் காம்போஸ்!

கேஷுவலுக்கு பேஸ்டல், பார்ட்டிக்கு ஆம்ப்ரே... கலக்கல் கலர் காம்போஸ்!

ம் தினசரி வாழ்வின் மிகப்பெரிய டாஸ்க்களில் ஒன்று, சரியான நிறங்களில் இணை ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது. விலை உயர்ந்த ஆடைகளாகட்டும் பிளாட்பாரங்களில் விற்கப்படும் உடைகளாகட்டும், சரியான கலர் காம்பினேஷனில் ஆடைகளை உடுத்தவில்லையென்றால், நிச்சயம் தோற்றத்தின் அழகு குறையும். டிரெண்ட் மற்றும் ஃபேஷனுக்கு ஏற்றபடி கலர் காம்பினேஷன்கள் மாறுபடும். அதுமட்டுமல்லாமல், வயது, பாலினம், ஸ்கின் டோன், கருவிழி மற்றும் தலைமுடியின் நிறம் பொறுத்தும் வேறுபடும். அவற்றில் சில பொதுவான காம்பினேஷன்களைப் பார்ப்போம்.

கலர்

சில அடிப்படை விதிகள்:
நிறங்கள், நம் உடலமைப்பை முற்றிலும் மாற்றிக் காண்பிக்கும் மாயை உருவாக்கும். அந்த வகையில்,

  • பிரைட் மற்றும் லைட் நிறங்கள், தடித்த உடலமைப்பைத் தரும்.
  • டார்க் நிறங்கள், மெல்லிய உடலமைப்பைத் தரும்.
  • ஒரே நிறத்திலான உடைகள் அணிந்தால், உயரமான தோற்றத்தைத் தரும்.
  • வெளிர் நிற ஸ்கின்டோன் உடையவர்கள் ஆரஞ்சு, மஞ்சள் போன்ற பிரைட் நிறங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • மாநிற ஸ்கின்டோன்கொண்டவர்கள் அதிகப்படியான டார்க் மற்றும் லைட் ஷேடு நிறங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • டார்க் நிற ஸ்கின்டோனுக்கு டீப் பிரைட் மற்றும் டார்க் ஷேடுகளைத் தவிர்ப்பது நல்லது.

ஆண்களுக்கான கலர் காம்போஸ்:

பிரவுன், நேவி, நீல நிற பேன்ட்டுகளுடன் வெள்ளை, பேபி பிங்க், லைட் ப்ளூ போன்ற சட்டைகள் பெஸ்ட் காம்போஸ்.

பீஜ், க்ரீம், காக்கி மற்றும் சாம்பல் நிற பேன்ட்டுக்கு, மெரூன், ஊதா, டார்க் ப்ளூ, கறுப்பு போன்ற அடர்ந்த நிற ஷேடு சட்டைகள் சரியான சாய்ஸ்.

ப்ளெய்ன் பேன்ட்டுடன் கட்டம்போட்ட சட்டைகள் மேட்சாகும்.

காக்கி பேன்ட்டுக்கு நேவி ப்ளூ, மெரூன், சிவப்பு, பச்சை, கறுப்பு, வெள்ளை, ஊதா, டீல், பிங்க் மற்றும் சாம்பல் நிற சட்டைகள் சரியான காம்போ.

Men Outfit Combos

கறுப்பு நிற பேன்ட்டுடன் நீலம், மெரூன், ஆரஞ்சு, வெள்ளை, ஊதா, மஞ்சள், லைட் பிங்க் மற்றும் லைட் சாம்பல் நிற சட்டை அணிந்தால் மிடுக்கான தோற்றம் நிச்சயம் பெறலாம்.

சாம்பல் நிற பேன்ட்டுக்கு நீலம், பச்சை, சிவப்பு, கறுப்பு, லைட் பிங்க் மற்றும் டார்க் செர்ரி நிறங்கள் பக்கா மேட்ச்.

அலுவலகங்களுக்கு, வெள்ளை, லைட் ப்ளூ போன்ற நிறங்கள்தான் சட்டைகளுக்கு சரியான தேர்வு. இவற்றுடன் பீஜ், அடர்ந்த சாம்பல் நிற பேன்ட்டுகள் அழகான ஃபார்மல் தோற்றத்தைத் தரும்.

திருமணம் மற்றும் பார்ட்டிகளில், கறுப்புச் சட்டையுடன் வெள்ளை பேன்ட் அல்லது நேவி ப்ளூ சட்டையுடன் காக்கி நிற பேன்ட் அணிந்தால், க்ளாசிக் தோற்றம் நொடியில் பெறலாம்.

பெண்களுக்கான கலர் காம்போஸ்:

குர்தி, புடவை, சல்வார் கமீஸ், ஜீன்ஸ் - டி ஷர்ட் என எந்த உடையாக இருந்தாலும், சரியான காம்பினேஷன் கண்டுபிடிப்பது என்பது கடினமான வேலை. ஏனென்றால், லட்சத்துக்கும் மேற்பட்ட ஷேடுகள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த ஷேடுகளில் கொஞ்சம் மாறினாலும், பலருக்குத் திருப்தியாகவே இருக்காது. ஆனால், இந்த அடிப்படை காம்பினேஷன்கள் என்றைக்குமே உபயோகிக்கக்கூடிய எவர்கிரீன் காம்போஸ்.

மஞ்சள் - பச்சை, வெள்ளை - நீலம், சிவப்பு - நீலம், வெள்ளை - பிங்க், கறுப்பு - பிங்க், நீலம் - பிங்க், ஆரஞ்சு - கறுப்பு, வெள்ளை - கறுப்பு போன்ற காம்பினேஷன்கள் எல்லாவிதமான உடைகளுக்கும் பொருந்தும்.

Women Outfit Combos

அனலாகஸ்:
ஒரே நிற இனத்திலிருந்து இரண்டு அல்லது மூன்று ஷேடுகளைக்கொண்டிருக்கும் காம்போ, அனலாகஸ். ஸ்டைலிஷ் மற்றும் புதுமையான தோற்றம் பெற, இதுபோன்ற நிறங்களைத் தேர்வுசெய்யலாம்.

ஆம்ப்ரே ஷேட்ஸ்:
ஹேர் கலர் முதல் கேக் கலர் வரை அனைத்திலும் ஆம்ப்ரேக்களின் ஆக்கிரமிப்பு தற்போது அதிகமாகவுள்ளது. டார்க் ஷேடிலிருந்து சீராகப் படிப்படியாகக் குறைந்து லைட் ஷேடுக்கு மாறும் கலர் பேட்டர்ன்தான், ஆம்ப்ரே. பார்ட்டி, திருமண நிகழ்வு போன்ற சிறப்பு விசேஷங்களுக்கு இதுபோன்ற காம்போக்களைத் தேர்வுசெய்யலாம்.

மோனோக்ரோம்:
ஆடை, ஆபரணங்கள், இணை ஆடைகள் என அத்தனையும் ஒரே ஷேடில் உடுத்துவது, மோனோக்ரோம் காம்போ. இதுபோன்ற காம்போவைத் தேர்வுசெய்யும்போது சாம்பல், நீலம், வெள்ளை, கறுப்பு போன்ற நடுநிலை நிறங்களைத் தேர்வுசெய்வது சிறப்பு. கேஷுவல் ஆடைகள் என்றால் பேஸ்டல் மற்றும் பிரைட் நிறங்களையும் தேர்ந்தெடுக்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close