Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த 5 தடைகளைக் கடந்துவிட்டால் வாழ்வில் கசப்பே கிடையாது பெண்களே..!

பெண்


ஒருவருக்கு நிலையான மகிழ்ச்சி என்பது, காகம், ஜாடிக்குள் ஒவ்வொரு கல்லாக எடுத்துபோட்டு நீரை மேலே கொண்டுவரும் கதைபோன்றதுதான். அதுவும், பெண்கள் எனும்போது அந்த ஜாடியின் உயரம் இன்னும் உயரமாகி விடும். ஆண்களுக்கு மிக இயல்பாக கிடைக்கும் விஷயங்களை பெண்கள் பெற, பெரும் போராட்டத்தையே நிகழ்த்த வேண்டியிருக்கும். ஆனாலும் அதற்காக தயங்கினால், உண்மையான மகிழ்ச்சியை எளிதாக தொலைத்துவிடுவோம்.

பிறந்ததிலிருந்து ஒரு பெண்ணுக்கு பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனாலும் அவற்றில் இந்த ஐந்து தடைகள் பிரதானமானவை. அவை என்னென்ன... அவற்றைக் கடந்துவருவதுப் பற்றியும் பார்ப்போம்.

1. கல்விக்கு விடைக் கொடுக்காதீர்:

அறிவு என்பதே குறையாத செல்வம். பல்லாண்டு காலமாய் பெண்களுக்கு எட்டா கனியாகவே இந்தச் சமூகம் வைத்துவிட்டது. பெரும் போராட்டத்தின் விளைவாய் பெண்அரை நூற்றாண்டாகத்தான் பெண்களுக்கு கல்வி பரவலாக செல்கிறது. ஆனாலும், இடைநிற்றலில் பெண்களின் சதவிகிதம்தான் அதிகம். எனவே, எந்தச் சூழலிலும் எவர் தடுத்தாலும் கல்விக்கு விடைக் கொடுக்காதீர். உங்களின் வாழ்வின் பெரும்பயணத்தின் கடவுச்சீட்டே கல்விதான். அதைப் பத்திரப் படுத்துவது அவசியம்.

2. சரியான வயதில் கல்யாணம்:

பெரும் பாடுப்பட்டு கல்வியைப் பெற்றிருப்பீர்கள். படிப்பு முடிந்துவிட்டது அப்பறம் என்ன கல்யாணம்தானே... என வீட்டினர் ஆரம்பிப்பார்கள். இன்னும் பல வீடுகளில் மேற்கொண்டு படிக்க கேட்கும் பெண்களின் வாயை அடைப்பதற்கு கல்யாணம் செய்துவைத்து விடலாம் என முடிவெடுக்கிறார்கள். அதிலும் அரசு நிர்ணயத்த திருமண வயதுக்கு முன்பே. சரியான வயதுக்கு முன் ஏற்பாடு செய்யப்படும் திருமணத்தை ஒருபோதும் அனுமதிக்காதீர். உங்களின் உறவினர்கள் வீட்டில் இதுபோன்ற ஏற்பாடு நடந்தாலும் உங்களுக்கே நிகழ்வதாக நினைத்து தடுத்து நிறுத்துங்கள்.

3. வேலைக்கு வெல்கம்:

கல்வி என்பது திருமணப் பத்திரிகையில் போட்டுக்கொள்வதற்கு என்ற எண்ணத்தை பெண்கள் விட்டொழித்த காலம் இது. ஆனாலும் பெண்களை வேலைக்கு அனுப்புவதில் பெற்றோருக்குப் பல தயக்கங்கள் இருக்கின்றன. உள்ளூரில் வேலை என்றால் ஓகே சொல்லிவிடுவார்கள். ஆனால் வெளியூர், வெளி மாநிலம் என்றால் தடைதான். அதுவும் வெளிநாடு என்றால் அனுமதிக்கு வாய்ப்பே இல்லை. உங்களின் சூழலைப் பெற்றோருடன் பேசிப் புரிய வைய்யுங்கள். படித்த படிப்பு விரயமாவதைச் சொல்லுங்கள். எப்படியேனும் வேலைக்குச் செல்லுங்கள். வேலையே உங்களின் இன்னொரு முதுகெலும்பு.

4. வேறுபாடுகளை உடைப்போம்:

எந்த இடத்திலும் ஆண், பெண், திருநங்கை என வேறுபாடுகள் நிறைந்திருக்கும் சமூகம் இது. அதை நாம் நன்கு அறிவோம். ஆனால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்விக்கூடங்கள், வேலை பார்க்கும் இடங்கள், பொது இடங்கள் என எங்கு பாலினப் பாகுபாடு காட்டப்பட்டாலும் அதற்கு எதிரான குரல் எழுப்புங்கள். அந்தக் குரலே உங்களால் பேச முடியும் என்பதை நிருபிக்கும் விஷயம் என்பதாக புரிந்துகொள்ளுங்கள்.

5. வேலைகளில் பங்கு:

வீடுகளில் ஜனநாயம் இன்னும் பூரணமாய் பூக்காத சமூக அமைப்பில்தான் வாழ்கிறோம். அதிரடியாக தலைகீழாக மாற்றிவிட முடியாது என்றாலும் வாழ்நாள் முழுவதும் சகித்துக்கொண்டிருக்கவும் தேவையில்லை. வீடுகளின் வேலைகளை ஆண், பெண் எனப் பிரிக்காமல், ஒவ்வொருவரின் வேலை நேரம், ஓய்வு நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்துகொடுங்கள். தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும் சில மாதங்களில் வீட்டினருக்கு இயல்பாகி விடும்.

பெண்களின்  சுய விருப்பம், பாதுகாப்பு, சேமிப்பு உள்ளிட்ட இன்னும் விஷயங்கள் இருப்பினும் மேற்கண்ட விஷயங்கள் பெண்களின் மகிழ்ச்சியான வாழ்வின் அடிப்படைத் தேவைகள். எனவே அவற்றை எப்படியேனும் வெற்றிக்கரமாக கடந்துவிடுங்கள்.

-வி.எஸ்.சரவணன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement