ஒரே செக்டார்... ஒரே பங்கு... நல்லதா? பங்குச்சந்தை பயில்வோம்! - மினிதொடர் பாகம் 1 | Learn and earn in share market episode1

வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (07/06/2017)

கடைசி தொடர்பு:16:51 (07/06/2017)

ஒரே செக்டார்... ஒரே பங்கு... நல்லதா? பங்குச்சந்தை பயில்வோம்! - மினிதொடர் பாகம் 1

பங்குச்சந்தை

பங்குச்சந்தையை `சூதாட்டம்' என்கின்றனர் பலர்; `பணக்காரர்களின் பொழுதுபோக்கு' என்கின்றனர் சிலர். ஆனால், பங்குச்சந்தையில் செய்த தவற்றைத் திருத்திக்கொண்டோ அல்லது ஆரம்பத்திலேயே எந்த ஒரு தவறும் செய்யாமலோ நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் வெற்றி நிச்சயம். பங்குச்சந்தை என்பது முதலீடு செய்வதற்காக நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. சந்தையை நன்றாகப் புரிந்துகொண்டால், எளிய முறையில் பணத்தைச் சேர்க்கலாம். சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் நம்மிடம்தான் உள்ளது. 

பங்குச்சந்தை, சூதாட்டம்


நம் எல்லோருக்கும் பரிச்சயமான நிறுவனம் எம்.ஆர்.எஃப் டயர்ஸ். வெறும் 500 ரூபாயில் வர்த்தகத்தைத் தொடங்கிய இந்தப் பங்கின் இன்றைய விலை 68,000 ரூபாய். சிறந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்து, அதை நீண்டகாலத்துக்கு வைத்திருந்தால், அபரிமிதமான லாபம் கிடைக்கும் என்பதற்கு எம்.ஆர்.எஃப் பங்கு சிறந்த உதாரணம். இப்போது புரிந்துகொண்டிருப்பீர்களே, பங்குச்சந்தை என்பது சூதாட்டம் அல்ல... சூட்சுமம்தான் என்பதை... பங்குச்சந்தையில், பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல; பணத்தை இழக்காமலிருப்பதும் மிக முக்கியம். பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக... 

1. பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகம் அல்லது நீண்டகால முதலீடு என எதுவாக இருந்தாலும் உணர்ச்சிரீதியாக உங்களை இணைத்துக்கொள்ளாதீர்கள். விளையாட்டில் வெற்றி - தோல்வி சகஜம் என்பதைப்போல, பங்குச்சந்தை வியாபாரத்தில் லாப - நஷ்டம் சகஜம் என்பதை முதலில் உணர்ந்து முதலீடு செய்யுங்கள். 

2. பங்குச்சந்தையில் எந்த ஒரு நிறுவனத்தின் பங்கும் அதன் `52 வார உச்சத்தில் வர்த்தகம் அல்லது இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தில் வர்த்தகம்' என உச்சத்தில் வர்த்தகமாகிக்கொண்டிருக்கும்போது அந்தப் பங்கை விற்பனை செய்து `கீழே இறங்கும்போது வாங்கிக்கொள்ளலாம்' என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். 

3. பி/இ விகிதத்தை அடிப்படையாகக்கொண்டு மட்டுமே எந்த ஒரு நிறுவனத்தின் பங்கையும் வாங்கலாம் என நினைக்காதீர்கள். ஒரு நிறுவனத்தின் பங்கின் தற்போதைய சந்தை விலை 100 ரூபாய் என வைத்துக்கொள்வோம். அதனுடைய ஒரு பங்கு ஆதாயம் (Earnings per share - EPS) மிகச் சமீபத்திய 12 மாதங்களுக்கு 10 ரூபாய் என எடுத்துக்கொள்வோம். அந்தப் பங்கின் பி/இ விகிதமானது 100/10=10. குறிப்பாக, `குறைந்த பி/இ விகிதமுள்ள பங்குகள் எப்போதுமே நல்லது; அதிக பி/இ விகிதமுள்ள பங்குகள் நல்லதல்ல' என நினைக்காதீர்கள். 

4. பங்குச்சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, உங்கள் பணத்தை ஒரே ஒரு துறையிலோ அல்லது ஒரே ஒரு நிறுவனத்தின் பங்கிலோ முதலீடு செய்யாதீர்கள். முடிந்தவரை நான்கு அல்லது ஐந்து நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் உள்ள துறைரீதியிலான பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். 

5. தினசரி வர்த்தகத்தில் பங்குகளை எப்போதுமே ஷார்ட் (பங்கை விற்பனை செய்து, பிறகு வாங்கிக்கொள்வது) செய்யாதீர்கள். ஒருவேளை சந்தை முடிவடைவதற்குள் அந்தப் பங்கை நீங்கள் வாங்கவில்லை என்றால், இறுதியில் அந்தப் பங்கு ஸ்கொயர் ஆஃப் செய்யப்பட்டு ஏலத்தில் அதிக இழப்பைச் சந்திக்கவேண்டிவரும். குறிப்பாக, கார்ப்பரேட் ஏலம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் அதிக நஷ்டத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது, உஷார். 

6. பங்குச்சந்தையில் `டார்கெட்' அல்லது `ஸ்டாப் லாஸ்' எனச் சொல்லப்படும் அனைத்தும் ஒருவகையில் சப்போர்ட் அல்லது ரெசிஸ்டன்ஸ் மட்டுமே. உண்மையில், இது வேலை செய்யலாம்... வேலை செய்யாமலும் இருக்கலாம். எனவே, ஒரு நிறுவனத்தின் பங்கை 100 ரூபாய்க்கு வாங்கி, 110 ரூபாய்க்கு டார்கெட் என்றால் அந்தப் பங்கின் விலை நிச்சயம் 110 ரூபாயை எட்டும் என்றில்லை. 109 ரூபாயைத் தொட்டபிறகும்கூட மீண்டும் சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 

7. பங்குச்சந்தையில் ஒரு நிறுவன பங்கின் சப்போர்ட் அல்லது ரெசிஸ்டன்ஸைப் பொறுத்தவரை அந்தப் பங்கின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. பங்குச்சந்தையில் ஒருவேளை அதிகப் பணத்தை நீங்கள் இழந்திருந்தால், அதை மீட்பதற்காகச் செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்து பணத்தை இழக்காதீர்கள். பங்குச்சந்தையைப் பொறுத்தவரை உங்களுக்கு ஆழமான அறிவு, அனுபவம் அல்லது சந்தை வல்லுநர்களிடமிருந்து சிறந்த வழிகாட்டல் போன்றவை அவசியம் தேவை. 

சூட்சுமம் அறிவோம்!


டிரெண்டிங் @ விகடன்