வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (07/12/2016)

கடைசி தொடர்பு:11:42 (07/12/2016)

பொசஸிவ்னெஸ்... ஆண், பெண் உறவில் எங்கு வேர்ப்பிடிக்கிறது?

பொசஸிவ்னெஸ்

'இந்த ஆணைத்தானே நேசித்தோம், ஏன் இப்போது பிடிக்கவில்லை?', 'இந்தப் பெண்ணை தேவதையாக கொண்டாடினோம்... இப்போது பேச வந்தாலே பேயைக் கண்டதுபோல அலறி அஞ்சி ஓடவேண்டி இருக்கே...' என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் அவ்வப்போது சுய அலசலில் தோன்றும். உண்மையில், சில சைக்கோ மனிதர்களைத் தவிர, பொதுவாக யாரும் யாரையும் வேண்டுமென்றே  நிராகரிப்பதில்லை.

அன்பு என்பது தானே சுரக்க வேண்டும்... பால்போல. எப்படி வறண்ட மடியில் 'கற கற' என்று சொல்லி பாலைச் சுரக்கவைக்க முடியோதோ, அப்படித்தான் வற்றிய இடத்தில் அன்பைத் தேடுவதும். அதுவே சுரந்து வரவேண்டும்... அதுவே நிரந்தரம். பீறிடும் உணர்வு அது. அதை வற்புறுத்தலில் என்றும் பெற்றுவிடவே முடியாது.

'ஏன் வற்றுகிறது அன்பு, நேசம்? எனக்கு மட்டும் சுரந்துகொண்டே இருக்கிறதே..? ஒரு தாய் தன் குழந்தையை நேசிப்பதுபோல அவனை/அவளை, அவன்/அவள் செய்யும் தவறுகளுடன் நேசிக்கிறேனே? என்னை விட்டுப்போக  மனம் எப்படி வரும்?' என்று ஆயிரமாயிரம் கேள்விகள், சந்தேகங்கள்.

முதலில் அடிப்படையான விஷயங்களைப் பார்ப்போம். ஆண், பெண் உறவில் எவற்றால் விரிசல் ஆரம்பிக்கிறது? சந்தேகம், அதிகபட்ச தலையீடு, இடைவெளி இல்லாமை, நேரமின்மை, வேலையில் அல்லது  தான் சாதிக்க வேண்டிய துறையில் ஆர்வம், அதற்கான  முயற்சியில் மூழ்கி  மற்ற எதற்கும் நேரம் ஒதுக்காமை, மூன்றாம் நபரின் தூண்டுதல், ஈர்ப்பு, மோகம், காமம் மற்றும் பிரமிப்பு குறைதல்... என்று பல காரணிகள் இருப்பினும் அவற்றுள் ஒரு முக்கியக் காரணிகள்... பொசஸிவ்னெஸ்... பொறாமை.

பொசஸிவ்னெஸ், பொறாமை இரண்டுக்கும் மெல்லிய கோடு இடைவெளி இருக்கிறது. சொல்லப்போனால், பொசஸிவ்னெஸ் என்பது துணை மீதான அதீத அன்பால் ஏற்படுவது என்பதைவிட, துணையுடன் பழகும் ஆண்/பெண் மீது எழும் பொறாமையே இந்த பொசஸிவ்னஸுக்குக் காரணம் என்பது நுட்பமான உண்மை.

உறவுகளைக் கையாளுதல் விஷயத்தில் பொறாமை உணர்வு மிக  மோசமாகச் செயல்படும்.

நல்ல நண்பர் ஒருவர், முகநூல் இன்பாக்ஸில் வந்து, 'உங்களின் சில பதிவுகள் நல்லாருக்குங்க. நான் உங்க ஒரு பதிவுகூட விடாமல் வாசிப்பேன்' என்றார். எனக்கு அந்தக் தகவல் புதிதாக இருந்தது. அதை புரிந்துகொண்டு அவரே  தொடர்ந்தார். 'உங்களுக்கு லைக், கமென்ட் எதுவும் போட்டதில்லைங்க. அப்படி போட்டால் சிலருக்குப் பிடிக்காதுங்க' என்றார்.

நகுலன் கவிதையைப்போல, நானும் யாருக்குப் பிடிக்காது என்று கேட்கவில்லை; அவரும் யாருக்குப் பிடிக்காது என்று சொல்லவில்லை. சக தோழியை, சக மனிதரை தோழமையோடு நமக்கு அன்பானவர் நெருங்கும்  மனச்சிக்கல் மிக நுணுக்கமானது.

'ஏன் அவளுக்கு லைக் போட்டாய்?', 'அங்கு ஹார்ட் சிம்பல் பார்த்தேனே?' என்று இணையம் முதல், 'ஆபிஸ் ஃப்ரெண்ட்கிட்ட என்ன ஒரு மணி நேரம் பேச்சு?', 'இவங்க யாரு?' என்று நுணுக்கி நுணுக்கிக் கேட்பதுவரை பல விதங்களில் இந்தப் பொறாமை வெளிப்படும்.

ஆணுக்குச் சுதந்திரம் மிக முக்கியம். பெண்கள்கூட ஆணின் பொறாமையை ஓரளவுக்கு இயற்கையாக ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள், தன் ஆணைத் தன்னிடம் இருத்திக்கொள்ள ஓரளவுக்கு பல விஷயங்களை சகித்துக்கொள்வார்கள். ஆனால் ஓர் ஆணுக்கு, முன்பே சொன்னதுபோல தன் சுதந்திரம், தன் வட்டம் மிக முக்கியம். அதில் எல்லைகள், கோடுகள் பெண் போடப் போனால், அதனால் அவள் அவனையே இழக்க நேரிடும் அளவுக்குப் போகும்.

பொறாமை, பொசஸிவ்னஸ் ஆகியவை விஷயம் மிக நுண்ணியது. அது நமக்கு வந்திருப்பதை அவ்வளவு எளிதில் நம் மனம் காட்டிக் கொடுக்காது, அல்லது ஒப்புக்கொள்ளாது. ஏதாவது  சண்டையின்போது இணை, 'நீ அன்னிக்கு  அந்த உறவைப் பற்றி அவ்ளோ சந்தேகப்பட்டியே?' என்று சொல்லும்போதுதான், நாம் அதன் பிடியில் இருப்பதை உணர இயலும்.

ஒருவர் உறவில் அல்லது காதலில் இருக்கும்போது, சுய அலசல் தேவை. ஆனால் அதற்கு மாறாக, நேசிப்பவரின் குணங்களை அலசி, குறைகளைப் பிழித்து, கறைகளை வெளிச்சம் காட்டி, அதை மொட்டை மாடியில் பிறர் கண்ணுக்கு முன்பே காயப்போடும் பழக்கம் சிலருக்கு வந்துவிடும். இணையுடன் மிக நெருக்கமானவுடன் பாஸிட்டிவ் குணங்களை விட்டுவிட்டு நெகட்டிவ் குணங்களை அதிகம் விமர்சிக்கத் துவங்குவோம். ஆனால்,  நமக்கு நெருக்கமானவரை கைநீட்டிச்  சொல்லும்போது, ஒரு நிமிடம் நிதானிக்க வேண்டும். இந்த உணர்வுகளில் இருந்து  மீள்வது அத்தனை எளிதல்ல.

மீள என்னதான் வழி?

இந்தப் பொறாமை அல்லது பொசஸிவ்னஸ் வந்துவிட்டால் முதலில் நாம் அதற்கு ஆட்பட்டுள்ளோம் என்பதை உணர வேண்டும். அதுவே பாதி வெற்றியைக் கொண்டுவந்து தந்துவிடும்.

எல்லாருக்குமான இடம் உலகத்தில் உண்டு. யாரும், யாருடைய இடத்தையும் அபகரிக்க முடியாது என்பதை பரந்த நோக்கில் சிந்திக்க வேண்டும். யாரும் யாரையும்  தட்டிப் பறிக்க முடியாது என்பதையும் உணர வேண்டும். நம் மேல் நம்பிக்கை இருந்தால், எளிதில் வெளியே வரலாம்.

ஒருவர் மேல் பொறாமை வருகிறது என்றால், நம்மையறியாமல் அவரை நம்மைவிட அதிகமாக மதிக்கிறோம் என்றே அர்த்தம். ஓர் ஆணிடம், 'இவள் சரியில்லை', 'அவள் வேண்டாம்', 'அவளோட என்ன சிரிப்பு?' என்று பொறாமையால் சொல்லும்போது, 'அவள்  என்னை விட சிறந்தவள்' என்ற எண்ண விதையை நாம் மறைமுகமாக அவர் மனதில் தூவிவிடுகிறோம். பல சமயத்தில் அந்த ஆண் இயல்பாக ஒருத்தியுடன் பழகும்போது, அவன் காதலி தன் பொறாமையால் அது குறித்து அவனுடன் சண்டைபோட்டு, நட்பே  இல்லாத இடத்தில் நட்பை உருவாக்கி, அந்த உறவை வாலன்டியராக விசிறி விடுவதும் நடக்கக்கூடும். யோசிக்காது, வாய்த்தவறி ஒரு சொல் உறவை ஆழத்தை குலைத்துவிடவும் கூடும்.

இன்னொரு விஷயம்... இந்தப் பொறாமையால் ஆண்கள் உணர்ந்துகொள்ளும் இன்னொரு செய்தி, நம் தன்னம்பிக்கை இன்மை. தன்னம்பிக்கை இல்லாதவர்கள் யாரையும் ஈர்க்க மாட்டார்கள். அவர்களின் மேல் உள்ள பிரமிப்பு போய்விடும். காதல் மற்றும் தாம்பத்திய விஷயத்தில் இந்த ஈர்ப்பு மிக முக்கியம். தன் இயல்பைத் தொலைக்காமல் இருக்க வேண்டும். ஏதோ ஒரு காரணத்துக்காக இணையுடன் தோழமை கொண்ட இன்னொரு பெண்ணைப் பார்த்து பொறாமை கொண்டு, அவள் போல செயல்பட ஆரம்பித்து, தன் ஆணை மேலும் ஈர்க்க முடியும் என்று  நினைத்தால்... நம் இயல்பு தொலையும் முட்டாள்தனத்தில் வந்து முடியும்.

பொறாமை, பொசஸிவ்னஸ் வரும்போது, கொஞ்சம் நிதானித்து சிந்தியுங்கள். ஏதோ ஒரு விதத்தில் சிறப்பாக இருப்பவரைப் பார்த்துதான் அந்த உணவு ஏற்படும். அது எது? அன்பா, பேச்சா, பொருளாதாரமா அழகா, உடையா, பிரபலம் என்பதாலா, திறமையா என்று கவனிக்கலாம். அந்தத் துறையில் நமக்கு ஆர்வம் இருந்தால் நம்மை இன்னும் மேம்படுத்திக்கொள்ளலாம். நாம் மேலே வரும்போது, அந்த உணர்வு போய் விடும். இல்லையென்றால் அவர் பக்கம் அதிகம் கவனிக்காமல் தவிர்த்துவிடலாம்.

முக்கியமான ஒரு விஷயம்... சிறு வயதில் இருந்தே இந்தக் குணங்களைத் தவிர்க்கப் பழகவேண்டும். அதற்கு, குழந்தைகளுக்கு ஒரு முக்கியமான பழக்கத்தைச் சொல்லித்தர வேண்டும்... கைதட்டுவது. ஆம்... கைதட்ட வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களுக்கும் சக மனிதர்களைப் பாராட்டி கைதட்ட வேண்டும். 'உனக்கு அழகாக உடுத்த தெரியுது... செம்ம்மடா' என்று மனதாரப் பாராட்ட வேண்டும். நன்றாக எழுதுபவர்களிடம், 'உங்கள் எழுத்தில் இதை ரசித்தேன்' என்று சொல்ல வேண்டும்.

யார் மேல் பொறாமை, பொசஸிவ்னஸ் வருகிறதோ, அவர்களின் சிறப்பம்சங்களை கவனித்து, பாராட்டி, மேலும் நட்புகொள்ள வேண்டும். இதைப் பார்த்து நம் இணைக்கு நம் மேல் இருக்கும் மதிப்பு கூடும். நம் தன்னம்பிக்கை பார்த்து, பாராட்டும் இயல்பு பார்த்து ஈர்ப்பும் கூடும். பிறரைப் பாராட்டுவதால் நம்மைவிட சில விஷயங்களில்  சிறந்தவர்களின் நட்பு கிடைத்து அந்த குணங்களை நாமும் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் வரும்.

எனவே பொறாமை அல்லது பொசஸிவ்னஸ் என்ற உணர்வு இயல்பானதுதான். அதை நேர்மறையாகக் கையாள்வது நம் கையில்தான் இருக்கிறது.

சக மனிதர்களின் நேசிப்பை, நட்பை பாராட்ட வேண்டும், அதைக் கண்டு மகிழ வேண்டும். அதே சமயத்தில் ஆண், பெண்  இருவருக்கும் இடையில் மூன்றாம் நபரை அனுமதித்துவிடாத தூரத்தில் அது இருக்க வேண்டும். கணவன், மனைவிக்கும் பரஸ்பர புரிதலை நெருக்கமாக்கும் விஷயங்களை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் பொறாமை எனும் விஷயத்தால், உயிருக்கு உயிரான துணையை சந்தேகப்படுவது, அவர் சுதந்திரத்தின் மீது கேள்வி எழுப்புவது, அவர் தன் இயல்போடு பிறரிடம் பழகவிடாமல் செய்வது, அதைவிட முக்கியமாக அவர் மேல்  சந்தேகப்பட்டு  நம்மை நாம்  சிதைத்துக்கொள்வது... இவை எல்லாம் நாமே  நம் உறவை இழக்கக் காரணமாகும் செயல்கள்.

நாம் நேசிக்கும் ஆண்/பெண்ணின் மகிழ்ச்சி நமக்கு முக்கியம் இல்லையா? அவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உணர்வுகளை சரியாக ஆள வேண்டும். ஆளுமைப் பண்பு என்பதில் உறவாளுமையும்  உண்டு. அது உணர்வாளுமையால் கட்டப்பட்டது. அதை மிகச்சரியாக செய்யும் இணைகள், வாழ்வில் வெற்றிபெறாமல் இருந்ததில்லை.

- கிருத்திகா தரன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க