வீட்டுக்குள் நெகட்டிவ் வைப்ரேஷன்... அப்புறப்படுத்த 5 யோசனைகள்! | 5 Ways To improve The Positive Vibrations Of Your Home

வெளியிடப்பட்ட நேரம்: 07:32 (19/04/2019)

கடைசி தொடர்பு:07:32 (19/04/2019)

வீட்டுக்குள் நெகட்டிவ் வைப்ரேஷன்... அப்புறப்படுத்த 5 யோசனைகள்!

புதிதாய் ஒருவர் வீட்டிற்குள் நுழையும்போது, அவரின் நாசி நல்ல நறுமணத்தை நுகர்ந்துவிட்டால், அந்த நறுமணம் அவரை ஆசுவாசப்படுத்திவிட்டால், அவரின் மகிழ்ச்சி மட்டுமல்ல, நம்முடைய மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும்.

வீட்டுக்குள் நெகட்டிவ் வைப்ரேஷன்... அப்புறப்படுத்த 5 யோசனைகள்!

நேர்மறை எண்ணங்கள் இல்லாத ஒருவரிடம் பழகுவது எப்படிச் சிரமமான காரியமோ, அதைவிட பலமடங்கு கஷ்டமான காரியம் நெகட்டிவ் வைபரேஷன் சூழ்ந்திருக்கும் வீட்டில் வசிப்பது. அதனால்தான் வீட்டை எப்போதும் பாசிட்டிவ் சூழலுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

நல்ல வெளிச்சமாக, காற்றோட்டம் அதிகம் இருப்பது போன்ற அமைப்புடன் வீட்டைக் கட்டும்போது, எதிர்மறையான விஷயங்களுக்கு இடம் கிடைக்காது. எங்கும் நிறைந்திருக்கும் இயற்கையால் நேர்மறையான சூழலே வீட்டில் எப்போதும் இருக்கும். ஆனால், இன்று வீடு கட்டுபவர்கள் பட்ஜெட் மற்றும் இடவசதியைப் பொறுத்து இருள் அதிகமாகச் சூழ்ந்திருப்பதுபோலவே வீட்டை அமைத்துக்கொள்கிறார்கள். இது வாழ்க்கை முறைக்கு ஏற்றதல்ல. மகிழ்ச்சிக்கு மாறாக மன அழுத்தத்தைத்தான் இதுபோன்ற வீடுகள் ஏற்படுத்தும். 

சுத்தம், சந்தோஷத்தைத் தரும்!

நெகட்டிவ் வைப்ரேஷன்

சுத்தம், சோறு போடுமோ போடாதோ... எப்போதும் சந்தோஷத்தைத் தரும். இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் லட்சங்களில் வீடுகளை வாங்கி அல்லது லட்சங்களைச் செலவழித்து வீடுகளைக் கட்டி அதைக் கேட்பாரற்று வைத்திருக்கிறோம். இதனால் அசுத்தங்களே அந்த வீட்டை அலங்கரிக்கின்றன. `சிறுகக் கட்டி... பெருக வாழ்' என்று ஒரு பழமொழி உண்டு. கட்டுவதிலேயே வீட்டை பரந்துபட்டுக் கட்டாமல் இருந்தால் நல்லது என்பதுதான் இதன் பொருள். கட்டியது அனைத்தும் பயன்பாட்டுக்கு வர வேண்டும். பயன்படுத்தாமல் ஓர் அறையைக்கூடப் பூட்டிவைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதற்குக் காரணம், பூட்டிவைத்திருக்கும் இடத்தில் எதிர்மறை சக்திகள் நிலைகொள்ளக் கூடாது என்பதற்குத்தான். அதேபோல பயன்படுத்துகிறேன் எனத் தேவையில்லாத பொருள்களைப் போட்டு அடைத்துவைக்கக் கூடாது. உங்களுக்கு ஒரு பொருள் தேவையில்லை என்றால், அதைத் தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்துவிடலாம் அல்லது அப்புறப்படுத்திவிடலாம். என்ன செய்தால் வீடு எப்போதும் சுத்தமாக இருக்குமோ, அதை மட்டும் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரட்டும்!

நெகட்டிவ் வைப்ரேஷன்

``சூரிய ஒளி வீட்டுக்குள் எங்கெல்லாம் படுகிறதோ, அந்த இடம் மகிழ்ச்சி நிறைந்த இடமாக இருக்கும். ஒளியின் பிரகாசம், மனதுக்கு அமைதியைக் கொடுக்கும். அதனால் அங்கு வசிக்கும் அனுபவம் பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்'' என்கிறார்கள் இன்றைய இன்டீரியர் டிசைனர்கள். அதனால்தான் இன்று பெரும்பாலும் கட்டப்படும் வீடுகளில் வென்டிலேஷன் ஜன்னல்கள்கூட பெரியதாக, ஒளியை வீட்டுக்குள் அதிகமாக அனுமதிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. வெளிச்சம் அதிகமாக வரும்படி ஜன்னல்களை வைத்தாலே, காற்றோட்டமும் அந்த வீட்டை எப்போதும் சூழ்ந்திருக்கும். இது வாழ்வியல்முறையை மட்டுமல்ல, வீட்டின் சூழலையும் மாற்றும். வெளிச்சமும் காற்றும் நிறைந்திருக்கும் வீட்டில் எதிர்மறை சக்திகள் மட்டுமல்ல, துன்பம் தரும் எதுவுமே நிலைக்காது.

இல்லமெல்லாம் இண்டோர் பிளான்ட்கள்!

நெகட்டிவ் வைப்ரேஷன்

இண்டோர் பிளான்ட் கான்செப்ட்களை இன்றைய இன்டீரியர் டிசைனர்கள் அதிகமாகப் பரிந்துரைக்கிறார்கள். இதற்குக் காரணம், ஆரோக்கியமான சூழலை வீட்டுக்குள் உருவாக்குவதுதான். சின்னச் சின்ன செடிகளை வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை என எல்லா இடங்களிலும் வைக்கும்போது, எதிர்மறை விஷயங்கள் வீட்டை மட்டுமல்ல மனதிலிருந்தும் அகலும். கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த இண்டோர் பிளான்ட் கான்செப்ட், குடும்ப உறவுகளின் மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தரும். 

வீட்டை வாசனைக்கு வசப்படுத்துங்கள்!

புதிதாய் ஒருவர் வீட்டுக்குள் நுழையும்போது, அவரின் நாசி நல்ல நறுமணத்தை நுகர்ந்துவிட்டால், அந்த நறுமணம் அவரை ஆசுவாசப்படுத்திவிட்டால், அவரின் மகிழ்ச்சி மட்டுமல்ல, நம்முடைய மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். வீடெங்கிலும் வாசனையைக் கமழச் செய்யுங்கள். அந்த வாசனை எதிர்மறை எண்ணங்களுடன் வீட்டுக்குள் நுழையும் நபரையும் சாந்தப்படுத்தும். 

மனம் மயக்கும் மெல்லிய இசை!

நெகட்டிவ் வைப்ரேஷன்

எப்போதும் ஒலித்துக்கொண்டிருப்பது போன்ற இசை அமைப்பை வீட்டுக்குள் ஏற்படுத்துங்கள். அந்த இசை மங்கல வாத்தியங்களின் ஓசையாகக்கூட இருக்கலாம். இது மாதிரியான ஓசையின் சூழலுக்குள் ஒன்றும்போது, மனம் பெரும் அமைதியை அடைகிறது; அந்த வீடே பெரும் மகிழ்ச்சி சூழ்ந்த இடமாகிறது. புல்லாங்குழல் இசையாக இருந்தால் இன்னும் சிறப்பு. நாள் முழுவதும் இசையின் ஒலி கேட்க வேண்டும் என்பதில்லை... காலை, மாலை என இரு நேரமும் மெல்லிய இசையை பரவச்செய்தால் அமைதி அங்கு நிலைப்பது நிச்சயம். 


டிரெண்டிங் @ விகடன்