வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (21/12/2016)

கடைசி தொடர்பு:12:58 (21/12/2016)

வீட்டுக்குள்ளேயே பொத்தி வளர்க்க பெண்கள் என்ன செல்லப் பிராணிகளா?

பெண்கள்

சாதியக் கொலைகள் பற்றி இணையமே பற்றி எரிந்த நேரம், நண்பர் ஒருவர், சாதியப் பற்றுள்ள ஒரு கட்சியில் பங்காற்றி செயல்படுபவர், இருப்பினும், பெண்கள் குறித்த அக்கறையும் மனித நேயமும் உடையவர் தொலைபேசினார்.

'மிக சென்சிட்டிவான விஷயம். நீங்க கவுரவ கொலைகளின் இன்னொரு பக்கத்தை புரிந்துகொள்ளவில்லை' என்றார். 'ஒரு உதாரணம் சொல்கிறேன். எங்கள் ஊரைச் சேர்ந்த பெண் அவள். குணவதி. பார்க்கவும் நன்றாக இருப்பாள். அவளை பெரிய படிப்புப் படிக்கவைக்க வேண்டும் என்பது அவள் பெற்றோர்களின் லட்சியம். பொத்தி, பொத்தி வளர்த்தனர். வீடு, பள்ளி, டென்னிஸ், பாட்டு என்று எல்லா விதங்களிலும் அவள் தன்னை சிறப்பாக வெளிப்படுத்த, அவள் அம்மாவும், அப்பாவும் பல சிரமங்களைத் தாண்டி அவளுக்கு உறுதுணையாக இருந்தனர். அவளுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கித் தந்து, போட்டிகளுக்கு அவளை ஊர் விட்டு ஊர் கூட்டிச் சென்று என அவளுக்காகவே வாழ்ந்தனர்.

அவள் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும்போது, திடீரென ஒருநாள் காணாமல் போனாள். பார்த்தால், ஒரு பையனோடு ஓடிப்போயிருந்தாள். அந்தப் பையன், சினிமாவில் வில்லனுக்குக் காட்டப்படும் அத்தனை ரௌடி குணங்களும் பொருந்தி இருந்தான். பெரிய பஞ்சாயத்து நடந்தது. அந்தப் பெண் உறுதியாக, 'வாழ்ந்தால் அவனோடுதான்' என்று தன் பெற்றோரை மறுத்து அனுப்பிவிட்டாள். அந்தப் பையனுக்குச் சம்பாத்தியம் இல்லை. இளமை வேகம், நண்பர்களின் தூண்டுதல் என, ஏதோ சாகசம் செய்வதுபோல அவன் திருமணம் செய்துவிட்டான்.

இருவரும் வேலைக்குச் சென்றாலும் கவுரவமாக சம்பாதிக்க முடியவில்லை. இருவரும் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ளாமல் வாழ்வை ஆரம்பித்து இருந்தனர். நாளாக நாளாக கசக்க ஆரம்பித்தது. அந்தப் பையனும் இவளின் சண்டைகள் தாங்க முடியாமல் போனால் போ என்று விட, இருவருக்கும் தானாகவே விரிசல் ஏற்பட்டு பிரிந்தனர். அதற்குள் இந்தப் பெண்ணின் கையில் குழந்தை.

20 வயதிற்குள் சூறாவளியாக ஒரு பெண்ணின் வாழ்வு புரட்டிப் போடப்பட்டு விட்டது. அந்த பையன் வேறோரு பெண்ணுடன் சுத்த ஆரம்பித்து விட, இவளின் வாழ்வு இந்த சமூகக் கட்டுப்பாட்டிற்குள் கேள்விக்குறியாக ஆனது. பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோருக்கு அதைத் தாங்கும் சக்தி இல்லை. அப்பா நோயாளியானர். அம்மா விரக்தியின் உச்சத்தில்.'

'கலப்புத் திருமணம் நல்லது. ஆனால் திட்டமிடப்பட்ட காதல் நாடகத் திருமணங்கள் பற்றி ஏன் பரவலாக அறியப்படவில்லை? எங்கள் குலப் பெண்களின் வாழ்வு இப்படி சூறையாடப்பட வேண்டுமா? நான் கலப்பு திருமணத்தை ஆதரிக்கிறேன். ஆனால், ஏதுமறியா அப்பாவி குழந்தைகளை குறிவைத்து நடத்தப்படும் காதல் நாடகத் திருமணத்தை ஒரு பெற்றோரின் பார்வையில் இருந்து யோசியுங்கள்... பிறகு நீங்கள் பேசலாம்.

கோபத்தில் படபடவென பேசினார் நண்பர். கடைசியாக, 'மேடம்... நீங்கள் இதில் உங்கள் வீட்டுப் பெண் குழந்தையை பொருத்திப் பாருங்கள். ஒன்றும் அறியாமல் செல்லமாக வளர்த்த பெண், கைக் குழந்தையுடன் நிர்கதியாக நிற்கும் நிலையில், பெற்ற தாய்க்கு உயிர் குலையாதா, வயிற்றைப் பிசையாதா?' என்றார். இதனால் சில வீடுகளில் சிறு வயதிலேயே பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவிடும் பழக்கத்தையும், அதன் பின் பலத்த பாதுக்காப்போடு அவர்கள் வீட்டுப் பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புப்படுவதாகவும் கூறினார்.

யாராக இருந்தாலும் சரி, எந்த இனம், மதமாக இருந்தாம் சரி... பொருளாதாரத்தில் மேலே வந்த பெற்றோர்களால் பணம் இல்லாத வாலிபரை சம்பாதிக்க முடியாத வயதில் ஒரு பெண் திருமணம் செய்வதை இந்திய சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. நண்பரை முழுக்க பேசவிட்டு நான் கேட்டுக் கொண்டேன்.

பொதுவாக இதுபோன்ற கருத்துப் பரிமாற்றங்களில் அவர்களின் முழு வீச்சு, அதன் நியாயக் காரணிகள், சமூக கட்டுப்பாடுகள் என்று முழுப் பரிமாணத்தில் புரிந்துகொண்டே, பதில் பேசுவேன். இல்லாவிடில் நாம் முன்வைக்கும் கருத்துகள் நீர்த்துப்போகும் சாத்தியங்கள் அதிகம். வெற்று விவாதங்களில் நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு புன்னைகையை பரிசாக கொடுத்துவிட்டு வெளியேறுவதே நல்லது.

நியாயத்தை எடுத்துச் சொல்லும்போது புரிந்துகொள்ளும் ஆற்றல், பலருக்கு இணையம் மூலமாக வளர்ந்து வருகிறது. அதே சமயம் பல்வேறு உணர்ச்சி தீண்டல்களுக்கும் பலியாகி வருவது கண்கூடு. முக்கியமாக, சிறு வயதினர் சமூகம், கலாச்சாரம் போன்றவற்றில் தெளிவு இல்லாமல் ஆங்காங்கே கருத்துகள் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகிறது.

சரி, என்னதான் செய்வது? நிச்சயமாக அந்தப் பையனுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் சமூகம் பிரச்னை தரும். அந்தப் பெண் வாழ்வு கேள்விக்குறியாகும். இங்கு சாதி, கலாசார பிரச்னைகளை ஒதுக்கிவிடுவோம். இதை இள வயதுப் பிரச்னையாகப் பார்க்கலாம்.

பெரும்பாலும் பெரிய நகரங்களில் இதுபோன்ற காதல்கள் குறைவு. கிராமம், மற்றும் சிறுநகரங்களில் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு ஆழமான காரணம் இருக்கிறது. நகரங்களில் பணக்காரர்களின் வாழ்வு வேறுவிதமாகப் போய்விடுகிறது. அவர்கள் பொருளாதரத்தில் குறைந்த மக்களைச் சந்திப்பது குறைவு. தவிர, நகரத்துப் பெண்களின் மனப்போக்கு பெரும்பாலும் தெளிவடைந்து வருவது கண்கூடு.

18 வயதில் தானும் சம்பாதிக்காமல், தனக்குச் சம்பாதித்து போட இயலாத ஒருவனை திருமணம் செய்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள நகரப் பெண்கள் முன்வரமாட்டார்கள். அப்படியே காதலித்தாலும், தாங்கள் வேலைக்குச் செல்லும் வரை அதை ரகசியமாக வைத்திருக்கவும், தெரியாமல் பழகவும் நகரம் வாய்ப்பைக் கொடுக்கிறது. அதற்குள் சரிவராவிட்டால், இருக்கவே இருக்கிறது ப்ரேக் அப். அதிலிருந்து மீண்டு வரும் தெளிவையும் அவர்கள் பெற்றுவிடுகிறார்கள்.

ஒரு பெண் வேண்டும் என்றால், ஆண் அதற்கு ஏற்றவாறு தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வெறும் இனக்கவர்ச்சி நீடித்து நிலைக்காது. பிறகு, 'நான் அவளை காதலித்தேன், என்னை விட்டு போய்விட்டாள்' என்று டீ வண்டி தள்ளும் தனுஷ் வேண்டுமானால் கோர்ட்டில் பேசலாம். ஆனால் நிஜம் வேறு. ஆரம்பத்தில் சிறு கவர்ச்சியில் மயங்கும் பெண்கள், தங்கள் வாழ்வு என்று வரும்போது  பலவற்றை யோசிக்கிறார்கள். அப்போது தனக்குத் தகுந்த ஆணை, அதாவது அம்மா, அப்பா சொல்லும் பையனை திருமணம் செய்துகொள்வதும் நடக்கிறது.

இந்தச் சமயத்தில் இந்தக் கவர்ச்சி... அதாவது 18 வயதில் ஹார்மோன்கள் படுத்தும் பாடு சொல்லில் அடங்காதது. ஆண்களுக்கு டீன் ஏஜில் தான் மிக மிக அதிகமாக டெஸ்டிரோன் உற்பத்தி ஆகும். அந்தச் சமயத்தில் உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இனம் தெரியாத ஒரு வேகத்தில் இருப்பார்கள். உடல் வியர்க்கும் அளவுக்கு விளையாட்டில் ஈடுபடுவது, அல்லது தியாகம், யோகா என்று நேர்மறையாக அதற்கு வடிகால் தேடச் செய்வது என, இந்தச் சமூகம் முறையான வழிகாட்டுதல்கள் அவர்களுக்கு வழங்குவதில்லை. விளைவு, இந்த வயதில் இளமை வேகம் சேர, அந்தக் கவர்ச்சியை காதலாகவும் அனுமானம் செய்துகொண்டு... பெண்ணுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருப்பார்கள். 'இறந்து விடுவேன்' என்று சொல்வதெல்லாம் நடக்கும். ரத்தக் கடிதம் முதல் ப்ளேடால் கீறிக் கொள்வது வரை. நான் ஒரு பையனை கண்ணால் பார்த்தேன். கை முழுக்க காயம். லவ்வரை இம்ப்ரஸ் செய்யவாம்.

இந்தக் கவர்ச்சிக்கு எளிதில் உணர்ச்சி வயப்படும் பெண்கள் அதிகம். அதுவும் 18 வயதில் அவர்களும் ஹார்மோன்களின் ஆதிக்கத்தில் இருப்பார்கள். என்னதான் படிக்கும் பெண் என்றாலும் அன்பு, காதல் போன்ற உணர்வுகள் என்று வரும்போது சிந்திக்கும் திறன் இழக்கும். கிராமம், சிறு நகரம் என்றால், ஊருக்குத் தெரியாமல் சந்திப்பதே பெரிய விஷயம். பொத்திப் பொத்தி வளர்க்க, ஈர்ப்பு சக்தி மிக அதிகமாகும். இதுதான் இயற்கை. தினம் பார்க்கும் ஒரு பொருளைவிட, அரிதாய் தோன்றும் பொருளுக்கு ஈர்ப்பு அதிகம்.

பெண்களை என்று ஒளிக்க ஆரம்பித்தோமா அன்றே அவர்களை மனிதர்களாகப் பார்க்கவிடாமல், அரிய உடல் கூறு உள்ள தேவதைகளாக பார்க்க வைத்துவிட்டோம். தற்காலத்தில் பள்ளிகளில், ஏன் கல்லூரிகளில்கூட ஆண், பெண்ணை சகஜமாக பழக விடுவதில்லை.

இந்தச் சமயத்தில் தன் மீது அதீத அன்பை(அவனும் இயற்கையின் உணர்ச்சியில் ஆட்பட்டுதான் இருப்பான். அதை இவள் அன்பெனவே கொள்வாள்) பொழியும் ஆண் மீது ஈர்ப்பு வருவதை எப்படி எதிர்கொள்வது என்று அக்குழந்தை அறிவதில்லை.

அந்த சாதி பிரமுகரிடம் சொன்னேன். 'உங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளை இன்னும் கவனமாக பொத்தி பொத்தி வளர்க்கப் போவதாகச் சொல்வது இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகாது. அடுத்து நீங்கள் செய்யும் பெரும் தவறு, இளம் வயதில் திருமணம். இது உங்கள் இனமே முன்னேற விடாமல் செய்யும். தடையற்ற கல்வி பெறும் இனமே முன்னேறும். அதற்கு பெண்களுக்கும் கல்வி தேவை. அப்போதுதான் குடும்பம் முழுக்க பொருளாதாரத்தில், அடுத்த தலைமுறை கல்வியில் முன்னேற முடியும். பெண்கள் பாதுகாக்கப்படாமல் ஒடுக்கப்படுவதும் இழிவு செய்யப்படுவதும் உங்கள் இனத்துக்கே நல்லது இல்லை' என்றேன்.

ஒரு பெண்ணுக்கு 18 வயதில் தனக்கு எது நல்லது, கெடுதல் என்று தீர்மானிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு தேவையான கல்வியை, தன்னம்பிக்கையை, தைரியத்தை ஊட்டுங்கள். ஆணுக்கு சமமாய் பழகவிடுங்கள். 'சின்ன தம்பி' குஷ்பு போல வளர்த்தால்தான் பார்க்கும், பழகும் ஆண் மீது ஈர்ப்பு வரும். அது அன்பென அவர்களால் நம்பப்படும். அவனோடு வாழ்வு முழுக்க ஒத்துப் போகுமா என்று யோசிக்கத் தெரியாது. உணர்வு வேகம் அதிகமாக இருக்கும், கரையை உடைத்துச் செல்லும் அணை போல.

இனியாவது 'பெண் குழந்தைகளை ஏமாற்றி விட்டான்' என்று சொல்லாதீர்கள். அந்தக் குழந்தைக்கு தனக்கு தேவையான துணையைத் தேர்ந்தெடுக்க கற்பிக்காத, தன்னம்பிக்கையை வளர்க்காத பெற்றோர் மூலமும், உங்கள் சமூகமுமே தவறு. நன்றாக ஒத்துப்போகும் கலப்புத் திருமணத்தை ஆதரிக்கவும் தயாராகத்தான் இருக்கிறீர்கள். பிறகென்ன... ஆணையும், பெண்ணையும் ஒன்றாக வளர்த்து நம்பிக்கையை வளர்த்து எடுங்கள். அவர்கள் தங்கள் காலில் சுயமாக நிற்கும்போது, தனக்கான வயதில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும்,  'நம் பெண்/ பையனின் தேர்வு சரியாக இருக்கும்' எனுமளவிற்கு அவர்களை வளர்த்து எடுங்கள். இதுதான் விடிவாக இருக்குமே தவிர... பெண்களை பாதுகாத்தல் இன்னும் மோசமாகத்தான் நிலைமை போகும். வீட்டுக்குள்ளேயே பொத்தி பொத்தி வளர்க்க பெண்கள் ஒன்றும் செல்லப் பிராணிகள் அல்ல. நாம் வாய்த்தவறி சொல்லும் ஒரு சொல்கூட அவர்களை கடுமையாக காயப்படுத்தக் கூடும். இதையெல்லாம் அவரிடம் சொல்லி முடித்தேன்.

இதில் நான் சொன்னது சரியா, தவறா, நீதியா என்று யோசிக்கவில்லை. ஆனால் பெண்ணை ஒடுக்கும் ஒரு சமூகத்திற்கு பொருத்தமான மொழியில் சொல்லி இருப்பதாகவே நம்புகிறேன்.

- கிருத்திகா தரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்