பயமுறுத்தும் `பக்கெட்'... 56,000 ஐ.டி. ஊழியர்களின் வேலை!? #ITLayoffs #ITCrisis

`நான் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என்னைப் ‘பெஞ்ச்’-ல் போட்டு விட்டார்கள். 4 வருடம் இரவு பகல் பாராமல் வேலை செய்தேன். இப்போது 3 ஆம் ‘பக்கெட்’ கொடுத்து பெஞ்சில் போட்டுவிட்டார்கள். இன்னும் 2 மாதத்தில் ப்ராஜெக்ட் கிடைக்காவிட்டால் வெளியேற வேண்டியதுதான். ஏன்டா வேலைசெய்தோம் என வெறுப்பாக இருக்கிறது' -  இது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணின் பதிவு. 

ஐ.டி., வேலை

இது இவருடைய மனநிலை மட்டுமில்லை. இந்தியாவில் இன்ஃபோசிஸ், காக்னிசன்ட், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, கேப்ஜெமினி  உள்ளிட்ட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் ஐடி துறையில் பணிபுரியும் பலரும் ஆட்டம் கண்டுள்ளனர். ஐடி துறையில் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சத்தம் இல்லாமல் செய்யும் விஷயம்தான் ஆட்குறைப்பு. ஆனால், இந்த ஆண்டில் மட்டும் குறைந்தது 56,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முன்னணி ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சென்ற ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில் ஐடி துறையில் இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், காக்னிசன்ட், டி.எக்ஸ்.சி டெக்னாலஜி மற்றும் கேப்ஜெமினி போன்ற ஏழு நிறுவனங்களில் 12.40 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 2017-ல் மட்டும் 4.5 சதவிகிதம் அதாவது 55,800 பேரை வேலையில் இருந்து அனுப்ப இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இந்த ஊழியர்களை பணிநீக்கத் தயாராகும் வகையில், இந்த ஏழு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஏற்கெனவே தங்களது பணியாளர்களைக் குறைந்த தரவரிசைகளை (பக்கெட்) வழங்கி பெஞ்சில் அமர்த்தியுள்ளனர். இதில் காக்னிசன்ட்டில் மட்டும் 15,000 ஊழியர்களை மிகவும் குறைந்த தரவரிசையான 4 ஆம் பக்கெட்-ல்  பணியமர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 3,000 பேரும் குறைந்த தரவரிசையில் பெஞ்சில் அமர்த்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

ஐடி துறையில் ஊழியர்களின் திறமையை மதிப்பிடுவதற்காகவும், அவர்களைத் தரவரிசைப்படுத்தவும் ‘பக்கெட்’ எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஐடி நிறுவனங்களைப் பொறுத்து 3 அல்லது 4 ‘பக்கெட்’கள் என ஊழியர்களை தரவரிசைப் படுத்துகின்றனர். இதில் `1 ஆம் பக்கெட்' என்பது நன்றாக வேலை செய்தவர்கள் என்றும், `2 ஆம் பக்கெட்' என்பது சராசரியாக வேலை செய்தவர்கள் என்றும், `3 ஆம் பக்கெட்' 3 என்றால் மோசமாக வேலை செய்தவர்கள் என்றும் குறிப்பிடப்படுவதாக ஐடி ஊழியர்கள் சொல்கின்றனர். 

இப்போது ஆட்டோமேஷன், டிஜிட்டல் டெக்னாலஜிஸ் மட்டுமின்றி அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகளால் அந்த நாட்டு மக்கள் மட்டுமல்ல இந்தியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், `பை அமெரிக்கன் ஹயர் அமெரிக்கன்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக வரி விதித்தது, ஹெச்1பி விசாவுக்குக் கட்டுப்பாடுகள் விதித்தது என பல பிரச்னைகள் இப்போது விஸ்வரூபமெடுத்துள்ளதால் இந்தமுறை பெரும்பாலான நிறுவனங்கள் ஒரே சமயத்தில் பலரை பக்கெட்டில் போட்டுவிட்டனர்; ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இது ஐடி ஊழியர்கள் மட்டுமில்லாமல், அவரது குடும்பத்தினரையும் கதிகலங்க வைத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!