பயணிகள் என் சகோதர, சகோதரிகள்!' - பெண் நடத்துநரின் நம்பிக்கை விசில்

நடத்துநர்

''போலாம்... ரைட்'' என்ற இனிய குரலுடன் உற்சாகமாக நடத்துநர் விசிலை ஊதியதும் கிளம்புகிறது சேலம் டூ தேனி அரசுப் பேருந்து.

காற்று நுழையாத துறையிலும் இன்று பெண்கள் நுழைந்து சாதனை படைத்துவருவது சர்வ சாதாரணம். அப்படி பெரும்பாலும் ஆண்களே இருக்கும் பேருந்து நடத்துநர் வேலையிலும் அசத்தி வருகிறார் பெண் நடத்துநர் சிங்காரம்.
 
''எனக்குச் சொந்த ஊர் தருமபுரி. அரசு வேலைக்குப் போகணும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை. தமிழ் இலக்கியம் படிச்சு முடிச்சதும், நடத்துநர் வேலைக்கு விண்ணப்பிச்சேன். பயிற்சி முடிஞ்சு நாமக்கல் டு பெங்களூர் பஸ்ஸில் நான்கு மாதம் வேலை செஞ்சேன். இப்போ, சேலம் டு தேனி பஸ்ஸில் பத்து மாதங்களாக பயணம்'' என்று புன்னகைக்கிறார் சிங்காரம்.

''ஆரம்பத்தில் இந்த வேலைக்கு வர்றதில் தயக்கம் இருந்துச்சு. பயிற்சி வகுப்பில் பெண் என்ற வேறுபாடு இல்லாமல் நடத்தினதும் ஊக்கப்படுத்தியதும் தயக்கத்தை உடைச்சது. பயணிகளும் நல்லவிதமா நடந்துக்குறாங்க. குடிச்சுட்டு வண்டியில் ஏறுகிற சிலரை டீல் பண்றதுதான் ஆரம்பத்தில் பயத்தைக் கொடுத்துச்சு. இப்போ, அவங்களையும் எப்படி சமாளிக்கிறதுனு தெரிஞ்சுகிட்டேன்'' என்கிறார்.

இவரது கணவர் கூலி வேலை செய்கிறார். இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவன் முதலாம் வகுப்பும், நடத்துநர்இன்னொரு மகன் எல்.கே.ஜி-யும் படிக்கிறார்கள். ''என் பிள்ளைகளும் கான்வன்ட் பள்ளியில் யூனிபார்ம், டை, ஷூ போட்டுக்கிட்டு போகிற அழகைப் பார்த்து ரசிக்கவும், நாங்கள் கஷ்டப்படுவதை போல அவங்க கஷ்டப்படக் கூடாது என்கிற எண்ணமும் என்னை இந்த வேலையில் இன்னும் உற்சாகமாக ஈடுபடவைக்குது. குழந்தைகளைப் பிரிஞ்சு இப்படி வேலைக்கு வர்றது மனசுக்கு கஷ்டமாதான் இருக்கு. என் கணவர் குழந்தைகளைப் பார்த்துப்பார். நான் வேலைக்குக் கிளம்பும்போதெல்லாம் அவங்க கண்களில் ஒரு ஏக்கம் வர்றதைப் புரிஞ்சுக்க முடியுது. என்ன செய்யறது? அவங்களோட எதிர்காலம் நல்லா இருக்கணும்ன்னா இப்போ சில விஷயங்களை தியாகம் செஞ்சுதானே ஆகணும். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், 'அம்ம்ம்ம்ம்மா'னு ஓடிவந்து கட்டி அணைச்சுக்கிறப்போ சோர்வும் அலுப்பும் பறந்துடும். இந்த வேலையில் வீட்டுச் சுமைகளை குறைச்சு எனக்கு துணையாக இருக்கும் கணவர், உறவினர்களை நன்றியோடு நினைச்சுப்பேன். எல்லாத்துக்கும் மேலே இந்த வேலைக்கு வந்த பிறகு பெயர்களே தெரியாத நிறைய சகோதர்கள் கிடைச்சு இருக்காங்க. பஸ்ஸில் வரும் பயணிகள்தான் அந்தச் சகோதரர்கள். பெண் என்று பாகுபாடு பார்க்காமல் மரியாதையோடு பழகுவாங்க. எதிர்பாராத பிரச்னைகள் வரும் சமயத்தில் உதவி செஞ்சுட்டு நன்றியை கூட எதிர்பார்க்காமல் இறங்கி போய்ட்டே இருப்பாங்க. இந்த மாதிரி சகோதரகள் இருக்கும் வரையில் எந்த வேலையிலும் பெண்கள் தைரியமா இறங்கலாம்`` என்று சொல்லிவிட்டு சிங்காரம் விசிலை ஊத, இறக்கை முளைத்துப் பறக்கிறது அந்தப் பேருந்து. 

பெண்கள் சாதிக்கும் துறைகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருவது ஆரோக்கியமானது. பெண்களின் பலத்தைக் கூட்டுவதாக அமையும். சாதனை என்பதிலிருந்து நகர்ந்து இயல்பான வாழ்க்கையில் ஈடுபடும் அளவுக்கு பெண்கள் இந்தத் துறைக்குள் நகர்ந்திருப்பதை சிங்காரத்தின் நம்பிக்கை குரலிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அவரின் பயணம் பேருந்துக்குள் மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கான முன்மாதிரியான பயணமும்கூட.

உ.சுதர்சன் காந்தி (மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள் – வீ.சக்தி அருணகிரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!