காஞ்சிபுரம் இட்லி, கரூர் கரம்... தமிழ்நாட்டின் சில சிக்நேச்சர் உணவு வகைகள்! | From Kanchipuram Idly to Karur Garam here are some signature dishes of Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (11/05/2019)

கடைசி தொடர்பு:16:29 (11/05/2019)

காஞ்சிபுரம் இட்லி, கரூர் கரம்... தமிழ்நாட்டின் சில சிக்நேச்சர் உணவு வகைகள்!

காஞ்சிபுரம் இட்லி, கரூர் கரம்... தமிழ்நாட்டின் சில சிக்நேச்சர் உணவு வகைகள்!

பாரம்பர்ய உணவு வகைகளை அதன் ருசி மாறாமல் இன்றும் வழங்கிக்கொண்டிருக்கும் மாநிலங்களில் முதல் இடம் வகிப்பது, தமிழ்நாடுதான். இது உணவு வல்லுநர்களின் இருப்பிடம் எனவும் கூறலாம். சமையலறையிலிருந்து வரும் மணமே போதும், அந்த உணவின் ருசியைச் சுவைப்பதற்கு. அந்த வகையில் தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் உள்ள சிக்நேச்சர் உணவு வகைகளைப் பார்க்கலாம்.

சிக்னேச்சர் உணவு வகைகள்

காஞ்சிபுரம் இட்லி:

இட்லியைக் குறிப்பிடாமல் தமிழ்நாட்டு உணவு வகை முடிவு பெறாது. திரவ உணவிலிருந்து திட உணவுக்கு மாற்றம் பெரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் உகந்த உணவு இட்லி. பல சுகாதார நலன்கள்கொண்ட இட்லி, இந்தோனேஷியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தது என்றாலும், காஞ்சிபுரம் இட்லி முற்றிலும் வித்தியாசமானது. பல்லவர்கள் காலத்திலிருந்தே காஞ்சிபுரம் கோயில்களில் வழங்கப்பட்ட இந்த இட்லியின் சிறப்பம்சம், இதில் சேர்க்கப்படும் பொருள்களும் அதன் தயாரிப்புமுறையும்தான். நீளமான உருளை வடிவ மூங்கில் அச்சினுள் மந்தாரை இலையைப் பரப்பி, அரிசி, உளுந்து, சீரகம், வெந்தயம், மிளகு போன்ற பொருள்கள் சேர்த்து அரைக்கப்பட்ட மாவை ஊற்றி, வேகவைத்தால் காஞ்சிபுரம் இட்லி தயார். சட்னி, சாம்பார் போன்றவற்றோடு சாப்பிடலாம். வழக்கமான இட்லியைவிட இது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.

Kanchipuram Idli

நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு:

தமிழ்நாடு - கேரளா பாரம்பர்ய உணவுகளின் கலவையே நாஞ்சில் நாட்டு உணவு வகைகள். அவற்றில் நாகர்கோவில் அல்லது நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு மிகவும் ஸ்பெஷலான உணவு வகை. எந்த மீன் வகை வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தக் குழம்பில் சேர்க்கப்படும் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்தான், இந்த உணவின் தனித்தன்மையான சுவையைத் தருகிறது. மேலும், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் மாவட்டங்களில் கிடைக்கும் உளுந்தன்சோறு, தீயல், கின்னத்தப்பம் போன்ற பதார்த்தங்களையும் தவறாமல் சுவைத்துப்பாருங்கள்.

Nanjil Naatu Fish Gravy

கரூர் கரம்:

சிப்ஸ், முறுக்கு போன்று கடைகளில் கிடைக்கும் தின்பண்டங்களிலிருந்து முற்றிலும் வித்தியாச ருசியுடன் கரூரில் பரபரப்பாக விற்பனையாகும் கரம் (Garam), நிச்சயம் ஒருமுறையாவது அனைவரும் ருசிக்கவேண்டிய தின்பண்டம். பார்ப்பதற்கு வடஇந்தியாவின் `பேல் பூரி'போல இருந்தாலும், இவர்கள் உபயோகப்படுத்தும் சட்னி முற்றிலும் தென்னிந்தியச் சுவைக்கானது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரம் கடைகள் கரூரில் உள்ளன. ஏராளமான கடைகளை தெருவில் செல்லும்போதே காண முடியும். கரம் மட்டுமல்ல, அவற்றோடு `செட்' எனப்படும் நொறுக்கல் தின்பண்டத்தையும் சுவைக்க மறந்துவிடாதீர்கள்.

Karur Garam

பள்ளிபாளையம் சிக்கன்:

கொங்குநாட்டின் பாரம்பர்ய கைமணம் மாறாத காரசாரமான ஓர் உணவு வகை, ஈரோடு மாவட்ட பள்ளிபாளையம் சிக்கன். இந்த உணவில் இவர்கள் சிவப்பு மிளகாயைத் தவிர வேறு எந்த மசாலா வகையையும் சேர்ப்பதில்லை. இவற்றோடு சிறிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்ப்பதால் மேலும் சுவையைக் கூட்டுகிறது. பெரும்பாலான உணவகங்களின் தற்போது இந்த உணவு வகை கிடைத்தாலும், அதன் அசல் மணம் மாறாமல் கிடைப்பது பள்ளிபாளையத்தில் மட்டுமே.

Pallipalaiyam Chicken

விருதுநகர் எண்ணெய் பரோட்டா:

கர்மவீரர் காமராஜர் ஏராளமான நலத்திட்டங்களைத் தமிழ்நாட்டில் கொண்டுவந்திருந்தாலும், மக்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்றது `மதிய உணவுத் திட்டம்தான்'. பசியின் வலியும் படிப்பின் அருமையும் நன்கு அறிந்திருந்த காமராஜரின் இந்தத் திட்டம், பலரின் வயிற்று மற்றும் அறிவுப்பசியை தீர்த்தது. அப்படிப்பட்ட தலைவரின் சொந்த ஊரான விருதுநகரில் `எண்ணெய் பரோட்டா'தான் ஸ்பெஷல். மைதாமாவு கலவையை எண்ணெய்யில் நன்கு ஊறவைத்து, பிறகு காய்ந்த எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் எண்ணெய் அல்லது பொரித்த பரோட்டா ரெடி!

Virudunagar Oil Parota

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சிக்நேச்சர் உணவு வகைகள் உள்ளன. அந்த வகையில் உங்க ஊர் ஸ்பெஷாலிட்டி என்ன? 


டிரெண்டிங் @ விகடன்