ஆதார் குளறுபடிகள்... மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் அரசு?!

`வருமான வரி தாக்கல் செய்வோர், பான் எண், ஓட்டுநர் உரிமம், விமான டிக்கெட், எரிவாயு மானியம் ஆகியவை பெற விழைவோர், செல்போன் பயன்படுத்துவோர் போன்றோர், தங்களது ஆதார் எண்ணைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என அரசு சொல்கிறது. இவ்வளவு ஏன், கர்நாடகா மாநிலத்தில் கைதிகளைப் பார்க்கக்கூட ஆதார் எண் கட்டாயம் எனப் பட்டியல் நீள்கிறது. 

ஆதார்,

ஒவ்வொருவருக்கும் முகம், கருவிழிகள் மற்றும் கைவிரல் ரேகைகள் பதிவுசெய்யப்பட்டு, பெயர் முகவரியுடன் ஆதார் எண் வழங்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் சமையல் எரிவாயு, குடும்ப அட்டை, பல்வேறு அரசு மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு இந்த எண் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், செல்போன் சேவைக்கும் இந்த எண் கேட்கப்படும் நிலையில், ஆதார் விவரங்கள் திருடப்படுவதாகவும், அவை இணையம் வழியே யாருக்கும் கிடைக்கும் வகையில் உள்ளது போன்ற சர்ச்சைகளும் எழுகின்றன. `பொதுமக்களின் ஆதார் விவரங்களை யாரும் திருடிவிட முடியாது. ஒருவரின் அனுமதி இல்லாமலோ, அவருக்குத் தெரியாமலோ அவரின் ஆதார் விவரங்களை வேறு ஒருவர் பயன்படுத்த இயலாது' என மத்திய அரசு விளக்கம் அளித்தாலும், இதை எந்த அளவுக்கு நம்புவது என்பது தெரியவில்லை. 

ஒரு கார்டு வைத்துக்கொண்டு அனைத்து தேவைகளையும் சாதித்துக்கொள்வது நல்ல விஷயம் என்ற வகையில் இந்தத் திட்டத்தை வரவேற்கலாம். அரசும், உள்ளூர் தீவிரவாதிகள் முதல் சர்வதேச தீவிரவாதிகளின் செயல்பாடு வரை குறைய வாய்ப்புள்ளதாகச் சொல்கிறது. ஆனால், அனைவருக்கும் ஆதார் எண் தேவை என்றால் ஏற்கலாம். அதே சமயம் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதார் எண் தேவை என்பதை எப்படி ஏற்பது என்பதுதான் தெரியவில்லை. இது, தனிமனிதச் சுதந்திரத்தை மீறும் அல்லது தடைசெய்யும் செயலாகாதா? தனிமனித ரகசியம் மற்றும் முகவரிகள், வங்கிக்கணக்குகள் ஒன்றிணைவதால் தேவையற்ற குற்றச் செயல்களுக்கு வழிவகுப்பதுடன், மனஉளைச்சலையும் ஏற்படுத்துமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

`ஆதார் ஒரு மோசடித் திட்டம். இது, தனிநபர்களின் ரகசியங்களையும் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டத்தைத் தூக்கி எறிவோம்' என்று பிரதமராவதற்கு முன்பு சொன்னவர் மோடி. ஆனால், இவர் பிரதமரான பிறகு ஒவ்வொரு பிரிவிலும் இந்தத் திட்டத்தை அவசியமாக்குவது எந்த வகையில் நியாயம்? `ரேஷனுக்கு ஆதார் கட்டாயம்' என்கிறது மத்திய அரசு. ஆனால், மாநில அரசு `கட்டாயமில்லை' என்கிறது. அதே நேரத்தில் ரேஷன் கடைகளில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனில், பொருள்களைத் தர மறுப்பதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. இன்றளவும் ரேஷன் கார்டில் ஆதார் எண் இணைக்கும் பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் பொருள்கள் தர மறுப்பதால், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். 

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி `500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற அறிவிப்பால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். இப்போது ஆதார் எண் அவசியத்தால், அரசு தனிமனிதச் சுதந்திரத்தை மீறுவதாகவே தோன்றுகிறது. ஆனால், ஒரு திட்டத்தை நீதிமன்றம் `கட்டாயமில்லை' என்கிறது, மத்திய அரசு `கட்டாயம்' என்கிறது. மாநில அரசு `அவசியமில்லை' என்கிறது. ஆனால், கடைநிலை ஊழியர்கள் `அவசியம்' என்கிறார்கள். பொதுமக்கள் என்னதான் செய்வார்கள்? 
மக்கள் தலையில் மிளகாய் அரைப்பது ஏன்? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!