Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேலைன்னா காஞ்சிபுரம் பட்டு மட்டும்தானா? இதெல்லாமும் பாருங்க! #10TypesOfSareeFromTamilnadu.

 

சேலை என்றால் காஞ்சிபுரம், தர்மாவரம், ஆரணி பட்டுப்புடவைகள் தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் தமிழகத்தில் சிறப்பு மிக்க காட்டன் புடவைகள் ஏராளம் தயாராகிறது. ஆந்திரா, கர்நாடகா என இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த சேலைகளுக்கு ரசிகைகள் உண்டு. அவ்விதமான 10 சேலை ரகங்களைப் பற்றி பார்க்கலாம். 

காரைக்குடி கண்டாங்கி சேலை

உறுத்தலற்ற எளிய நிறங்கள், பாரம்பரியமான டிசைன்கள், உடம்பை வதைக்காத தரம், வெயிலுக்கும் குளிருக்கும் தகுந்த இதம், கசங்காத தன்மை... இப்படி கண்டாங்கிச் சேலைக்கு பல தனித்துவங்கள் உண்டு. காரைக்குடியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இன்றளவும் கண்டாங்கி நெசவு உற்சாகமாக நடந்து வருகிறது. சிறப்பு என்னவென்றால் கண்டாங்கி சேலை நெசவு செய்யும் அத்தனை பேரும் பெண்கள். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் செட்டி நாட்டு ஆச்சிகள், இந்த கண்டாங்கி சேலையைத் தான் உடுத்துவார்கள். கண்டாங்கி சேலையின் ஸ்பெஷலே பார்டர்-தான். டைமண்ட், கொடி, இலை, ருத்ராட்சம், கோபுரம், அன்னப்பட்சி, தாமரைப்பூ, யானை, மயில் என ஏகப்பட்ட உருவங்கள் வரும். 1000 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. 

 

விளந்தைக் ஜரிகை காட்டன்

ஆண்டிமடத்தில் இருந்து 3.கி.மீ தொலைவில் உள்ள விளந்தை கிராமத்தில் தயாராகும் இந்த சேலை ஆந்திரப் பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது. சீரான நீளத்தில் ஜொலிக்கும் பார்டர்கள் சேலையின் அழகைக் கூட்டுகின்றன. சில ரகங்களில் உடலையும் ஜரிகையால் அலங்கரிக்கிறார்கள். காட்டன் நூலை பாவாகவும், ஜரிகையை ஊடையாகவும் கலந்தும் நெய்கிறார்கள். விளந்தை சேலைகளின் சிறப்பே, அதன் நம்பமுடியாத மென்மைதான். 200கிராம் தான் எடை. காற்றுப் போல இருக்கும். புட்டா, ஜரிகை வேலைப்பாடுகளுக்கு தகுந்தவாறு 400 முதல் 1500 ரூபாய் வரை விற்கிறார்கள். 

 

கும்பகோணம் ஜங்க்ளா சேலை

முதல்தர பட்டு-நூலின் மினுமினுப்பு.. கண்ணைக் கவரும் பழமையான டிசைன்கள்.. உடல்-பகுதி எங்கும் ஜொலிக்கும் கற்கள்.. ஜங்க்ளா சேலையில் பெண்களை ஈர்க்க இதுபோல ஏராளமான அம்சங்கள் உண்டு. கும்பகோணத்தில் வாழும் சவுராஷ்டிர மக்களின் தயாரிப்பு. ஒரு ஜங்க்ளா சேலையில் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கற்கள் வரை பதிக்கப்பட்டிருக்கும். கற்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சேலையின் விலை. ஜங்க்ளா சேலையை விரித்துப் பார்த்தால் கற்களின் பொலிவே வாங்கத் தூண்டுகிறது. மணப்-பெண்கள் உடுத்தினால் மண்டபம் ஜொலிக்கும். விலை, 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை. 

 

வடமணப்பாக்கம் காஞ்சிக் காட்டன் சேலை

பட்டுக்குப் பெயர்போன காஞ்சிபுரத்தில் இருந்து அய்யங்கார்குளம் வழியாக கலவை செல்லும் சாலையில் உள்ள குட்டி கிராமமான வடமணப்பாக்கம் தான் காஞ்சிகாட்டன் சேலைகளின் உற்பத்தித் தலம். நூலின் மென்மை, வடிவமைப்பு, பார்டர் டிசைன்... இவைதான் காஞ்சி காட்டன் சேலைகளை வித்தியாசப்படுத்துகின்றன. பூக்கள், பறவைகள், மரங்கள் என பார்டர் பகுதியில் நெசவாளியின் கற்பனை விரிந்து கிடக்கிறது. 100 சதவிகிதம் காட்டன். உடம்பில் சேலை இருப்பதே தெரியாத அளவுக்கு உறுத்தலற்ற மென்மை தான் காஞ்சி காட்டனின் ஸ்பெஷல். 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

 

ஆரணி காட்டன் பட்டு

பட்டு, பெண்களை தேவதைகளாக உருமாற்றும் என்றாலும், அதை அணிவதில் சில அசௌரியங்களும் உண்டு. விம்ம வைக்கும் விலை, உடுத்துதலில் உறுத்தல், பராமரிப்பதில் சிரமம்.. இப்படி ஏகப்பட்ட சிரமங்கள். இதற்கு மாற்றாக, பட்டோடு, பருத்தி சேர்த்து நெய்யப்படும் சேலைதான் காட்டன்பட்டு. குறைந்த எடை, எளிதான பராமரிப்பு, வாங்கத் தகுந்த விலை, கற்பனைக்கு எட்டாத டிசைன்கள் என காட்டன்பட்டு, பெண்களின் விருப்பத்தை ஈர்க்க பல காரணங்கள் உண்டு. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திற்கு அருகில் உள்ள ஆரணி தான் இதன் உற்பத்தித்தலம். 500 முதல் 550 கிராம் எடை தான். உடம்பில் சுற்றினால் சுமை தெரியாது. துவைக்கலாம், மடிக்கலாம். நூல் பிரியாது. 1000 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

 

கோவிலூர் கட்டாரிக்கண்ணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோவிலூரில் நெய்யப்படும் இந்த சேலை, வடிவமைப்பில் ஆந்திராவின் போச்சம்பள்ளி சேலைகளைப் போலவே இருக்கும். ஒவ்வொரு இழையிலும் கலைநயம் ததும்புகின்றன. பார்டரில் மட்டுமின்றி சேலையின் முந்தானை, உடல் என எல்லாப் பகுதிகளுமே ஓவியக்கூடமாக இருக்கின்றன. வெயில் காலத்திலும் உடலை உறுத்தாது என்கிறார்கள். 300 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

 

கோடாலிக்கருப்பூர் அடர்நிற காட்டன் சேலை

கும்பகோணம்-அரியலூர் சாலையில் அணைக்கரையை ஒட்டியுள்ள சிறிய கிராமமான கோடாலிக்கருப்பூரின் நெசவுத்தொழிலை ஒரு காலத்தில் உலகமே திரும்பி பார்த்தது. இந்தியா மட்டுமின்றி பிறநாட்டு மன்னர்களும் தங்கள் பட்டத்து அரசிகள் கோடாலி கருப்பூர் சேலையை அணிய-வேண்டும் என்று விரும்பிய காலம் ஒன்று உண்டு. லண்டன், விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம், மும்பை சத்ரபதி சிவாஜி மியூசியம், அகமதாபாத் காலியோ மியூசியம், டில்லி நேஷனல் மியூசியம் போன்ற புகழ்-பெற்ற மியூசியங்-களில் கோடாலி கருப்பூர் சேலை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இடையில் பொலிவிழந்து போன இச்சேலை ரகங்களை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது மத்திய ஜவுளித்துறை. பஞ்சு போன்ற மென்மை, பார்வையை உறுத்தாத அளவுக்கு அளவான ஜரிகை வேலைப்பாடுகள் என தனித்துவமாக இருக்கிறது. அடர்ந்த நிறம்தான் தற்போதைய கோடாலி கருப்பூர் சேலைகளின் அடையாளம். 450 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்கிறார்கள்.

 

பளபளக்கும் பட்டீஸ்வரம் கோர்வைப்பட்டு

உயரிய பட்டு நூலில், உடல் ஒரு வண்ணத்திலும், பார்டர் ஒரு வண்ணத்திலும் நெய்யப்படும் இச்சேலைகள் இந்தியா கடந்து பலநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறைவான எடை, கவர்ச்சிகரமான வண்ணங்கள், அழகான புட்டா வேலைப்பாடுகள் என பல தனித்தன்மைகளைக் கொண்டது இந்த சேலை. பழமையான கோவில்களில் இருக்கும் சிற்பத்தொகுப்புகள், ஓவியங்களை பார்டர்களில் வடிக்கிறார்கள். முந்தானையில் மயில்கள், அன்னங்கள் சிறகடிக்கின்றன. இறைவன் திருவுருவங்களும் இடம் பெறுகின்றன. வேலைப்பாடுகளுக்குத் தகுந்தவாறு 2700 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய்வரை விற்கிறார்கள். 

 

செங்குந்தபுரம் வேங்கடகிரி காட்டன்

வேங்கடகிரி சேலையின் ஜரிகை மற்றும் டிசைன் வேலைப்பாடுகள் பட்டுச்சேலை போன்றவை. முந்தானை, பார்டர் பகுதிகள் மட்டுமின்றி சேலை முழுவதுமே ஜரிகை வேலைப்பாடுகள் உண்டு. வயதான பெண்களுக்கான வெள்ளைச் சேலைகள், முந்தானையில் வெறும் புட்டா மட்டும் போட்ட சாதாரண சேலைகளும் இந்த ரகத்தில் உண்டு. கோடைக்குத் தகுந்த சேலை. 300 ரூபாய் முதல் 1300 ரூபாய் வரை விற்கிறார்கள். 

 

சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி சேலை

கும்பகோணம் அருகில் உள்ள சிக்கல்நாயக்கன்பேட்டையில் தயாராகும் கலம்காரி சேலைகளுக்கு உலகெங்கும் ஏக வரவேற்பு. வெள்ளைத் துணியில் இயற்கையான வண்ணம் கொண்டு கைகளால் வரைந்து உருவாக்கப்படுகிறது இந்த சேலை. 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த சேலை சிதைந்து போகாது என்பது இதன் சிறப்பு. மூலிகைகள் கலந்திருப்பதால் உடம்புக்கும் பாதுகாப்பு. 4 ஆயிரம் ரூபாய் முதல் கிடைக்கிறது.

 வெ.நீலகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement