மேரி க்யூரி தன் நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன செய்வார் தெரியுமா? | We should learn these lesson from Marie Curie

வெளியிடப்பட்ட நேரம்: 08:34 (15/02/2017)

கடைசி தொடர்பு:12:08 (17/02/2017)

மேரி க்யூரி தன் நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன செய்வார் தெரியுமா?

மேரி க்யூரி

ஒரு துறையில் பெண்கள் சாதிப்பது என்பது நாகரிகம் வளார்ந்த இன்றைக்கும் எளிதாக முடிவதில்லை. பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றை தகர்த்துவிட்டு சாதித்தப் பெண்கள் அபூர்வம்தான். அதிலும் அறிவியல் துறையில் வென்று காட்டியவர்கள் மிகச் சொற்பம். அதில் தன் தனித்துவத்தால் இரண்டு நோபல் பரிசுகளை வென்றவர்தான் மேரி க்யூரி.

போலந்து நாட்டில் பிறந்த மேரி க்யூரி சிறுவயதாக இருக்கும்போதே பெண்களை அடக்கி வைக்கும் பொதுப் புத்திக்கு எதிராக யோசிப்பவராக இருந்தார். மேரி க்யூரிக்கும் அவரது அக்காவுக்கும் மருத்துவம் படிக்க ஆசை. குடும்பச் சூழலால், அக்கா வேலைக்குச் செல்ல மேரி க்யூரி படிக்க பாரிஸ்க்குச் சென்றார். மருத்துவம் படிக்காமல் இயற்பியல், வேதியியல் துறைச் சார்ந்து படிக்க நேர்ந்தாலும் முழு ஈடுபாடோடும் அர்ப்பணிப்போடும் படித்து, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஃப்ரான்ஸ் நாட்டின் முதல் பெண் முனைவர் எனும் பெருமையைப் பதித்தார்.

அறிவியலே தன் வாழ்க்கை என மாற்றிக்கொண்ட மேரி க்யூரிக்கு தன்னுடன் பணியாற்றிய ப்யாரி க்யூரியுடன் நட்பு கிடைத்தது. நட்பு காதலாகி மாறியது. இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். கதிரியக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆபத்தானவை என்பதால் பலரும் அதில் ஈடுபடாமல் இருந்த சூழலில் மேரி க்யூரி தம்பதியினர் துணிவோடு மேற்கொண்டனர். கதிரியக்கம் தொடர்பான ஆய்வுக்கே நோபல் பரிசுகள் கிடைத்தன.

மேரி க்யூரி

எல்லாமே நல்லபடியாக சென்றுகொண்டிருந்த சூழலில் மேரி க்யூரியின் வாழ்வில் பெரும் இடி விழுந்தது. தன் வாழ்க்கைக்கும் ஆய்வுக்கும் இணையாக இருந்த தன் கணவர் ப்யாரி ஒரு சாலை விபத்தில் இறந்தார். அந்த இழப்பை மேரி க்யூரியால் தாங்கிகொள்ளவே முடியவில்லை. எவராலும் சமாதானப் படுத்த முடியாத அளவுக்கு சோர்ந்துபோய்விட்டார். ஆனால், தொடர வேண்டிய ஆய்வுகளே அவரை மீண்டும் இயல்புக்குத் திரும்ப அழைத்தன. தானே தன்னைச் சரி செய்துகொண்டு பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார்.

கணவர் இல்லாமல் ஆய்வுகளைத் தொடர்ந்த மேரி க்யூரிக்கு சுற்றியிருந்தவர்களின் வார்த்தைகள் ஈட்டியாக குத்தின. மேரி க்யூரியுடன் பணியாற்றும் இன்னொரு நபருடன் அவரை இணைத்துப் பேசி வார்த்தையால் காயப்படுத்தினர். கணவர் இறந்துபோனதைச் சுட்டிக்காட்டி இதைப் பேசியபோது, மனதளவில் மீண்டும் சோர்ந்துபோனார். இந்தச் சோர்விலிருந்து மீண்டு வர மேரி க்யூரி செய்தது என்ன தெரியுமா?

தனது மனச் சோர்வைச் சரி செய்யும் மருந்து, தன் கிராமமே என்பதாக கண்டுகொண்டார். அப்படியான மனக்காயம் ஏற்படும் நேரங்களில் தனது கிராமத்துக்குச் சென்று தன் பால்யத்தில் பார்த்து பழகிய மனிதர்களை, இடங்களைப் பார்த்தார். அங்கே நேரங்களைச் செலவழித்தார். மனம் முழுக்க தன்னம்பிக்கையை நிரப்பிக்கொள்வார். அந்தப் புத்துணர்ச்சியோடு ஆய்வகத்துக்கு வருவார். தனது சோர்வைத் தூரத்தில் எறிந்து முழு வேகத்தில் பணிகளைப் பார்த்தார்.

தன் மகளையும் இந்தத் துறையில் ஈடுபடுத்தினார். கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிரயோகிக்கும் ரேடியத்தைக் கண்டறிந்து இந்த உலகிற்கு பெரும் கொடையாக கொடுத்தார். இந்த ஆய்வின்போது தன் உடலில் பாயும் கதிர்வீச்சால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். ஆனால், இவ்வுலகிற்கு பலருக்கும் வாழ்வளிக்கப் போகிற ஒன்றிற்காக நாம் பணியாற்றுகிறோம் என்ற எண்ணமே தன் உடலைப் பற்றி கவலைப்படாமல் ஆய்வைத் தொடர வைத்தது.

தன் சோர்வைப் போக்குவது எது என்று தெளிவாக கண்டறிந்த மேரி க்யூரியைப் போல, நம் வாழ்வின் சோர்வுகளைக் கலையும் விஷயங்களைத் தேடி கண்டறிவோம்.

- வி.எஸ். சரவணன்.


டிரெண்டிங் @ விகடன்