வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (08/06/2017)

கடைசி தொடர்பு:13:56 (08/06/2017)

சம்பாதிப்போம்... அதற்கு முன் இழக்காமலிருக்கப் பழகுவோம்! - பங்குச்சந்தை பயில்வோம்! - மினிதொடர் பாகம் 2

பங்குச்சந்தை

                                                                                                                பாகம் 1
பங்குச்சந்தையை `சூதாட்டம்' என்கின்றனர் பலர்; `பணக்காரர்களின் பொழுதுபோக்கு' என்கின்றனர் சிலர். ஆனால், பங்குச்சந்தையில் செய்த தவற்றைத் திருத்திக்கொண்டோ அல்லது ஆரம்பத்திலேயே எந்த ஒரு தவறும் செய்யாமலோ நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் வெற்றி நிச்சயம். பங்குச்சந்தை என்பது முதலீடு செய்வதற்காக நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. சந்தையை நன்றாகப் புரிந்துகொண்டால், எளிய முறையில் பணத்தைச் சேர்க்கலாம். சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் நம்மிடம்தான் உள்ளது. பங்குச்சந்தையில், பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல; பணத்தை இழக்காமலிருப்பதும் மிக முக்கியம். பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக... 

பங்குச்சந்தை,

1. சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தின் வணிகம், விற்பனை, வருமானம், காலாண்டு முடிவுகள், செயல்திறன் உள்பட பல விஷயங்களை அலசி ஆராய வேண்டும். ஆனால், `ரமேஷ் சொன்னாரு, சுரேஷ் சொன்னாரு' என்று யாரோ ஒருவர் சொல்வதற்கிணங்க மோசமான பங்குகளில் முதலீடு செய்து பணத்தை இழக்கின்றனர். இனிமேலாவது உங்கள் நண்பரோ, உறவினரோ, யார் என்ன அறிவுரை சொன்னாலும் தாராளமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால், அவற்றைக் குறித்த ஆழமான ஆலோசனைக்குப் பிறகே முதலீட்டு முடிவைத் தீர்மானியுங்கள். 

2. பங்குச்சந்தையில், அதிக கடன் வாங்கிய நிறுவனங்கள் எல்லாம் மிக மோசமான நிறுவனங்கள் என்றும், கடன் இல்லாத நிறுவனங்கள் எல்லாம் நல்ல நிறுவனங்கள் என்றும் நினைக்காதீர்கள். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் கடன் வாங்குகிறது என்றால், அந்த நிறுவனம் எதற்காகக் கடன் வாங்குகிறது, அந்தக் கடனை வைத்து அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதே தொடர்ந்து கவனித்திட வேண்டும். குறிப்பாக, சந்தையில் ஒரு நிறுவனத்தின் கடனைவிட அந்த நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதே மிக அவசியம். 

3. எந்த ஒரு வணிகத்திலும் நடைமுறை அறிவைவிட சிறந்தது வேறு எதுவுமில்லை. என்றாலும், பங்குச்சந்தையைப் பொறுத்தவரை, முதலீடு என்றால் `ஃபண்டமென்டல் அனாலிசிஸ்', வணிகம் என்றால் `டெக்னிக்கல் அனாலிசிஸ்' எனப் பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன. சந்தையைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள் அல்லது ஓரளவு தெரிந்தவர்கள்கூட இந்த இரண்டு அனாலிசிஸ்களைக் கற்றறிந்து முதலீடு அல்லது வணிகம் செய்வதே நல்லது. இவற்றைக் கற்றறிந்தால் பங்குச்சந்தையில் பணத்தைச் சம்பாதிக்கிறோமோ இல்லையோ, கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை நிச்சயம் இழக்காமல் இருக்கலாம்.

4. `ஸ்டாப் லாஸ்' என்பது, நாம் வாங்கிய ஒரு பங்கின் விலை சரிந்தால், நாம் எந்த விலையில் அந்தப் பங்கிலிருந்து வெளியேற வேண்டும் என முடிவுசெய்வது. அதாவது, நம்மால் எவ்வளவு நஷ்டம் தாங்க முடியும் என்பதைப் பொறுத்து ஒரு விலையை நிர்ணயிப்பது. சந்தை சரிந்துகொண்டிருக்கிறது அல்லது பங்கின் விலை சரிந்துகொண்டிருக்கிறது என்றால், உடனடியாக உங்களது ஸ்டாப் லாஸ் விலையில் உங்கள் பங்கு விற்றுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது. பங்குச்சந்தை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கும், நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கும் `ஸ்டாப் லாஸ்' என்பது பெரிதாகத் தேவைப்படாது. தினசரி வர்த்தகம், எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அவசியம் ஸ்டாப் லாஸ் பயன்படுத்துவது நல்லது.

5. பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ என எவ்வளவு பெரிய நல்ல நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனத்தில் நீண்டகால நோக்கில் நீங்கள் முதலீடு செய்துவந்தாலும், குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் முதலீட்டை மதிப்பாய்வு செய்வது மிக முக்கியம். அந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், செயல்திறன் போன்றவற்றின் அடிப்படையில் உங்கள் முதலீட்டைத் தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்பதைத் தீர்மானிப்பது நல்லது.

6. இப்போது, பங்குச்சந்தையில் பெரும்பாலானோர் `எஃப் அண்ட் ஓ' எனும் முன்பேர வர்த்தகத்தில்தான் பணத்தை இழக்கின்றனர். இதில் `குறைந்த முதலீடு, அதிக லாபம்' எனச் சொல்வார்கள். அதே சமயம், இதில் அதிக நஷ்டமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எஃப் அண்ட் ஓ வர்த்தகம் என்பது, கலை. எதுவுமே தெரியாமல் நஷ்டத்தைச் சந்திப்பதைவிட, இதில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. இல்லையெனில், இதுகுறித்து ஓரளவு தெரிந்த பிறகு வணிகத்தில் ஈடுபடுவதே நல்லது. 

7. தெருக்குத் தெரு டீக்கடையைப் போல, நம் ஊரில் நிதி ஆலோசனை வழங்குகிறேன் என்ற பெயரில் பல நிதி ஆலோசகர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அணுகுமுறை, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை எனப் பல விஷயங்களைக் கவனித்து, அதன்பிறகு ஆலோசனைகளைக் கேட்டு பங்குச்சந்தையில் முதலீட்டை மேற்கொள்வது நல்லது. நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஃபேமிலி டாக்டரை அணுகுவதுபோல, நிதி சார்ந்த விஷயங்களிலும் ஃபைனான்ஷியல் டாக்டரை அணுகி, அவரின் ஆலோசனைப்படி செயல்படுவது சிறந்தது. 

- சூட்சுமம் அறிவோம்! 


டிரெண்டிங் @ விகடன்