Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெற்றிக்கு நிறம் தடையல்ல - #Saynotofairnesscream

           

‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்டா’. இது ஒரு தமிழ் படத்தோட வசனம்.
‘சிவாஜி’ படத்துல, ரஜினிகூட இருக்குற நிறத்தைவிட இன்னும் அதிகபடுத்தணும் என்று அவர் எடுக்கிற முயற்சியைப் பார்த்திருப்போம்.

ஒவ்வொருவரும் இருக்குற நிறத்தைவிட இன்னும் அதிக வெள்ளை ஆகணும்னு நினைச்சு, மார்க்கெட்ல் கிடைக்கிற எல்லா அழகு சாதன கிரீம்களையும் (Fairness cream) வாங்கிப் பயன்படுத்துறோம்.

வெள்ளையா இருந்தாத்தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என பொய்யான ஓர் எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கு. ‘அவங்களுக்குத்தான் நிறைய விஷயங்களைப் பற்றி அறிவும் தெளிவும் இருக்கும். நிறம் குறைந்து உள்ளவர்களுக்கு எதைப் பற்றியும் தெளிவு இருக்காது’ என நம்மைநாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.

ஓர் ஆய்வில், ‘ஒருவர் தன்னை அழகாக வெளிக்காட்டிக்கொள்வதால், அவர் நிதி, சமூகம், அறிவார்ந்த செயல்கள், அரசியல் ரீதியாக பல இடங்களில் சாதிக்க முடியும்’ என  கண்டறிந்து உள்ளனர். அப்படி உள்ளவர்களுக்குப் பொதுவாகவே தங்களைப் பற்றிச் சுய நம்பிக்கையும், எல்லா விஷயங்களை முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். இந்த நம்பிக்கையும், முயற்சியும் வெற்றியில் முடியுமா என்பது தெரியாது. இருப்பினும், செய்யும் வேலைகளில் பாசிட்டிவ் ஆன எண்ணம் இருந்தால் அது வெற்றியில் முடிய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

கறுப்பு ஏழையின் நிறம் அல்ல!

இங்கு அழகு என நாம் பேசுவது நிறத்தை அல்ல... நம்மை நாம் மற்றவர்களிடம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதுதான். ஒருவரின் உடை, பேச்சு, தன்னம்பிக்கைதான் அவருடைய வெற்றியைத் தீர்மானிக்கும். நிறம் குறைந்தவர்கள் எங்கேயும் சாதிக்காமல் இல்லை. வெற்றி, நிறத்தைப் பொறுத்து அமைவது இல்லை என்பதை ஏற்கக்கூட நம்மில் பலருக்கு மனம் வருவது இல்லை. கறுப்பு என்பது ஏழையின் நிறமோ, தோற்பவர்களின் நிறமோ அல்ல... அமெரிக்க அதிபர் ஒபாமா கறுப்பு நிற சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அவர் அந்த நாட்டை 8 வருடங்கள் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். உலகத்திலேயே அதி வேகமாக ஓடக்கூடிய உசேன் போல்ட் கறுப்பு நிறத்தவர்தான்.

தற்போதைய சூழலில் பலரும் நிறத்தை மெருகேற்றிக்கொள்ளும் எண்ணத்தில் கடைகளில் விற்கப்படும் கிரீம்கள், அழகு நிலையங்களில் உபயோகிக்கப்படும் பிளீச்சிங் பவுடர் போன்றவைகளைப் பயன்படுத்தித் தங்களின் சருமத்தை வீணாக்குகிறார்கள். விளம்பரங்களில் காட்டப்படுவது உண்மை என நம்பி அதைப் பயன்படுத்தி அவர்களின் பணம் மற்றும் நேரத்தைச் செலவு செய்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று. விளம்பரங்களில் செய்யப்படும் கிராஃபிக்ஸ் போன்று நம் முகத்தில் செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

 

       

ஒவ்வோர் ஆண்டும் அழகு சாதன கிரீம்களின் வியாபாரமும், அதைத் தயாரிக்கும் கம்பெனிகளும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. மக்கள், இன்றைக்கும் இந்த கிரீம்கள் தங்களின் சருமத்தை மெருகேற்றும் என நம்புகிறார்கள். கம்பெனிகளின் வியாபாரம் அதிகரிக்க அவர்கள் செய்யும் விளம்பரங்களை எல்லா துறையிலும் சாதிக்கும் பலரும் நம்புகிறார்கள். அதைப் பயன்படுத்துவதால் எந்தவிதப்  பயனும் இல்லை என்று தெரிந்தும், கௌரவத்துக்காக ஒரு சிலர் பயன்படுத்துகிறார்கள். இது 3 ஆயிரம் கோடி வியாபாரச் சந்தையாகவே மாறிவிட்டது.

ஹைட்ரோ குயினோன்!

கானா நாட்டின் உணவு மற்றும் ஒளடதங்கள் அதிகார துறை , இந்தத் தோல் வெளுக்கும் கிரீம்களில் ஹைட்ரோ குயினோன் (hydroquinone) மூலப்பொருள் இருப்பதால், அதை இந்த மாதம் தடை செய்யும்படி அறிவித்துள்ளது. ஹைட்ரோ குயினோன் என்ற மூலப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளதால், அவை புற்றுநோயை உண்டாக்கக் கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஹைட்ரோ குயினோன் சேர்க்கப்பட்ட பொருள்களை அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தடை செய்துள்ளனர்.

நடந்து முடிந்த ஒலிம்பிக்கில்கூட பெண்களின் முயற்சியும், கடின உழைப்பும்தான் அவர்களை வெற்றி அடைய செய்ததே தவிர, விளம்பரங்களில் காட்டப்படும் முகத்துக்குப் பூசப்படும் கிரீம்கள் அல்ல...

மக்களுக்கு வெள்ளை நிறத்தின் மீது ஒரு மோகம். அதனால், அதை மேம்படுத்த கிடைக்கும் கிரீம்களை அதிகம் நம்புகிறார்கள். வெள்ளையாக இருப்பது ஒரு நிறமே தவிர, அது அரசியல் என்பது இல்லை. வெற்றிபெற்றவர்கள் அனைவரும் வெள்ளை நிறத்திலும் இருப்பது இல்லை... வெள்ளையாக இருப்பவர்கள் எல்லாரும் வெற்றிபெறுவதும் இல்லை. திறமையும், முயற்சியும்தான் ஒருவரை உயரவைக்கும் என நம்புங்கள்.

அழகு சாதன கிரீம்கள் டாக்டரின் பரிந்துரை இன்றி பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:

தோல் சுருக்கம்
முகத்தின் நிற மாற்றம்
காயங்கள்
சூரியக்கதிர்களால் பாதிப்பு
தேவையற்ற ரோமம் முகத்தில் வளர்தல்
தோல் அலர்ஜி
தோல் புற்றுநோய்

- சு.நந்தினி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement