Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குட்டி போட்ட பூனை... சித்தி வீட்டு பணியாரம்... ஞாபகம் அள்ளும் விடுமுறை நாட்கள்! #Nostalgic

விடுமுறை

 

நீங்கள் 70-80 -களில் பிறந்தவர்கள் எனில், உங்களுக்கும் நிச்சயமாய் இந்த அனுபவம் இருக்கலாம். பள்ளி விடுமுறை தொடங்கியதும் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டி வீடுகளுக்கு விடுமுறைக்குச் செல்லும் வழக்கம் இருக்கும். அங்கேயுள்ள வசதிகள் குறித்தோ, குழந்தைகள் தங்களைப் பிரிந்து வாடுவார்கள் என்பது குறித்தோ கவலைப்படாமல் பெற்றோரும் பிள்ளைகளை உறவினர் வீடுகளில் விட்டுவிட்டு ஊருக்குக் கிளம்பிவிடுவர். அத்தகையோர், விடுமுறைக்கென காத்துக்கிடந்த காலங்கள் ரம்மியமானவை.

எங்களுடன் சேர்த்து மற்ற உறவினர்களின் குழந்தைகளும் சேர்ந்துகொள்ளும்போது, குதூகலத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் குறைச்சலில்லாமல் இருக்கும். நான், ஐந்தாம்வகுப்பு விடுமுறையில் என் பெரியப்பா வீட்டுக்குச் சென்றபோது, பெரியம்மா சொல்கிற அத்தனை வேலைகளையும் செய்வேன். அவரும் எனக்குத் துளிகூட சலித்துக்கொள்ளாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார். யாருடைய பிள்ளை ரகளைசெய்தாலும் திட்டுகிற, அடிக்கிற பெரியவர்களை யாரும் குற்றம் சாட்டியதே இல்லை. நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஊரில் இருக்கும் தியேட்டரில் மேட்னி ஷோ பார்த்துவிட்டு வரும்போது, பெரியப்பா விறகடுப்பில் அத்தனை பேருக்கும் தோசை வார்த்துத் தருவார். தொட்டி முற்றத்தில், வெண்ணிலா வேளைகளில் கயிற்றுக்கட்டிலைப்போட்டு அத்தனை குழந்தைகளும் நெருக்கமாய் அமர்ந்து வானம் பார்த்துக்கிடந்த நாட்கள் இனி மீண்டுவராதவை. அப்போது, நாங்கள் செய்யும் குறும்புகளும் கலாட்டாக்களும் காலத்தின் பொக்கிஷம்.

விடுமுறை

ஒருசமயம், ஊரில் இருக்கும் என் சித்தி வீட்டுக்கு விடுமுறைக்குப் போயிருந்தோம். சித்தியின் சமையலுக்கு தங்கவளையல் போடலாம். அவ்வளவு ருசி. சமைக்கும்போதே எப்போது சாப்பிடப்போகிறோம் என ஆசையாய் துடித்துக்கொண்டிருப்போம். அடுப்பில் மாவு கல்லை வைத்து வெல்லமும் ஏலக்காய்ப் பொடியும் தேங்காய்பல்லும் கலந்து சித்தி செய்யும் இனிப்புப் பணியாரத்தைச் சாப்பிட, குட்டிபோட்ட பூனையைப்போல சமையற்கட்டில் சுற்றித்திரிவோம். பூனை என்றதும்தான் ஞாபகத்துக்கு வருகிறது. சித்தி வீட்டுப் பூனை எங்களுக்கென்றே சொல்லிவைத்தாற்போல மே மாத விடுமுறைகளில்தான் குட்டிகள் போடும். பாரதியார் கவிதையில் வருவதைப் போல ஒவ்வொரு பூனைக்குட்டியும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். எனக்கு... உனக்கு என்று குட்டிகளைப் பிரித்துக்கொண்டு, அவற்றுக்கு செல்லப் பெயர் வைத்து விளையாடிய காலம்தான் எங்களுக்குப் பூனைக்குட்டிக் காலம்.

சித்தியோடு சேர்ந்து தேங்காய்த் துவையல், ரசம், வித விதமாய் வடாம்கள், பொரிச்ச கூட்டு, சின்ன வெங்காய வத்தக்குழம்பு எல்லாம் செய்துவைத்து கூடிச் சேர்ந்து சாப்பிடும் சுகத்துக்கு சொத்தெழுதிக் கொடுத்தாலும் தாளாது.

holiday

 

சென்ற தலைமுறையில் வளர்ந்தவர்கள், குடும்பச் சூழலின் பலங்களையும் பலவீனங்களையும் தெரிந்தே வளர்ந்தார்கள். மனிதனிடம் நிறைகள் மட்டுமே இருக்காது. குறைகளும் உண்டென்னும் உண்மையைத்தான் சந்திக்கிற அத்தனைபேரிடமிருந்தும் கற்று வளர்ந்தார்கள். ஆனால் இப்போது, 'ஹச்' என்றால், மூக்கறுபடும் short tempered மனிதர்களாகவே நம் பிள்ளைகளை வளர்க்கிறோம். எவர் மீதும் எந்தவொரு நம்பிக்கையும் இல்லாததால்தான் குழந்தைகளை நம் உறவினர்களிடம் விட மனமில்லாமல், நம் உள்ளங்கையிலே வைத்துத் தாங்குகிறோம். மனிதர்களோடு பழகுவதை ,வாழ்வதை அறியாத குழந்தை, மருமகளாகவோ... மருமகனாகவோ ஆகும்போது தான் உறவுச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பெற்றோரைவிட கணினித்திரைகளும், ஆண்ட்ராய்டு போனும் முக்கியமாகிப்போன குழந்தைகளிடம், விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்குப் போறியா?" என்ற கேள்வியே பிடிப்பதில்லை.

கூட்டுக்குடும்பங்கள், தனிக் குடும்பங்களாகி, தனிக் குடும்பங்களும் தனித்தனி அறைகளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையில்... விடுமுறையில் கூடி, திருவிழா, சவ்வு மிட்டாய், ஊர்ச் சந்தை, அரட்டை எனக் குழந்தைகளுக்கு நாம் வாழ்ந்த பொக்கிஷ வாழ்வின் சிறுதுளியையேனும் கொடுத்துப் பழக்குவோமா?

- சரஸ்வதி காயத்திரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close