நிதி போராட்டமில்லா வாழ்க்கை... இதுதான் சரியான வழி! | Wellbeing Inequality May Tell Us More About Life Than Income

வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (16/03/2019)

கடைசி தொடர்பு:19:15 (16/03/2019)

நிதி போராட்டமில்லா வாழ்க்கை... இதுதான் சரியான வழி!

நிதி நிர்வாகம் மூலம் எவ்வாறு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொண்டால், பலபேருக்கு நிதிச் சிக்கலே இருக்காது. பொருளாதார ரீதியில் போராட வேண்டிய சூழ்நிலையையோ...

நிதி போராட்டமில்லா வாழ்க்கை... இதுதான் சரியான வழி!

ந்தியர்கள், குடும்பத்தை நிர்வகிப்பதிலும் பண விஷயத்திலும் கெட்டிக்காரர்கள் என்றுதானே எல்லோரும் நினைக்கிறோம். ஆனால், அப்படியல்ல என்று `கேலப் ஹெல்த்வேஸ்' என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் 21% பேர் மட்டுமே நிதி தொடர்பான விஷயங்களில் செல்வாக்குடன் இருக்கிறார்கள் எனவும், 49% பேர் நிதி சார்ந்த விஷயம் மற்றும் அதைக் கையாளும்விதத்தில் போராடுகிறார்கள் எனவும், 30% பேர் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

நிதி நிர்வாகம் மூலம் எவ்வாறு வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொண்டால், பலருக்கு நிதிச் சிக்கலே இருக்காது. பொருளாதார ரீதியில் போராடவேண்டிய சூழ்நிலையையோ, சிரமப்படுவதற்கான சூழ்நிலையையோ நாமாகத்தான் ஏற்படுத்திக்கொள்கிறோம். அதற்கு மிக முக்கிய காரணம், போதிய வருமானத்தை ஏற்படுத்திக்கொள்ளாமலோ அல்லது இருக்கும் வருமானத்தை வைத்து வாழப் பழகாமலோ இருப்பதுதான். சரியாகத் திட்டமிடாமல் இருப்பதும் நிதி சார்ந்த போராட்டத்துக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

பிடிப்புடன் வாழப் பழகுங்கள்!

 நிதி

நிதிப் போராட்டங்கள் இல்லாமல் வாழ்வதில் தனிநபரின் நோக்கம், அவரைச் சார்ந்திருப்பவர்களின் எண்ணங்கள், நிதி, சமூகம், உடல்நலம் ஆகிய ஐந்து காரணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எந்தக் காரணமாக இருந்தாலும் சரி, முதலில் ஒருவரின் நோக்கம் சரியானதாகவோ, அதே சமயத்தில் திடமானதாகவோ இருக்க வேண்டும். தினசரி செய்யும் வேலைகளில் புதிது புதிதான விஷயங்களைக் கையாளப் பழக வேண்டும். இப்படிப் பிடிப்புடன் வேலைசெய்யும்போது, நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் நமக்கு நிதி சார்ந்த பிரச்னைகள் அதிகம் வராது.

பாசிட்டிவ் மனநிலை!

வாழ்க்கை

உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் என நம்மைச் சுற்றி இருப்பவர்களின் மனநிலையானது பாசிட்டிவ்வாக இருந்தால், அது நமது நிதி விவகாரத்தில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். உதாரணத்துக்கு, எனக்குத் தெரிந்த ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, வீடு வாங்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசை குறித்து நண்பர்களிடம் அடிக்கடி பேசியதையும், அதன் மூலம் கிடைத்த பாசிட்டிவ் மனநிலையால் வீட்டுக் கடன் பெற்று சீக்கிரமாகவே சொந்தமாக வீட்டை வாங்க முடிந்ததையும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

கடன் வாங்கியதால் அதைத் திருப்பிக் கட்ட வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்கிற யோசனையையும் அவரது நண்பர்கள் அவருக்குத் தந்ததால், மன உளைச்சல் இல்லாமல் வருமானத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்பை அவர் தேடிக்கொண்டதாகவும், சொந்த வீட்டில் வசிப்பதால் உற்சாகமாக இருப்பதாகவும் அவர் சொல்வார். இப்படி நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நமக்காக, நம் வளர்ச்சிக்காக அக்கறைகாட்டும்போது நிதி தொடர்பான விஷயங்களில் போராடவேண்டிய அவசியம் இருக்காது.

தேவையான அளவுக்குப் பணம்!

ஒருவரின் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கான பணம் இருக்கும்போது, நிச்சயம் அவருக்கு மன அழுத்தம் இருக்காது. அப்படிப்பட்ட சூழ்நிலை, அவருக்கு எப்போதும் மனதைரியத்தை வழங்கிக்கொண்டே இருக்கும். ஒவ்வொருவரும் தனக்குத் தேவைப்படுகிற பணம் தன்னிடம் இருக்கிறதா அல்லது பணம் தேவைப்படும்போது அதை கடன் வாங்கிச் சமாளிக்கவேண்டிய நிலையில் இருக்கிறோமா என சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். ஒன்று, தேவைக்குத் தகுந்த பணத்தைப் பெற வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் அல்லது தேவைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். குடும்பத் தேவைகளுக்காகத் திட்டமிட்டுச் செலவு செய்வதும், திட்டமிட்டுச் சேமிப்பதும் ஒருவருக்கு நிதி தொடர்பான பிரச்னையிலிருந்து விடுதலை தரும்.

அனுபவத்தின் மீது செலவு!

 நிதி

நிதி நெருக்கடியால் பெரும்பாலானவர்கள் கஷ்டப்படுவதற்குக் காரணம், மற்றவர்களை ஒப்பிட்டு அவரைப்போல நாமும் செலவு செய்ய வேண்டும் என நினைப்பதுதான். பக்கத்து வீட்டுக்காரர் ஏதேனும் ஒரு பொருளை வாங்கிவிட்டால், நாமும் அதை வாங்க வேண்டும் என நினைக்கிறோம். நம்முடன் பழகுபவர்கள் புதிதாக ஒரு மொபைல்போன் வாங்கிவிட்டால், நம்மிடம் பணமே இல்லை என்றாலும், கடன் வாங்கியாவது அதை வாங்கிவிடுகிறோம். அதனால் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொள்வது உறுதி. எனவே, பிறரை ஒப்பிட்டுச் செலவு செய்யும் பழக்கத்தைத் தவிர்த்துவிடுவது நல்லது.

அதேபோல, பொருள்களின் மீது அதிக செலவுகளைச் செய்யாமல், அனுபவங்களுக்காக அதிகமாகச் செலவுசெய்யும் வழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பயணத்துக்காகச் செலவு செய்யும்போது அதன்மூலம் பல அனுபவங்களைப் பெற முடியும். இந்த அனுபவங்கள் நம் செல்வத்தை அதிகரிக்க கைகொடுக்கும். தனக்குத் தேவை என்கிறபோது தேவையானதை வாங்கிப் பயன்படுத்திக்கொள்வதுபோல, பிறரின் தேவைகளை அறிந்தும் செயல்படத் தொடங்குங்கள். அதற்காக கொஞ்சம் பணத்தைச் செலவு செய்தாலும் தவறில்லை. இதனால் நமக்கு ஏற்படும் மனதிருப்தி, நமது நிதி ஈட்டலுக்கான உத்வேகத்தை அதிகரிக்கும்.

திருப்தி அடையுங்கள்!

நிம்மதி

எந்தவொரு விஷயமாக இருந்தாலும், நாம் இருக்கும் இடம் நமக்குப் பொருத்தமான இடம்தானா என்பதை அவ்வப்போது சோதனை செய்துகொள்ள வேண்டும். சரியான இடம்தான் எனில் திருப்தி அடையுங்கள். பொருத்தமான இடம் இல்லை எனில், அந்த இடத்திலேயே தொடர்ந்து இருப்பது நல்லதல்ல. உங்கள் நிதியைப் பெருக்கி, வாழ்வில் வளம் கூட்டும் இடத்தை நீங்கள் கண்டடைவது அவசியம்.
இத்தனை விஷயங்களும் சீராக நடக்க, உங்கள் உடலானது ஒத்துழைக்க வேண்டும். அதனால் உடல், எண்ணம் இந்த இரண்டையும் எப்போதும் தூய்மையாக வைத்துக்கொண்டிருந்தால், காசுக்காக நீங்கள் கஷ்டப்படவேண்டிய அவசியமே இருக்காது.

இன்றைய நிலையில் ஒரு மனிதனுக்கு முக்கியத் தேவையாக இருப்பது நிதி மட்டுமல்ல, அதைக் கையாள்வதற்கான விழிப்புணர்வும்தான். நிதி விஷயங்களில் போராட்டத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டோம். இதைக் கடைப்பிடியுங்கள், நிச்சயம் உங்கள் வாழ்வு வளமாகும்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close