Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களை நாள் முழுக்க புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் 5 பழக்கங்கள்!

பெண்

ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் இருக்கும் புத்துணர்ச்சி அந்த நாள் முடிவடையும் போது இருப்பதில்லை. பெண்களுக்கு என்று ஏராளமான வேலைகள் இருக்கின்றன. அவற்றை திட்டமிட்டு செய்யும்போது நமது புத்துணர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் இயல்பானவை என நினைத்திருக்கும் சில பழக்கங்கள், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அவைத் தொடர்ந்தால் ஆரோக்கியத்திற்கு இடையூறாக மாறிவிடவும் செய்யலாம். அதனால் அவற்றை சரிசெய்துகொள்வது நல்லது.

1. பொருத்தமான காலணிகள்:

நம் உடலின் மொத்த எடையையும் சுமப்பவை செருப்புகள். ஹீல் செருப்புகள் அன்றாடம் பயன்படுத்துவதற்கு ஏற்புடையவை அல்ல, எனினும் இன்று பெரும்பாலானோர் அதை உபயோகிக்கின்றனர். ஹீல் செருப்புகளைப் பயன்படுத்துவதனால் நாளடைவில் நம் முதுகுத்தண்டு மற்றும் முட்டியின் இணைப்புகள் அனைத்தும் வெகுவாக பாதிக்கப்படக்கூடும். எனவே தினமும் ஹீல் செருப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் பயன்படுத்த நினைப்பவர்கள் ஹீல் குறைவான அளவுள்ள செருப்புகளை அணிந்துகொள்ளலாம்.

ஹேண்ட் பேக்

2. ஹேண்ட் பேக்:

பெண்கள் தினமும் கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லும் ஹேண்ட் பேக் அதிக எடையுள்ளதாக இருக்கக்கூடாது. ஹேண்ட் பேக்கில் மொபைல், பவர் பேங்க், துப்பட்டா,  டிபன் பாக்ஸ் உள்ளிட்ட ஏராளமான பொருள்களை வைத்திருப்பார்கள். எனவே, பலரும் பெரிய ஹேண்ட் பேக்குகளைப் பயன்படுத்துகிறார்கள்.

ஹேண்ட் பேக்கை தோளின் ஒரு பக்கம் மட்டும் உபயோகிக்கப்படுவதால் அதில் அதிக சுமை இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது தோள்பட்டை வலி மற்றும் கழுத்துவலிக்கு வித்திடும் நிலைமை ஏற்படும். எனவே தேவையற்ற பொருள்களை குப்பைகளை வாரம் ஒரு முறையாவது கழித்துக் கட்டி அளவான சுமையோடு பைகளை உபயோகிப்பதே நல்லது.

மேக்கப்

3. மேக்கப்:

திருமண ரிசப்ஷன், பிறந்தநாள் பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு மாலை நேரங்களில் மேக்கப் செய்துகொண்டு சென்றால் வீடு திரும்ப இரவு 10 மணிக்கும் மேலாகி விடலாம். நீண்ட நேரம் மற்றும் பயணம் செய்த சோர்வில் மேக்கப்பை க்ளீன் செய்யாமல் தூங்கி விடுபவர்கள் பலரும் இருக்கின்றனர். ஐ லைனர், மஸ்கரா போன்ற மேக்கப் சாதனங்களில் உள்ள கெமிக்கல்கள் இரவு முழுவதும் முகத்தில் இருந்தால் சருமப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் கண்களில் தோன்றும் இன்ஃபெக்‌ஷன் எரிச்சலையும் ஏற்படுத்தும். எனவே எவ்வளவு தாமதமானாலும் மேக்கப்பை அகற்றிவிட்டு தூங்கச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

4.மதிய நேரத்துத் தூக்கம்:

பொதுவாகவே, இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் வேலைகளை முடித்த அசதியில் மதியம் சாப்பிட்டவுடன் உறங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதை மாற்ற வேண்டியது அவசியம். அன்றாடம் இவ்வாறு தூங்குவதுதான் உடம்பில் கொழுப்புகள் அதிகளவில் சேர்ந்துவிடலாம். மதிய நேரத் தூக்கத்திற்கு குட் பை செல்லிவிட்டு, அந்த நேரத்தில் மனதுக்குப் பிடித்த விஷயங்களில் கவனத்தைத் திருப்புவது நல்லது.

5. உள்ளாடைத் தேர்வில் கவனம்.

ஏறத்தாழ எழுபது சதவிகிதம் பெண்கள் சரியான அளவுகளில்  ப்ராவைத் தேர்ந்தெடுத்து அணிவதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முழுக்காரணம் ப்ரா வாங்கும்போது இருக்கும் கூச்சமும் தயக்கமும்தான். வெளித்தோற்றத்திற்காக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திலும் உள்ளாடையின் பங்கு இருக்கிறது எனப் புரிந்துகொண்டால் தயக்கம் விலகியோடும். பொருத்தமற்ற அளவு ப்ரா அணிவதால், முதுகு மற்றும் கழுத்து பகுதிகளில் வலி ஏற்படுவதோடு, இரத்த ஓட்டம் சீரான முறையில் அமையாது. எனவே ப்ரா அளவை தோராயமாக நீங்களே கணக்கிடாமல் தெளிவான அளவு எடுத்து சரிபார்த்து வாங்குவது அவசியம்.

பெண்கள் மனதையும் உடலையும் புரிந்துகொண்டால், அதற்கேற்ற நல்ல பழக்கங்களைப் பின்பற்றினால் ஒவ்வொரு தினமும் மகிழ்ச்சியாக இருக்கும்.

- எஸ்.எம்.கோமதி (மாணவப் பத்திரிகையாளர்)

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement