வெளியிடப்பட்ட நேரம்: 20:39 (05/04/2017)

கடைசி தொடர்பு:20:39 (05/04/2017)

ஒரே நிமிடத்தில் பணப் பரிவர்த்தனை... பீம் ஆப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

மொபைல் போன் மூலமாக பணப் பரிவர்த்தனைகளை எளிதாக, உடனடியாக அனுப்ப முடியும் வகையில் `பாரத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி' (பீம்) எனும் பெயரில் மொபைல் அப்ளிகேஷனை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த அப்ளிகேஷனை இதுவரை 1.8 கோடிக்கும் மேல் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இந்த பீம் அப்ளிகேஷன் வசதி பலருக்கும் தெரியாமலே இருக்கிறது. 

பீம் ஆப், bhim app, பணப் பரிவர்த்தனை

எப்படி உபயோகப்படுத்துவது? 

பீம் ஆப் முதலில் பயன்படுத்துவதற்கு முன் உங்களுக்கு வங்கி கணக்கு இருக்க வேண்டும். அந்த வங்கி கணக்குடன் உங்கள் மொபைல் நம்பர் இணைத்து இருக்க வேண்டும். இவை இரண்டும் இருந்தால் பீம் அப்பிளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்யுங்கள். (உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் 4.1.1 வெர்ஷன் அல்லது அதற்கும் மேற்பட்டதாக இருக்க வேண்டும்). 
பீம் அப்ளிகேஷனை ஓபன் செய்தபிறகு, உங்கள் மொபைல், சிங்கில் சிம் அல்லது டபுள் சிம் என்ற ஆப்சனை கேட்கும். டபுள் சிம் எனில் அதைத் தேர்வு செய்யுங்கள். அதன் பின் உங்கள் நம்பர் வெரிஃபிகேஷன் நடக்கும். அதன் பிறகு நான்கு நம்பர் பாஸ்கோட், பதிவு செய்ய வேண்டும். இது ஒவ்வொரு முறையும் பீம் ஆப் உள்ளே நுழையும் போது கேட்கும். இது முக்கியம், குறித்துவைத்துக் கொள்ளவும். 

அதன் பின் எந்த வங்கியில் உங்களுக்குக் கணக்கு உள்ளதோ, அந்த வங்கியைத் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இதன் பின்னர் யூபிஐ பின் நம்பரைப் பதிவு செய்ய வேண்டும். இது ஒவ்வொரு முறை, பணம் மற்றவர்களுக்கு அனுப்பும் போது இறுதியில் கேட்கப்படும். (இது அவசியம், குறித்து வைத்துக் கொள்ளுங்கள்). இதன்பின் உங்கள் டெபிட் கார்டின் கடைசி 6 இலக்க எண் மற்றும் உங்கள் கார்டின் வேலிடிட்டி மாதம் மற்றும் வருடத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதன் பின்னர் பீம் ஆப் ஹோம் பேஜ்-ல் பணம் அனுப்புதல், பெறுதல் அல்லது QR கோட் மூலமாக பணத்தை செலுத்தவும் முடியும்.

பணத்தை எப்படி அனுப்புவது? 

பணத்தை உங்களுடைய நண்பர் அல்லது உறவினருக்கு அனுப்ப வேண்டுமெனில், யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவருடைய மொபைல் நம்பரைக் குறிப்பிட்டு பணத்தை அனுப்பலாம். அவருடைய மொபைல் நம்பர் பதிவு செய்யாமல் இருந்தால், யாருக்கு அனுப்புகிறோமோ அவருடைய பெயர், அவர் வங்கி கணக்கு எண் மற்றும் IFSC Code பதிவு செய்து பணத்தை அனுப்பலாம். 
இப்போது 30க்கும் மேற்பட்ட வங்கிகள் இந்தச் சேவையை வழங்கி வருகின்றன. இதில் எந்த வங்கியில் உங்களுக்குக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கியைத் தேர்வு செய்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். உங்களுடைய வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். தற்போது ஒரு பரிவர்த்தனையில் 10,000 ரூபாய் மட்டுமே அதிகபட்சமாக அனுப்ப முடியும். 24 மணி நேரத்துக்குள் 20,000 ரூபாய் வரை அனுப்பலாம். இப்போது இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளில் மட்டுமே இயங்கி வருகிறது. விரைவில் மாநில மொழிகளிலும் பீம் ஆப் சேவை வர உள்ளது. 

பயன்படுத்துவோரின் கவனத்துக்கு...! 

பீம் ஆப் பயன்படுத்துவோர் மூன்று விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, பாஸ்கோட் (Passcode). இரண்டாவது, பேமென்ட் முகவரி. மூன்றாவது, யூபிஐ பின் (UPI PIN) நம்பர். இந்த மூன்று விஷயங்களை மட்டும் தெரிந்தால் பணத்தை ஒரே நிமிடத்தில் எளிதாக, உடனடியாக யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம், பெறலாம். 

-சோ.கார்த்திகேயன்


டிரெண்டிங் @ விகடன்