கலாசாரத்தில் மட்டுமில்லை... வளர்ச்சியிலும் வித்தியாசம் காட்டும் இந்தியா! #GDP | Not only in the culture... India shows difference in development too

வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (16/04/2017)

கடைசி தொடர்பு:18:05 (18/04/2017)

கலாசாரத்தில் மட்டுமில்லை... வளர்ச்சியிலும் வித்தியாசம் காட்டும் இந்தியா! #GDP

நம் நாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு மாநிலமும் வித்தியாசமான கலாசாரத்தில் வேறுபடுவது அனைவரும் அறிந்ததே. ஆனால், இப்போது கலாசாரத்தில் மட்டுமில்லை, மாநிலத்தின் வளர்ச்சியிலும் மிகப் பெரிய வித்தியாசத்துடன் இருப்பது தெரியவந்துள்ளது. 

இந்தியா, ஜிடிபி,


இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுத்தவரை ஜிடிபி அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாக வைத்தே மதிப்பிடப்படுகிறது. இப்போது இந்தியாவின் ஜிடிபி 2.25 டிரில்லியன் டாலராக இருக்கிறது. 2016-ல் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதம். ஆனால், நம் நாட்டில் மாநிலங்கள் வாரியாக ஜிடிபி பங்களிப்பில் பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. நாட்டின் ஜிடிபி-ல் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மூன்று மாநிலங்கள் மட்டுமே அதிக அளவிலான பங்களிப்பினை அளிக்கின்றன. இந்த மூன்று மாநிலங்களின் ஜிடிபி பங்களிப்பு 778 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் 20 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து ஜிடிபி பங்களிப்பினை விட இந்த மூன்று மாநிலங்களின் பங்களிப்பு அதிகம். 

நாட்டின் ஜிடிபி பங்களிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் பன்னாட்டு வர்த்தகம், ஏரோஸ்பேஸ், டெக்னாலஜி, பெட்ரோலியம், பேஷன், ஆடை தயாரிப்பு, சுற்றுலா எனப் பல துறைகளில் முன்னிலையில் திகழ்கிறது. தொலைக்காட்சி, திரைப்படங்கள், வீடியோ விளையாட்டுகள் மற்றும் இசை என மாஸ் மீடியாவில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. மும்பை, இந்தியாவின் நிதி தலைநகராகவும், பல கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமையகமாகவும் திகழ்கிறது. இந்திய பங்குச் சந்தை மற்றும் சேவைத்துறையில் மகாராஷ்டிரா மாநிலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுமட்டுமின்றி நாட்டிலேயே நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தியிலும், அணுமின் உற்பத்தியிலும் முதல் இடத்தை மகாராஷ்டிரா பிடித்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து தமிழகம், ஜிடிபி பங்களிப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2014-15-ம் நிதி ஆண்டின் படி தமிழகத்தின் ஜிடிபி 150 பில்லியன் டாலர். தமிழகத்தின் மொத்த ஜிடிபி-ல் விவசாயம் மற்றும் மென்பொருள் துறை மிகப்பெரிய பங்களிப்பினை அளிக்கிறது. காக்னிசென்ட், வெரிசோன், ஸ்னைடர் எலக்ட்ரிக், கோவன்சிஸ், சான்ஸா, ஐசாஃப்ட், இன்வென்சிஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. 

கடந்த 10 வருடத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கர்நாடகா ஜிடிபி-ல் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. விவசாயம், தொழிற்துறை, சேவைத் துறை என கர்நாடகா மாநிலம் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக கர்நாடகா, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவானாகத் திகழ்கிறது. இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமே, இந்தியாவின் மொத்த ஜிடிபி-ல் பெரும் பங்களிப்பு அளிக்கின்றன. 

ஆனால், 1960-ல் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஆண்டு ஒன்றுக்கு 390 ரூபாய், தமிழகத்தின் வருமானம் 330 ரூபாய். 2014ல் மேற்கு வங்காள மாநிலத்தினரின் வருடாந்திர வருமானம் 80,000, தமிழர்களின் வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய் என பெரிய வித்தியாசத்துடன் காணப்படுகிறது. இதேபோல் 1960-ல் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழகம், 2014-ல் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக முன்னேறியுள்ளது. தமிழகத்தைப்போல, தென்னிந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகா மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் மேற்கு வங்காளம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியில் தொய்வடைந்துள்ளது. 

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களின் ஜிடிபி 1960-ல் ஒன்றாகவே இருந்தது. ஆனால், 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய வித்தியாசத்துடன் காணப்படுகிறது. 1960-ல் இந்தியாவின் ஜிடிபி-ல் பங்களிப்பு அளிக்கும் டாப் 3 மாநிலங்களுக்கும், கடைசி 3 மாநிலங்களுக்கும் இடையே 1.7 மடங்கு மட்டுமே வித்தியாசம் இருந்தது. இப்போது 2014-ல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. உலகிலேயே, இந்தியாவில்தான் ஏழை மற்றும் பணக்கார மாநிலங்களுக்கு இடையே ஜிடிபி பங்களிப்பில் பெரிய இடைவெளி காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

-சோ.கார்த்திகேயன்


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close