Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒவ்வொரு கேங்லயும் ஒரு ரகுராம் ராஜன் இருப்பாரே! - டூர் அட்ராசிட்டீஸ்

மிழகமே தலைமையேற்க யார் வருவாங்கனு தெரியாம விழிபிதுங்கி நின்ற தருணத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ க்கள் அசால்ட்டா ரிசார்ட்டுக்கு டூர் போட்டு ஒரு வாரம் ஜமாய்க்கிறாங்க. ஆனால் சம்மர் டூர், வீக்கெண்ட் டூர், பேச்சிலர் டூர்னு நம்மாளுக விதவிதமா பேர் வெச்சு டூர் போக ப்ளான் பண்ணினாலும் ப்ளான் அம்புட்டும் ப்ளான் பண்றதோடயே படுத்துப் பஸ்பமாகிடும். சுற்றுலாத் திட்டத்தைச் சிதைக்கிறதுக்காகவே நம்ம கூடவே நாலு பேர் எந்நேரமும் செய்வினையும் கையுமா திரிவாய்ங்க. அவிங்களை எல்லாம் சமாளிச்சு, சுத்தி இருக்கிறவய்ங்க நம்மை நோக்கி எரியிற சொல்லம்புகளை எல்லாம் கேட்ச் பிடிச்சுத் தரையில போட்டு மிதிச்சு ஒருவழியா அந்தப் ப்ளானை எக்ஸிகியூட் பண்ணினா என்னவெல்லாம் நடக்குது தெரியுமா..?

டூர்

* நம்ம ஆட்கள் சுற்றுலாத் திட்டத்தை வெறிகொண்டு செயல்படுத்தத் துடிக்கிறதே சீனியர்களோட சீண்டல்களில் இருந்து தப்பிக்கத்தான். 'எத்தினி வருசமா கூழ் ஊத்தினிக்கிறே நீயி..? நானெல்லாம் பாலிடெக்னிக் படிக்கும்போது ப்ளான் போட ஆரம்பிச்சவன். வர்ற பங்குனி மாசம் மூணாவது புள்ளைக்கி வெயிட்டிங்கு. இன்னும் இந்தா இருக்கிற ஏற்காட்டுக்கே போனதில்ல... நீ இப்போதானே ஆரம்பிச்சிருக்கே'னு சொல்லிக் கெக்கெபிக்கெனு சிரிப்பாய்ங்க. இதுவும் வழக்கமான திட்டம் மாதிரி சொதப்பிடும்னு நம்மளைச் சுற்றி இருக்கிற நாலு பேரு நாக்கு மேல பல்லைப் போட்டுப் பேசிடுவாங்களோனு பயந்துதான் அடுத்த மாசம் மூணாவது வாரத்தில் மூணாறுக்குப் போறதுக்கு இன்னிக்கே சட்டை, பேன்ட்டை எல்லாம் மடிச்சு வைக்க ஆரம்பிச்சிடுவாய்ங்க நம்மாளுக. #டூருக்குப் போறதுக்கு எதுக்குய்யா ஃபார்மல் சட்டை?

* அகில உலக ஆண்கள் டிக்‌ஷனரியில் டூருக்குப் பொதுவான மீனிங்கே சரக்கு பார்ட்டிதான். டூர் கிளம்புறதுக்கு முன்னாடி சரக்கு வாங்குறதையும், அதுக்கு மேட்சிங்கா சைடு டிஷ் வாங்குறதையும் பற்றியே ஏழெட்டு நாள்களுக்கு பேச்சுவார்த்தை நடத்துவாய்ங்க. மாங்கா ஊறுகாயில் ஆரம்பிச்சு நேந்திரம் சிப்ஸ் வாங்குற வரைக்கும் நச்சரிச்சிக்கிட்டே இருப்பாய்ங்க. சிலருக்குக் கடலைமுட்டாய் கண் முன்னாடி இல்லைன்னா ஃபுல் அடிச்சாலும் போதை ஏறாது. என்னடா இது விநோதமான வியாதியா இருக்கேனு ஒவ்வொருத்தனுக்கும் தனித்தனியா லிஸ்ட் போட்டு வண்டியை நிரப்புவாய்ங்க. வண்டியில் ஏறினதும் அந்த மாங்கா ஊறுகாய் கேட்டவன் தான் முதல்லே ஆஃப்பாயிலைப் போடுவான். #ஏன்டா மசக்கையாவா இருக்கே..?

* மனுசன், எந்தத் தொந்தரவும் இல்லாம நிம்மதியா நாலுநாள் போனோமா... வீட்டை மறந்து, பிக்கல் பிடுங்கலைத் துறந்து சந்தோசமா இருந்தோமானு இல்லாம, சுற்றுலாவோட கொள்கையையே சிதைக்கிற பயலுக நம்மாளுக. கண்ணுக்கு அழகா இருக்கிற அவ்வளவு இடங்களையும் விட்டுட்டு, தற்கொலைப் பாறையில போய்த் தலையைக் கொடுத்துக்கிட்டு செல்ஃபி எடுப்பாய்ங்க. உள்ளே இருந்து தேள் வருமா? தேனீ வருமானு தெரியாத இடத்துல உங்களுக்கு என்னய்யா த்ரில்லு வேண்டிக்கிடக்கு? இன்னும் சிலர், கடல்ல ஸ்விம்மிங்கைப் போடுறேன்னு சொல்லிக் கவுந்தடிச்சு நாலு டம்ளர் உப்புத் தண்ணியைக் குடிச்சிட்டு வயிறு உப்பிப்போய்க் கிடப்பாய்ங்க. அவிங்களையெல்லாம் தெளிய வெச்சி, போன மாதிரியே வீடுவந்து சேர்க்கிறதுக்குள்ள நாக்குத் தள்ளிடும். இன்னும் சில இம்சைகள், அங்கேயும் வந்து லேப்டாப்பைத் திறந்து ஆபீஸ் வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. #அடக் கெரகமே!

டூர்

* எங்கிட்டுப் போய்ச் சுத்திட்டு வந்தாலும், இருட்டுறதுக்குள்ள தங்கியிருக்கிற ரூமுக்குப் போய், புழுவா மடிஞ்சு படுத்துக்குவாய்ங்க. அப்போதான் நடுராத்திரியில் ஃப்ரெஷ்ஷா எழுந்து பாட்டிலைத் திறக்க, பார்ட்டி களைகட்டும். கொஞ்சம் போதை ஏறத் தொடங்கும்போதே பேச்சு ஆபிஸ், வீடுன்னு அதுபாட்டுக்கு ஒரு ட்ராக்ல திரும்பும். நம்ம க்ரூப்ல இருக்கிற சாந்தசொரூபி அவன் வீட்டம்மா ரவுண்டு கட்டி அடிக்கிறதை நினைச்சுக் குமுறிக் குமுறி அழ ஆரம்பிச்சிடுவான். அவனையும் தேத்தி, அப்ரைசல் போடலைன்னு கலங்குறவனுக்கு ஆறுதல் சொல்லிப் பாதிப்பேருக்குத் தாவு தீர்ந்திடும்.  இதையே தானேய்யா ஊர்ல இருக்கும்போது எல்லா வீக் எண்ட்லேயும் பண்ணுனீங்க. #இதுக்கு ஏன் இங்கே வரணும்? நம்ம ஊர்லேயே முக்குக்கு முக்கு கடையைத் திறந்துதானே வெச்சிருக்காங்க. 

இவற்றையெல்லாம் விட இன்னொரு பெருங்கொடுமை ஒண்ணு இருக்கு. போற ஊர்ல ஹோட்டலில் விலையெல்லாம் அதிகமா இருக்கும்கிறதுக்காக ஒரு லோக்கல் ரகுராம்ராஜன் ஆலோசனைப்படி, மூணு வேளைக்கு வெச்சு வெச்சுத் திங்கிற மாதிரி புளியோதரையைக் கிண்டிப் பார்சல் கட்டிடுவாங்க. அப்புறம் என்ன... புளிச்சோத்தைத் தின்ன புலி கணக்கா பம்மிக்கிட்டே  திரிய வேண்டியதுதான். இவிங்ககூட எல்லாம் டூருக்குப் போனா அமோகமாதான் இருக்கும். #அதுசரி... அந்தப் புளியோதரையைக் கண்டுபிடிச்சவங்களைக்கூட விட்டுடலாம். அது மூணுநாளைக்குக் கெட்டுப்போகாதுனு கண்டுபிடிச்சவன் மட்டும் கையில் கிடைச்சா... 
முடியலை..!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close