Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘தீபன்’ - நீல முயல்களின் அகதி வாழ்க்கை! தங்கப்பனை விருது வென்ற படம்

 

தீபன்

திரைப்படம் என்கிற கலை வடிவத்துடன் லட்சிய நோக்கமும், அரசியல் பார்வையும் இணையும் புள்ளியே அதனை மிகச்சிறந்த படைப்பாக உயர்த்தும். அதேவேளை உள்நோக்கமுடைய அரசியல் கருத்துடன் கலை வடிவத்தை இணைத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலையையும் அதே திரைப்படங்களின் வாயிலாக வெற்றிகரமாகச் செய்ய முடியும். இரண்டாவதற்கு உதாரணங்கள் ‘ராம்போ’ வரிசைப் படங்கள், முதலாவதற்குக் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் அதன் உயரிய விருதான ‘தங்கப்பனை’யை வென்ற ‘தீபன்’ படத்தைச் சொல்லலாம்.

‘ராம்போ’ - வரிசைப்படங்களின் கதை பெரும்பாலும் எதிரிகளிடம் சிக்கி வதைப்பட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்க போர்க் கைதிகளை ஒற்றை ஆளாகச் சென்று மீட்கும் நபரின் சாகசமாகத்தான் இருக்கும். ஒரு படத்தில் அவர் எந்த நாட்டில் எதிரிகளை மீட்கப் போகிறாரோ அந்த நாட்டில் அடுத்த சில வருடங்களில் அமெரிக்க ராணுவம் கால் வைக்கும். அதற்கான உளரீதியிலான தயாரிப்புகளை உள்நாட்டில் ஏற்படுத்தும் வேலையில் நாயக வழிபாட்டுடன் கூடிய ரகசிய பிரசாரமாக அந்த வகைப்படங்கள் உருவாக்கப்பட்டன ஆனால், ‘தீபன்’ யதார்த்த நடைமுறை அரசியலைப் பேச முற்படுகிறது. லட்சியவாதத்துடன்கூடிய விடுதலைப் போராட்டக் களத்தில் தன் சொந்த குடும்பத்தையும், இனத்தையும் தன் நாட்டில் பறிகொடுத்த ஒருவன் புலம்பெயர்ந்தபோது எதிர்கொள்ளும் வாழ்க்கையே ‘தீபன்’ படத்தின் கதை. ஐரோப்பாவில் இந்தப் படம் அதிகம் கவனம் பெற்றதற்கான காரணமாக அங்கு நான்கைந்து ஆண்டுகளாக அதிகரித்து வரும் அகதிகளின் வருகையும், அவர்கள் குறித்து அந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும் கருதலாம்.

எழுத்தாளர் ஷோபாசக்திதான் இதில் தீபன் (சிவதாசன்). பொதுவாக ஷோபாசக்தியின் சிறுகதைகள் மீண்டும் மீண்டும் வாசிப்புக்கு உள்ளாகும். காரணம் அதில் ஒவ்வொரு முறையும் விடுவிக்கக் கிடைக்கும் குறியீடுகள்தான். இந்தப் படத்தை ஒரு தமிழ்ப் பார்வையாளனாக எதிர்கொள்ளும்போது நமக்குப் படத்தின் பன்முகத்தன்மை இன்னும் விரிவு பெறுகிறது. தீபன் திரைப்படம் சென்னையில் திரையிடப்பட்ட அன்று படம் முடிந்ததும் நாயகன் ஷோபாசக்தியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒரு கேள்வி “இந்தப் படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்களில் உங்களின் பங்களிப்பு இருந்ததா?” அதற்கு அவர் ‘இல்லை, சில தமிழ் மொழிபெயர்ப்பு தவிர வேறந்த வேலையிலும் நான் ஈடுபடவில்லை. ஆனால், அதில் சில இடங்களில் என்னுடைய ‘டச்’ இல்லாமல் இருக்காது” எனக் கண் சிமிட்டித் தெரிவித்தார்.

தீபன், நீலமுயல்


இயக்குநர் ஒடியார்ட் மனித உணர்வுகளை அற்புதமாகப் படமாக்கக் கூடியவர்தான் என்றாலும் தமிழ் சமூகத்தின் உள்அரசியலை இவ்வளவு நுட்பமாகப் பதிவுசெய்ய இயலுமா என்றச் சந்தேகம் தவிர்க்க இயலாமல் எழுகிறது. சூழ்நிலை உந்தலில் குடும்பமாகும் மூவர் பிரான்ஸுக்கு தப்பிச் செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு ஒதுக்கப்படும் குடியிருப்பும், அந்தச் சூழல் ஏற்படுத்தும் மனஉணர்வுகளும், அவர்களுக்கு இடையிலான உறவுநிலையும் அதில் உருவாகும் உணர்வுகளும்தான் கதை.

போரில் இறந்த தன் வீரர்களை சிவதாசன் (ஷோபாசக்தி) எரியூட்டும் காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. அழுத்தமான மனதுடன் தன் சீருடையைச் சிதையில் போட்டு எரிக்கிறான் போராளி சிவதாசன். நாட்டிலிருந்தும் ராணுவப் பிடியிலிருந்தும் தப்பிக்க அவனுக்கு ஒரு குடும்பம் வேண்டும். அதே நோக்கத்திலிருக்கும் யாழினி,  இளையாள் என்கிற ஓர் ஆதரவற்ற பெண் குழந்தையைத் தேர்வுசெய்து அழைத்து வருகிறாள். மூவரும் ஒரு குடும்பமாக நாட்டை விட்டுத் தப்பிக்கின்றனர். இந்த இடத்தில் இருளும் திரையில் பிரான்ஸ் நாட்டுக்கொடியின் நிறமான சிவப்பும், நீலமும் வெளிறி மின்னியபடி ஒளிர்ந்து நெருங்கி வருகிறது. அது தீபனின் தலையில் இருக்கும் முயல் காதுகளின் வெளிச்சம். குறுகிய காலத்தில் மிகுதியான இனப்பெருக்கத்தைச் செய்துவிடும் ‘நீல முயல்’ பொம்மைக் காதுகளை பாரீஸின் வீதிகளில் தீபனும் அவனைப் போன்ற சட்டவிரோதமாகக் குடியேறிய இன்னும் சில அகதிகளும் விற்றபடி வருகின்றனர். இந்த ‘நீல முயல்’ எப்படிப் புகுந்த இடத்தில் விரைவில் அதிக இனப்பெருக்கத்தைச் செய்யும் நபர்களுக்கான குறியீடோ அதே போல ‘பலவீனமான’ விலங்கு என்பதற்குமான குறியீடும்கூட. நாட்டிலிருந்து ஆயுதம் வாங்க பணம் திரட்ட பிரான்ஸ் வந்திருக்கும் சேரன் மாஸ்டரிடம் அடிவாங்கிய தீபன் குடித்துவிட்டு தனியே அழுது அரற்றும்போது அவனது தலையில் அந்த ‘நீல முயல் காதுகள்’ வந்துவிடுகின்றன.

பிரான்ஸ் அரசு வழங்கும் அகதிகளுக்கான வீடு , தீபனின் ‘குடும்பத்துக்கும்’ கிடைக்கிறது. இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுடன் அந்தக் குடியிருப்பை சுத்தப்படுத்தும் வேலையும்  தீபன் வசம்  ஒப்படைக்கப்படுகிறது. பாரீஸின் சேரிப் பகுதியில் இருந்து புறநகர்ப்பகுதியில் இருக்கும் ‘ல ப்ரே’ என்கிற சுதந்திர அகதிகள் முகாமில் தீபனின் குடும்பம் குடியேறுகிறது. அங்குக் குடியேறியவுடன் முதல் வேலையாக யாழினி, பிள்ளையாரிடம் “சங்கத் தமிழ் மூன்றையும் தா” என வேண்டுகிறார். சொந்த நாட்டில் குடும்பத்தை இழந்து, உறவுகளை இழந்து அகதியாய் இன்னொரு நாட்டில் வாழக் காரணமான மொழியையே கடவுளிடம் வரமாக வேண்டுவது ஓர் அரசியல் பகடிக் காட்சி. அந்தக் காட்சி முடிந்த பிறகு புதிய வீட்டில் மூவரும் இரவு உணவில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது இளையாள் கைகளால் சாப்பிடுகிறாள். தீபன் ஸ்பூனால் சாப்பிட வற்புறுத்துகிறார்.

தீபன்

தந்தை என்கிற பாத்திரம், ஒருவகையில் சூழல்சார்ந்த ஒப்பந்தம்தான் என்றாலும் அவனது தந்தைமையிலிருந்து ஒருபோதும் விலகாமல் இளையாளின் மீது அன்பு கொள்கிறான் தீபன். அதேசமயம் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் தாய்மை குறித்த பிம்பம் ஏதுமற்றவளாக இருக்கிறாள் யாழினி. எப்போதும் தான் மட்டும் அந்தச் சூழலில் இருந்து விலகி இங்கிலாந்துக்குச் சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறாள். புகலிட கோரிக்கையுடன் தஞ்சம் கேட்கும் இடத்திலும் இளையாள் மீது தமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதுபோல் நடந்துகொள்ளும் யாழினி, பிரான்ஸ் வந்த பிறகு இளையாளை ஒரு வேண்டாத நபராகவே கருதுகிறாள். பள்ளியில் சேர்ந்த முதல்நாள் அழுது அடம்பிடித்து ஓடிவரும் இளையாளை தீபன் சமாதானப்படுத்திக்கொண்டிருக்க இந்த நிகழ்வில் தமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல் மூடிய கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால் நின்று பார்க்கிறாள் யாழினி. மற்ற பிள்ளைகளின் அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளியின் வாசலில் முத்தம் கொடுப்பதால் தமக்கும் அவ்வாறே கொடுக்கச்சொல்லும் இளையாளுக்குப் பட்டும் படாமலும் யாழினி முத்தமிடும் காட்சி கற்பிக்கப்பட்ட குணமாகவே தாய்மையை முன்வைக்கிறது. ஒரு காட்சியில் ‘உங்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும் உங்கள் இளைய சகோதரர்களுடன் காட்டிய பாசத்தை என்னிடம் காட்டலாமே’ என இளையாள் நேரடியாகவே யாழினியிடம் கேட்டுவிடுகிறாள்.

அந்தப் பொய்யான குடும்பத்தில் தீபன் என்கிற ஆண் செலுத்தும் ‘நுண் அதிகாரம்’ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் கவனம்கொள்ள வேண்டிய ஒன்று. யாழினியும் இளையாளும் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்ளும் நேரங்களில் தீபன் வந்துவிட்டால் அவர்களிடையே ஒரு அமைதியும் ஒழுங்கும் வந்துவிடுகிறது. ஓய்வு நேரங்களில் ‘ஈழமுரசு’ படித்தபடியே இருக்கும் தீபன் ஒரு காட்சியில் அதை இளையாள் படிக்கத் தொடங்கும்போது தடுத்துவிடுகிறான். யாழினியோ பாயின் அடியில் பாலியல் புத்தகங்களை மறைத்து வைத்துப் படிக்கிறாள். தொலைக்காட்சியில் அவலமான போர்க்காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சமயத்தில்கூட யாழினி குளிக்கும் சத்தம் தீபனை தொந்தரவு செய்வதாகக் காட்டப்படும் யதார்த்தக் காட்சி மனித வாழ்வின் அசலான ஓர் பகுதி. மூவரின் இந்தப் பொய்யான இணைப்பைக் குடும்ப அமைப்புக்குள் இழுத்துச் செல்கிறது தீபன் - யாழினி இடையே ஏற்படும் பாலுறவு.

இவர்கள் குடியிருக்கும் முகாமுக்கு எதிரே இருக்கும் குடியிருப்பில் அரசால் கண்காணிக்கப்படும் குற்றவாளிகளும்  ‘கேங்’களும் உள்ளனர். அங்குள்ள முக்கிய தலைவன் ஒருவனின் உறவினருக்கு யாழினி வீட்டு வேலைகள் செய்யப்போகிறாள். அந்தக் குற்றவாளிகளுக்குள் நடக்கும் துப்பாக்கிச் சண்டைக்குப் பயந்து இளையாளையும் தீபனையும் விட்டு யாழினி இங்கிலாந்துக்குச் செல்ல முயற்சிக்கிறாள். அவளை மீண்டும் வலுக்கட்டாயமாக அழைத்துவரும் தீபன் அங்கு ஒரு “நோ ஃபயர் ஸோன்” அமைக்கிறான். அந்தக் ‘கேங்’, தீபனின் பகுதி ஆட்களையும் அடிப்பதால் தீபன் எதிர்க்க, குடியிருப்பில் சின்னக் குழுவின் தலைவனாகிறார் தீபன். இதன்மூலம் எதிர்த் தரப்புக்கு எதிரியாக மாறுகிறான். எதிர்த் தரப்பில் முக்கிய ஆளான ப்ராஹிம், யாழினியை அழைத்து எச்சரிக்கிறார். இதனால் மேலும் கோபமடைகிறான் தீபன்.

அகதி

ப்ராஹிம்மை கொல்ல வந்தவர்கள் சுட்டதில் மாட்டிக்கொண்ட யாழினி, தீபனை அழைக்க, போரில் தாய் மண்ணை இழந்து, அகதியாய் அந்நிய மண்ணில் நிற்கும் தீபன், யாழினியை மீட்கத் துப்பாக்கியை மீண்டும் கையில் எடுத்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டு யாழினியை அடைகிறான். ஆனால், உண்மையில் யாழினி யாராலும் பிடித்து வைக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சிறிய குழப்பத்தால் அப்படி தீபன் நினைக்கும்படி ஆகிறது.

படத்தின் தொடக்கத்திலிருந்தே  காட்டுக்குள் செடிகளுக்கு இடையே மறைந்து நிற்கும் யானை ஒன்று குறியீடாகக் காட்டப்பட்டுவருகிறது. தீபன் துப்பாக்கியைக் கையிலெடுத்து வன்முறைக்குள் நுழையும் சமயம், யானை காட்டுக்குள் இருந்து வெளியேறுவது கவித்துவமான காட்சிப்படுத்தல்.

வரலாற்று ரீதியில் ஈழப்பிரச்சினைக்கு மூல காரணமான ஒன்றாகச் சொல்லப்படும் இங்கிலாந்து நாட்டில் தீபன் குடும்பம் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதான நகை முரணுடன் படம் நிறைவடைகிறது. தீபனாக வரும் ஷோபாசக்தி தன்னியல்பாய்  அந்தப் பாத்திரத்துக்கு பொருந்திப் போகிறார். 

இந்தப் படம் தமிழ் பார்வையாளருக்குப் புலம் பெயர்ந்த அகதிகளின் தனிப்பட்ட உணர்வுகளை மட்டுமல்லாது அதற்கு அப்பால் நம் கண் முன்னால் கண்ட ஈழ விடுதலைப் போராட்டமும் அதன் முடிவும், முடிவுக்குப் பிறகும் எழுப்பப்பட்டு வரும் அரசியல் முழக்கங்களையும் சேர்த்து ஒரு தமிழ்ப் பார்வையையும் ஏற்படுத்தி அதீத நெருக்கத்தையும் கவனத்தையும் உருவாக்குகிறது.

- வரவனை செந்தில் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement