கணவன் - மனைவி உறவைப் பலப்படுத்தும் முக்கியமான 5 விஷயங்கள்! | Husband and wife quality time enjoyments

வெளியிடப்பட்ட நேரம்: 20:26 (16/03/2019)

கடைசி தொடர்பு:20:26 (16/03/2019)

கணவன் - மனைவி உறவைப் பலப்படுத்தும் முக்கியமான 5 விஷயங்கள்!

உறவுகள் உறுதிபட, இருவரும் அதற்கான நேரத்தை ஒதுக்கி வாழ்க்கையைக் கொண்டாடி மகிழத்தான் வேண்டும். அப்போதுதான் இல்லறம் முழுமையடையும்; உறவின் பலம் கூடும்.

கணவன் - மனைவி உறவைப் பலப்படுத்தும் முக்கியமான 5 விஷயங்கள்!

ன்று காலம்போகும் வேகத்தில், காதலர்களுக்கு மட்டுமல்ல கல்யாணம் ஆனவர்களுக்கும் ஒன்றாகக் கூடி ஆனந்தமாகப் பேசி மகிழ, நேரம் இருப்பதில்லை. அதை அப்படியே விட்டுவிட முடியுமா. உறவுகள் உறுதிப்பட, இருவரும் அதற்கான நேரத்தை ஒதுக்கி வாழ்க்கையைக் கொண்டாடி மகிழத்தான் வேண்டும். அப்போதுதான் இல்லறம் முழுமையடையும்; உறவின் பலம் கூடும். அதற்கு, குவாலிட்டி டைம் கொண்டாட்டங்கள்  ரொம்பவே முக்கியம். கணவன் - மனைவி இருவரும் இணைந்து பின்பற்ற வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள் இங்கே...  

முதல் டேட்டிங் அனுபவம்!

திருமணத்துக்குப் பிறகு புதுமண தம்பதியாக முதன்முதலில் சென்றுவந்த இடத்துக்கு, இருவரும் சேர்ந்து இப்போது செல்லுங்கள். அந்த அனுபவம் தரும் சுகம் அலாதியானது. இந்த வேகமான வாழ்க்கைச்சூழலுக்கு இடையில், முதல் டேட்டிங் அனுபவத்தை மறுபடியும் ஏற்படுத்திக்கொள்ளும்போது, அந்த நாள் ஞாபகங்கள் அலை அலையாய் கண்முன்னே வந்துபோகும். நிகழ்காலச் சுமைகள் சுகமானதாக மாறும். அன்று இருவருக்கும் இடையில் இருந்த அன்பு, அந்நியோன்யம், பாசம் என எல்லாவற்றையும் இன்று இருக்கும் சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது, அது, கணவன் - மனைவிக்குமான உறவைப் பலப்படுத்தும்.

ஒன்றாய் உணவை ருசியுங்கள்!

குவாலிட்டி டைம்

காலை எழுந்ததும் காபி வைத்துக் கொடுப்பதிலிருந்து, பிள்ளைகளை பள்ளிக்குத் தயார்செய்து, உங்களை அலுவலகத்துக்கு அனுப்புவது வரை ஓயாமல் வேலைசெய்யும் மனைவிக்கு, அவரை ஒருநாள் அமரவைத்து நீங்கள் சமைத்துப் போடுங்கள். இது அவர்களை அங்கீகாரப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் சுமையைப் பகிர்ந்துகொள்வது மாதிரியும் அமையும். இந்தச் செயலானது உங்கள் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகப்படுத்தும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கணவனும் மனைவியும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே உணவுகளை ருசியுங்கள். காலை உணவு வேளையை இது மாதிரி அமைத்துக்கொண்டால் அந்த நாள், நிச்சயம் நல்ல நாளே!

அடிக்கடி பயணியுங்கள்!

குவாலிட்டி டைம்

மாதத்துக்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து சுற்றுலா செல்ல திட்டமிடுங்கள். அன்றாட வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட்டு, இப்படித் தனியாக இருவரும் சுற்றுலா செல்வதால் உடலும் மனமும் மிகுந்த உற்சாகமடையும். பயணப்படும்போதுதான் இருவருக்கும் இடையில் இருக்கும் அக்கறையும் அன்பும் அதிகமாகும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை உள்நாட்டுச் சுற்றுலா என்றால், வருடத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒருமுறை என வெளிநாட்டுச் சுற்றுலாவுக்குத் திட்டமிடுங்கள்.

பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளுங்கள்!

குவாலிட்டி டைம்

பரிசுகளுக்கு, பாசத்தைக் கடத்தும் வலிமை அதிகம். அதனால், அவ்வப்போது பரிசுகளைப் பரிமாறிக்கொள்வதுகூட, உறவைப் பலப்படுத்தும். பாராட்டும்படியான செயல்களை கணவன் - மனைவிக்குள் யார் செய்தாலும், அவர்களை வாய்வழியே மட்டும் பாராட்டாமல், அவர்களுக்குப் பிடித்த பொருள்களை அல்லது ஆடை அணிகலன்களை வாங்கி பரிசாகக் கொடுக்கலாம். பெண்களுக்கு, சர்ப்ரைஸ் கொடுக்கும் ஆண்களை அதிகம் பிடிக்கும். பரிசு கொடுக்கும் ஒவ்வொரு முறையும் சர்ப்ரைஸாக கொடுங்கள். இது கணவன் - மனைவிக்குமான உறவை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்.

ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம்!

கணவன் - மனைவி

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிகம் பேர் கவனம் செலுத்துவதில்லை. கணவன் - மனைவி உறவுக்கு இடையில் ஃபிட்னஸ் மிகவும் முக்கியமானது. இருவருக்கும் பிடித்த விளையாட்டுகளைச் சேர்ந்து விளையாடுவது, இருவரும் இணைந்து அதிகாலை வாக்கிங், ஜாக்கிங் செய்வது என ஏதாவது ஒரு ஃபிட்னஸ் விஷயங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்க முயலுங்கள். உதாரணத்துக்கு, சைக்கிளிங் செய்வது இருவருக்கும் பிடிக்கும் என்றால், ஒன்றாக சைக்கிளிங் செய்து ஊரைச் சுற்றி வரலாம். இது உறவுக்குள் குதூகலத்தை ஏற்படுத்தும்.

மேலே சொன்ன விஷயங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள்... நிச்சயமாக கணவன் - மனைவிக்கு இடையில் இருக்கும் பந்தமும் பாசப்பிணைப்பும் பலமானதாக மாறும்!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close