உங்களை நீங்களே நேசிக்கமுடிவதுதான் வாழ்வின் ரகசியம்! #MorningMotivation | Symptoms and remedies for depression - Morning Motivation story

வெளியிடப்பட்ட நேரம்: 09:48 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:48 (31/03/2019)

உங்களை நீங்களே நேசிக்கமுடிவதுதான் வாழ்வின் ரகசியம்! #MorningMotivation

சராசரி மனிதன்கூட இரண்டு நிமிடத்துக்கு ஒருமுறை எதிர்மறையாகச் சிந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்தச் சிந்தனைகளை மாற்றுவதற்கு, அதிகப்படியான நேர்மறை விஷயங்களைச் செய்யவேண்டும்.

உங்களை நீங்களே நேசிக்கமுடிவதுதான் வாழ்வின் ரகசியம்! #MorningMotivation

ற்போதைய காலகட்டத்தில், மனஅழுத்தம் என்ற வார்த்தைக்கு இரையாகாதவர்களே அதிர்ஷ்டசாலிகள்! அதிகப்படியான மனஅழுத்தம், பலரைத் தற்கொலைக்கே தூண்டுகிறது! உலகளவில் ஆண்டுக்கு சுமார் எட்டு லட்சம் பேர் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதில் 17 சதவிகிதம், இந்தியர்கள். சில வருடத்துக்கு முன்பு `மனஅழுத்தம்', `தற்கொலை' போன்ற வார்த்தைகளைக் கேட்பதுகூட அரிதாக இருந்தது. ஆனால் இப்போது, தினமும் ஒரு செய்தியாவது பார்த்துவிடுகிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதாரச் சிக்கல், உறவுகளில் புரிதலின்மை போன்ற காரணிகளால்தான் அதிகப்படியான மனஉளைச்சலுக்கு மனிதர்கள் ஆளாகின்றனர். இதை சில எளிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், விரைவாகக் கடக்க முடியும்.

Morning Motivation

மனஅழுத்தம் என்றால் என்ன?

அதிகப்படியான துன்பத்தை அனுபவிப்பதுபோல் உணர்ந்தாலோ அல்லது வெளியுலக வாழ்வில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஒரே நினைவில் மூழ்கியிருந்தாலோ, அவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அர்த்தம். இது பொதுவான விஷயம்தான். அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது அதிகப்படியான டிப்ரஷன் அத்தியாயத்தைக் கடந்து வந்திருப்பர். இதில் பெரும்பாலானவர்கள் எளிதில் மீண்டுவிடுவர். பத்தில் ஒருவர் மட்டுமே நோயின் ஆழம் வரை சென்று பல சிக்கல்களை எதிர்கொள்வார்.

அறிகுறிகள்:

ஒருவர் அதிகப்படியான மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்பதை, சில உளவியல் மற்றும் உடல் மாற்றத்தின் அறிகுறிகள் அடிப்படையில் தெரிந்துகொள்ளலாம்.

உளவியல் அறிகுறிகள்:

அவ்வப்போது துயரத்தின் உச்சிக்குச் செல்வது, பிறகு திடீரென இயல்பாக மாறுவது என எண்ண அலைகளின் ஓட்டம் நிதானமற்றிருக்கும். இது சுமார் இரண்டு வாரக் கால அளவில் தொடரும்.

தினம் தினம் செய்யும் வழக்கமான நடவடிக்கைகள் மறந்துபோகும் அல்லது அவற்றில் ஆர்வமில்லாமல் இருக்கும்.

எதையும் சிந்திக்க முடியாமல் அல்லது சிந்திக்கும் திறனே குறைந்து எந்தப் பிரச்னைக்கும் சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறல் ஏற்படும்.

மிகப்பெரிய குற்றம் செய்ததுபோன்ற குற்ற உணர்வும், வாழ்வதற்கே தான் தகுதியற்றவர் என்ற உள்ளுணர்வும் ஏற்படும்.
தன்னை எப்படியாவது தண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது வந்து போகும்.

Morning Motivation

உடல் மாற்றத்தின் அறிகுறிகள்:

பசியின்மை மற்றும் உடல் எடை இழப்பு.

உடல் சோர்வு.

தூக்கமின்மை அல்லது அமைதியற்றத் தூக்கம். சிலர் வழக்கத்துக்கு மாறாக அதிக நேரம் தூங்குவார்கள்.

பேசுவதற்குத் தயக்கம் மற்றும் சுறுசுறுப்பின்மை.

தீர்வு:

ஒருவர் மனஅழுத்தத்தில் இருக்கும்போது, தன்னால் இதிலிருந்து விடுபடவே முடியாது போன்ற எதிர்மறை எண்ணங்களே அதிகம் தோன்றும். இதுபோன்ற சமயங்களில் நம் மனதை வேறு விஷயங்களில் திசை திருப்பிவிடுவதே சரி. உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் இரண்டும், நம் உடலில் ஏற்படும் ரசாயன எதிர்வினைகளின் விளைவுதான். கோபம், சோகம் போன்ற எதிர்மறை உணர்வுகளாகட்டும், அன்பு, சந்தோஷம் போன்ற நேர்மறை உணர்வுகளாகட்டும் அத்தனைக்கும் இந்த ரசாயன மாற்றங்களே காரணம். அதனால், எதிர்மறை உணர்வுகள் மாறவேண்டும் என நினைத்தால், நீங்கள் சிந்திக்கும் முறையை முதலில் மாற்ற வேண்டும்.

Morning Motivation

சராசரி மனிதன்கூட இரண்டு நிமிடத்துக்கு ஒருமுறை எதிர்மறையாகச் சிந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்தச் சிந்தனைகளை மாற்றுவதற்கு, அதிகப்படியான நேர்மறை விஷயங்களைச் செய்யவேண்டும். எதிர்மறையாகச் சிந்திப்பதும் ஒருவித பழக்கம்தான். இந்தப் பழக்கம் மாறுவதற்கு அதிகப்படியான கால அவகாசமும் பொறுமையும் தேவை. துன்பம் தரும் பாதைகளிலேயே எந்நேரமும் பயணம் செய்துகொண்டிருப்பதை முதலில் நிறுத்தவேண்டும். இதுபோன்ற நேரத்தில் பழைய நினைவுகளில் நேரத்தைச் செலவிடத்தான் பெரும்பாலும் பிடிக்கும். ஆனால், அந்தச் சிந்தனையைத் தவிர்ப்பதே சிறந்தது. 

இன்று, இப்போது நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து, முழு கவனத்தையும் இந்த நொடிக்காகச் செலவிடவேண்டும். வருங்காலத்தை அதன் போக்கிலேயே விட்டுவிட்டு, உங்களை நீங்கள் அதிகப்படியாக நொடிக்குநொடிக்கு நேசிக்க ஆரம்பியுங்கள். உடற்பயிற்சி, புதிய படைப்புக்கான செயல்பாடு, புத்தக வாசிப்பு, இசையில் கவனம், உங்களைச் சுற்றி இருப்பவர்களோடு நேரத்தைக் கழிப்பது போன்ற சில செயல்திறன்கள் மூலம், இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து வெளியே வர முடியும்.

உங்களைவிட யாரும் உங்களை அதிகப்படியாக நேசிக்க முடியாது என்றளவுக்கு நேசிக்கத் தொடங்குவதே இதற்கான நிரந்தரத் தீர்வு.


டிரெண்டிங் @ விகடன்