இந்த 5 விஷயங்கள் இரவு நிம்மதியான தூக்கத்துக்கு கேரன்டி! | You need good sleep? Do this first!

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (28/03/2019)

கடைசி தொடர்பு:14:42 (28/03/2019)

இந்த 5 விஷயங்கள் இரவு நிம்மதியான தூக்கத்துக்கு கேரன்டி!

காலையில் பேரரசனைப் போலவும் மதியம் சாமானியரைப் போலவும் இரவில் துறவியைப் போலவும் உண்ண வேண்டும் எனப் பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. ஆனால்...

இந்த 5 விஷயங்கள் இரவு நிம்மதியான தூக்கத்துக்கு கேரன்டி!

``ஸ்மார்ட்போன் வந்தாலும் வந்தது, எல்லோருக்கும் நிம்மதியான தூக்கம்போச்சு" என்று புலம்புபவர்கள், தூக்கம் கெடுவதற்கு ஸ்மார்ட்போன் மட்டுமே காரணமல்ல என்பதை முதலில் உணர வேண்டும். அண்ணன் அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு, தன் தம்பியை மாட்டிவிடுவதுபோலதான் இதுவும். நல்ல தூக்கம் பெற, வாழ்வியலில் முறைப்படுத்தவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.  

முன் தூங்கி முன்னெழுங்கள்

நிம்மதியான தூக்கம்

பின்னிரவில்தான் இன்று பலரும் தூங்கச் சொல்கின்றனர். காரணம் கேட்டால், வேலை என்பார்கள். பின்னிரவில் விழித்திருந்து செய்யும் வேலையை அதிகாலை 4 மணிக்குக்கூட செய்யலாம். அதனால்,  வேலைகளை ஒழுங்குப்படுத்தி இரவு 9 மணிக்குள் படுக்கையறைக்குள் புகுந்துவிடுவது நல்லது. இப்படிச் செய்வதால், தூக்கம் கெடாமல் ஆரோக்கியம் காக்கப்படுவதோடு அதிகாலையில் எழும் நல்ல பழக்கமும் உருவாகும். உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நேரத்தில் தமது பிரதானப் பணியைச் செய்கின்றன. நாள் முழுவதும் உடலில் சேரும் கழிவுகளை நீக்கும் வேலையை, நள்ளிரவில் உடல் குளிர்ந்திருக்கும்போதுதான் கல்லீரல் தீவிரமாகச் செய்கிறது. இந்த நேரத்தில் விழித்திருக்கும்போது, உடலில் கழிவு நீக்கம் நடைபெறாமல் மறுநாள் சோர்வாக உணர்வீர்கள். முன்தூங்கி முன்னெழுதலே நமது வழக்கம். இருட்டின் அடையாளமே ஓய்வுதான். அந்நேரம் வேலை செய்வது தவறு. 

இரவு உணவை ஒழுங்குப்படுத்துங்கள்

நிம்மதியான தூக்கம்

காலையில் பேரரசனைப்போலவும், மதியம் சாமானியரைப்போலவும், இரவில் துறவியைப்போலவும் உண்ண வேண்டும் எனப் பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், நம் பழக்கமோ நேரெதிர். முதலில் இரவில் வயிறுமுட்ட உண்பதைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் இரவில் உள்ளுறுப்புகள் நிம்மதியாக ஆற்றலுடன் வேலைசெய்யும். இரவு உணவை தாமதமாகச் சாப்பிடுவதும் தவறு. அதனால் இரவு உணவை 7 மணிக்கு முன்பு வைத்துக்கொள்ளுங்கள். அதிலும் செரிக்க ஏதுவாக பழங்களோ அல்லது லைட்டான உணவுகளோ எடுத்துக்கொண்டால் தூக்கமும் ஜம்மென்று இருக்கும். உடலும் ஆரோக்கியமடையும். 

படுக்கையறையில் நோ என்ட்ரி

நிம்மதியான தூக்கம்

படுக்கையறை உறங்குவதற்கு மட்டுமே. ஆனால், கண்ட குப்பையையும் பொருள்களையும் அடைத்துவைக்கும் இடமாகவே அதைக் கருதுகிறோம். படுக்கையறையில் சாப்பிடுவது, லேப்டாப்பில் வேலைசெய்வது, போன் பேசுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இதைத் தடுக்க, படுக்கையறையில் உள்ள தேவையற்ற பொருள்களை வெளியே எடுங்கள். குறிப்பாக டிவி, கம்ப்யூட்டர், செல்போனை. தேவைப்பட்டால், உங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வைத்துக்கொள்ளலாம். நீங்கள் உறங்க திட்டமிட்டிருப்பது 9 மணிக்கு எனில், 8 மணிக்கெல்லாம் உள்ளே சென்று ரிலாக்ஸ் பண்ண ஆரம்பித்துவிடுங்கள். இவ்வாறு செய்தால் வெகுசீக்கிரமே ஆழ்ந்த தூக்கம் வந்து அணைத்துக்கொள்ளும். 

மன உளைச்சல்களிலிருந்து விலகியிருங்கள்

சிலர் உலகின் எல்லா டென்ஷன்களையும் வீட்டுக்குள் இழுத்து வருவதை வழக்கமாக வைத்திருப்பர். உறங்கப் போகும் முன்னர் விவாத நிகழ்ச்சிகளையோ, டி.வி சீரியல்களையோ அல்லது வன்முறை சார்ந்த படங்களையோ பார்ப்பதன் மூலம் மன அமைதி கெடும். மேலும், சமூக வலைதளங்களுக்குள் சதா மூழ்கியிருந்தால் அதில் நடக்கும் பரபரப்புகள் உங்கள் தூக்கத்தை மொத்தமாகப் பறித்துவிடும்.

சாட்டிங், ஸ்டேட்டஸ், கமென்ட், லைக்ஸ் இவற்றுக்கெல்லாம் ஒரு கால வரையறை வைத்துக்கொண்டு செயல்படுங்கள். இவற்றால் தூக்கத்தைக் கெடுத்துக்கொள்வதால், உங்கள் ஆரோக்கியம்தான் கெடும். ஆக, உறங்கப் போவதற்கு கொஞ்ச நேரம் முன்பே, இவற்றிலிருந்து ஒதுங்கி இருங்கள்.  இசையைக் கேளுங்கள். உங்கள் குழந்தையுடன், துணையுடன், பெற்றோருடன் நல்ல விஷயங்களைப் பேசி மகிழ்ந்திருங்கள். 

இரவில் உடற்பயிற்சிக்குத் தடை

நிம்மதியான தூக்கம்

இரவில் படுக்கும் முன், நன்கு தூக்கம் வரும் எனச் சிலர் உடற்பயிற்சி செய்வார்கள். அது சரியான பழக்கமல்ல. உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது செய்வதால் உடற்பயிற்சியின் பலனை அனுபவிக்க முடியாது. எப்போதும் காலையில் செய்யும் உடற்பயிற்சியே, உற்சாகத்துக்கும் இரவில் நல்ல தூக்கத்துக்கும் துணை நிற்கும். இருள் கவியும் நேரத்தில் உடலைத் தளர்த்தும்படியான விஷயங்களையே செய்ய வேண்டும். மாலை வேளையில் செய்யும் கடின உடற்பயிற்சிகளாலும் கடின வேலைகளாலும், உடலின் இளைப்பாறல் சீர்கெடுகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு சோர்ந்துபோய் தூங்குவதற்கும், இளைப்பாறி ஆழ்ந்து தூங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விரும்பினால், தூங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் ஒரு குளியல்போடுவது நல்லது. படுக்கைக்கு வந்ததும், காற்றை நன்கு சுவாசித்து, கைகால்களை நன்கு தளர்த்திய பிறகு கண்களை மூடுங்கள்.


டிரெண்டிங் @ விகடன்