உணவுப் பிரியர்கள் பயணிக்கவேண்டிய 5 முக்கிய இந்திய நகரங்கள்! | 5 Places in India That Are Perfect For Food Lovers

வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (27/03/2019)

கடைசி தொடர்பு:18:57 (27/03/2019)

உணவுப் பிரியர்கள் பயணிக்கவேண்டிய 5 முக்கிய இந்திய நகரங்கள்!

நம் ஊரிலேயே தஹி பூரி கிடைத்தாலும், அதன் பூர்வீகத்துக்குச் சென்று அங்கு இருக்கும் சுவையை ரசிப்பதில் இருக்கும் சுகமே அலாதிதான்.

உணவுப் பிரியர்கள் பயணிக்கவேண்டிய 5 முக்கிய இந்திய நகரங்கள்!

ணவுகள், நம் ஒவ்வொருவருக்கும் பேரானந்தத்தைக் கொடுக்கின்றன. சைவமோ, அசைவமோ ஏதுவாக இருந்தாலும், அது நமக்குப் பிடித்துவிட்டால் அதைத் திரும்பத் திரும்பத் தேடிப் போய்ச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. அப்படிப் பயணிப்பவர்களை, இந்த உலகம் `உணவின் உண்மைக் காதலர்கள்' எனப் போற்றுகிறது. இந்தக் கட்டுரை, உணவுகளைக் காதலித்து, அதை நோக்கிப் பயணிப்பவர்களுக்கானது.

போர்க் சாப்பிட கூர்க் போங்க!

போர்க்

போர்க், எல்லோருக்கும் பொதுவான உணவாக இருப்பதில்லை. வித்தியாசமான சுவையை ஏற்பவர்களுக்கு மட்டுமே இது பிடிக்கும். மற்ற இறைச்சிகளில் இல்லாத சுவையை போர்க் நாக்குக்கு உணர்த்தும் என்பது அதைச் சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். மாட்டு இறைச்சியைவிட போர்க்கை லாகவமாகச் சாப்பிட முடியும். நாவூறும் சுவை என்பார்களே, அதுதான் இதிலிருக்கும் சிறப்பு. பிரமாதமான சுவைகொண்ட, சிறப்பான போர்க் சாப்பிட வேண்டும் என்பவர்கள், கூர்க் வரை செல்லவேண்டி இருக்கும்.

சென்னை மாதிரியான மெட்ரோ நகரங்களின் போர்க் கொடுக்காத சுவையை, கூர்க்கின் போர்க் உணவுகள் நாக்குக்கு விருந்தளிக்கின்றன. கூர்க் ஹோட்டல்களின் பிரதான உணவுகளில் ஒன்றாகவும் போர்க் இருக்கிறது. பல வெரைட்டிகளில் போர்க் உணவுகள் கூர்க்கில் பிரசித்தம். போர்க்போல கூர்க்கில் கைகளால் தயாரிக்கப்பட்ட ஒயின்களும் பெரும்சுவையைக்கொண்டவை. அசைவ ப்ரியர்களே, உங்களின் தேடல் பட்டியலில் இனி கூர்க் போர்க் இடம்பெறட்டும். 

டெல்லி: `ஸ்ட்ரீட் புட்’ ப்ரியர்களின் சொர்க்க பூமி!

ஸ்ட்ரீட் ஃபுட்

நம் தலைநகரான டெல்லியில் ருசித்துச் சாப்பிடும் உணவுகளின் பட்டியலின் நீளம் ரொம்பவே அதிகம். சாலை ஓரங்களில் இருக்கும் சின்னச் சின்னக் கடைகளில்கூட, நம்மால் சுவை மிகுந்த உணவுகளை ருசிக்க முடியும். பல்வேறு மாநிலங்களிலிருந்து சிக்நேச்சர் உணவுகள் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் தஹி பூரி. இதன் ஒரிஜினல் சுவையை அறிந்தவர்கள், அதைச் சாப்பிடுவதற்காக தயங்காமல் டெல்லிக்கு டிக்கெட்களை முன்பதிவுசெய்யலாம்.  

நம் ஊரிலேயே தஹி பூரி கிடைத்தாலும், அதன் பூர்வீகத்துக்குச் சென்று அங்கு இருக்கும் சுவையை ரசிப்பதில் இருக்கும் சுகமே அலாதிதான். அதுமட்டுமல்லாமல் `ஸ்ட்ரீட் புட்’ ப்ரியர்களின் சொர்க்க பூமியாகவும் டெல்லி என்றென்றைக்கும் இருந்துவருகிறது. ஓர் உணவுக்காகப் பயணித்து, ஓராயிரம் உணவுகளைச் சுவைக்க முடியும் என்றால், அது டெல்லியில் சாத்தியமே!.

லக்னோ என்றாலே கெபாப்!

கெபாப்

லக்னோவில் சைவம் சாப்பிடுபவர்களுக்கு ஒருசில ஆப்ஷன்கள்தாம். ஆனால், அசைவ ப்ரியர்களுக்கு அப்படியல்ல. லக்னோ நகரமெங்கும், இறைச்சி உணவுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக, கெபாப் உணவுகளை மக்கள் ரசனையுடன் சமைத்துப் பரிமாறுகிறார்கள். எங்கும் சாப்பிட்டிராத கெபாப்களை லக்னோ நகரம் விருந்தளிக்கிறது. `கெபாப்களில் இத்தனை வகையா?!' என்கிற வியப்பைப் பரிசாக்கும் நகரமாக லக்னோ இருப்பதால், இங்கு உணவு ப்ரியர்கள் அதிகம் பிரவேசிக்கிறார்கள். விதவிதமான சுவையுடன் கெபாப்களை இங்கு சாப்பிட்டு மகிழ முடியும் என்பதோடு, எங்குமில்லா ருசியைக்கொண்ட சிக்கன் பிரியாணிகளும் இங்கு பிரபலம். உணவுகளை உயிரென நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம் லக்னோ என்றால், அது மிகையல்ல. 

கேங்க்டாக்கின் மனம் மயக்கும் மோமோஸ்!

மோமோஸ்

மோமோஸ், பெயரால் மட்டுமல்ல, சுவையாலும் வித்தியாசமான ஓர் உணவு. இதன் தனித்துவத்தால் மற்ற உணவுகளைப்போல எளிதாக இதை யாராலும் செய்துவிட முடியாது. அப்படி நினைத்ததும் செய்து முடித்தால் அந்த மோமோஸ்களில் சுவை இருக்காது. ஆனால், பல இடங்களில் மோமோஸ்களைத் தயாரித்து விற்கிறார்கள். அவற்றில் இருக்கும் சுவையை அறிந்தவர்களே ஆஹா... ஓஹோ என வியப்பார்கள். அப்படி வியப்பவர்கள் கையில் சிக்கிம்மில் இருக்கும் கேங்க்டாக் நகரின் மோமோஸ்கள் கிடைத்தால்? அதன் சுவையில் மூழ்குவது நிச்சயம். சைவர்கள் மற்றும் அசைவர்களுக்கு எனத் தனித்தனியே மோமோஸ்கள் கிடைப்பதால், இரு பிரிவினர்களுக்கும் ஏற்ற உணவாக இது இருக்கிறது. வித்தியாசமான இதன் வடிவம், சாப்பிடாதவர்களையும் சாப்பிடத் தூண்டும். 

அமிர்தசரஸின் அல்டிமேட் குல்சா!

உணவுக் காதலர்களே

அமிர்தசரஸ், தங்கக் கோயிலுக்கு மட்டுமல்ல... பலவகையான உணவுகளுக்கும் பிரபலமான இடம். அவற்றில் பன்னீர் புர்ஜியும் குல்சாவும்தான் அமிர்தசரஸின் சிக்நேச்சர் உணவுகள். பிசா குல்சா, ஒயோ தேரி குல்சா மற்றும் மஸ்ரூம் குல்சா என மொத்தம் 40 வகையான குல்சாக்களை இங்கு ருசிக்கலாம். இது ரொட்டி வகைதான் என்றாலும், ரொட்டிகளுக்கு இடையில் வைத்து உருட்டப்படும் இன்க்ரிடியன்ஸ்தான் இதன் சிறப்பு.

இங்குச் செய்யப்படும் லஸ்ஸிக்களின் சுவையே தனிதான். இந்த லஸ்ஸிக்கள் அமிர்தசரஸின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றன. குல்சாக்களைப்போல, லஸ்ஸிக்களிலும் பிளேவர்கள் அதிகம். குல்சாக்களுடன் லஸ்ஸிக்களையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சுவைக்கும்போது, நாவின் சுவை அரும்புகள் நிச்சயமாய் மலரும்.


டிரெண்டிங் @ விகடன்