வெளியிடப்பட்ட நேரம்: 09:24 (10/04/2017)

கடைசி தொடர்பு:09:24 (10/04/2017)

ஹாரி பாட்டரை உருவாக்கிய அந்த 4 மணி நேர நம்பிக்கை! ஜே.கே.ரெளலிங்கின் வெற்றிக் கதை #MondayMotivation

ஜே.கே.ரௌலிங்

'ஹாரி பாட்டர்' என்பதைப் படித்ததுமே ஹாரியும் அவனது நண்பர்களும் துடைப்பத்தில் பறப்பதுதான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் ஈர்க்கும் விதத்தில் ஹாரிபாட்டரின் கதை அமைந்திருக்கும். ஜே.கே.ரெளலிங் எழுதிய ஹாரி பாட்டர் இதுவரை ஏழு பகுதிகளாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு பகுதி வெளியாகும் தினத்தன்று உலகம் முழுவதும் உள்ள அதன் வாசகர்கள், புத்தகக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று நூலை வாங்குவார்கள்.

ஹாரி பாட்டர் கதை திரைப்படமாக வெளியாகி கோடிக்கணக்கில் வசூலைக் குவித்தது. ஆனால், அந்தக் கதையை எழுதிய ஜே.கே.ரௌலிங்க் மிகவும் வறுமையான சூழலில் வளர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது.

ஜே.கே.ரெளலிங், இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டன் எனும் நகரில் 1965 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்தவர். ஒரு கிராமத்துப் பள்ளியில் படித்தாலும் ஆசிரியர்கள் விரும்பும் மாணவியாக விளங்கினார். குடும்பச் சூழல் கல்வியைப் பாதிக்காத அளவு கவனம் செலுத்தினார். தனது ஆறாவது வயதிலேயே கதைகள் மீது பேரார்வம் கொண்டவராக விளங்கினார். தனது தங்கைக்கு நிறையக் கதைகளைச் சொன்னார். கதைகளை எழுதவும் செய்தார்.

ரெளலிங் போர்ச்சுகல் நாட்டில் ஆசியராக பணியாற்றியபோது, காதலித்துத் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அந்தப் பந்தம் நீடிக்கவில்லை. ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் விவகாரத்தானது. அந்த நாட்களில் ரெளலிங் கடுமையான மன வலியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் தன்னம்பிக்கையின் கரம் பிடித்து மீண்டு வந்தார். அந்த நாட்களில் கதைகளைப் படிப்பதை அன்றாட வழக்கமாக்கி கொண்டார். அதன் வழியே ஏராளமான கதைகள் அவர் மனதினுள் உருவாகின. ஆனாலும் பொருளாதாரச் சூழல் நின்று நிதானமாக எழுதும் நிலையில் இல்லை.

ஹாரி பாட்டர்

ஒருநாள், மான்செஸ்டரிலிருந்து லண்டனுக்குச் செல்ல ரயிலுக்காக காத்திருந்தார் ரெளலிங். ரயில் சுமார் 4 மணிநேரம் தாமதமாக வந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் கருவாக உருவானதுதான் ஹாரி பாட்டர் கதை. ரயில் பயணத்தின்போது அந்தக் கதையை இன்னும் செதுக்கினார். எதுவும் மறந்துவிடக் கூடாதென்று கைக்குட்டையில் குறிப்பெடுத்துக்கொண்டார். அந்தக் கதையை எழுத நேரமும் கம்ப்யூட்டரோ இல்லை. ஒரு டைப்ரைட்டரில் கிடைக்கும் இடங்களில் அமர்ந்து எழுதி முடித்தார்.

ரெளலிங் கஷ்டப்பட்டு அந்த நாவலை எழுதி முடித்து, பதிப்பகத்தினரை அணுகும்போது பெரிய ஏமாற்றமே கிடைத்தது. பெரும்பாலோர் அதைப் பதிப்பக்க தயாராக இல்லை. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ப்ளும்ஸ்பரி எனும் பதிப்பகம் மிகக் குறைந்த பணம் கொடுத்து, அதைப் பதிப்பத்தது. ஆனால், வாசகர்கள் அந்த நாவலுக்காக காத்திருந்ததைப் போல அச்சடித்த 1000 பிரதிகளை வாங்கிச் சென்றனர். அதன்பிறகு ரெளலிங்கின் அடையாளம் ஹாரி பாட்டராக மாறிபோனது. அவரின் கையெழுத்து பிரதி மிகப் பெரிய தொகைக்கு விற்றது.

ஜே.கே.ரெளலிங் வாழ்வில் துயரமான நாட்களில் அவர் மனதில் உருவான எண்ணங்களின் பாதிப்பில் வில்லன் கதாபாத்திரங்களை உருவாக்கினார். இவரது நாவல் திரைப்படமானதும் உலகில் பணக்காரப் பெண்களில் ஒருவராக மாறினார். ஹாரி பாட்டரின் இறுதி பகுதி வெளியான 24 மணிநேரத்தில் 1 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்று உலகையே ஆச்சர்யப்பட வைத்தது.

வறுமையில் வாடிய ஒருவர் இந்த நிலைக்கு ஆளானது ஒவ்வொரு பெண்ணுக்கும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டியது. ஆனால், அவரின் வாழ்க்கைப் பற்றி பலராலும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. அவர் தற்கொலைக்கு முயன்றார் என்றும் ஒரு விமர்சனம் கூறப்பட்டது. இந்தக் கேள்வி அவரைத் துரத்திக்கொண்டேயிருந்தது. அதற்கு, அவர், 'என் கணவர் பிரிந்த நிலையில் அப்படியொரு மனநிலையில்தான் இருந்தேன். இதில் ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை' என்று பதில் அளித்தார். விமர்சனங்களைக் கண்டு ஓடி ஒளியாமல் துணிவோடு, உண்மையைப் பகிர்ந்துகொண்டார் ரெளலிங்க். இது அவரைப் பற்றி விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்தது.

எளிய குடும்பத்திலிருந்து இன்று உலகமே திரும்பிப் பார்க்க வைக்கும் நிலையில் வாழும் ரெளலிங் வாழ்வே ஒரு பாடம்தான்.

- வி.எஸ்.சரவணன்.


டிரெண்டிங் @ விகடன்