வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (27/06/2017)

கடைசி தொடர்பு:10:09 (27/06/2017)

எதற்கும் பொறுப்பேற்காத வங்கிகள்; நாம் ஏன் பணம் கொடுக்கவேண்டும்?

‘வங்கி லாக்கரில் வைத்திருக்கும் பொருள்கள் காணாமல்போனால், வங்கிகள் அதற்குப் பொறுப்பாகாது' என்று ஆர்.பி.ஐ தெரிவித்துள்ள கருத்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக்காக நகைகள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வங்கி லாக்கரில் வைப்பதை வழக்கமாகவைத்துள்ளனர். இதற்காக வங்கிகள் லாக்கரின் அளவுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்து வசூலித்துவருகின்றன. இந்த நிலையில், `வங்கி லாக்கர்களில் வைக்கப்படும் பொருள்கள் சேதமடைந்தால், அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது' என்ற அதிர்ச்சிகரமான விஷயம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது. 

Bank

டெல்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர், வங்கிகளில் வைக்கப்படும் பொருள்கள் தொடர்பான தன் சந்தேகங்களை ஆர்.டி.ஐ மூலம் ஆர்.பி.ஐ உள்பட 19 வங்கிகளிடம் விளக்கம் கேட்டார். அதற்கு வங்கிகள் அளித்துள்ள பதில் பொதுமக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. அந்தப் பதிலில், `லாக்கரில் வாடிக்கையாளர்கள் வைக்கும் நகை உள்பட எந்தப் பொருள்களுக்கும் வங்கி பொறுப்பாகாது. லாக்கரில் வைக்கப்படும் நகைகள் அல்லது ஆவணங்கள் உள்ளிட்ட இதரப் பொருள்கள் காணாமல்போனாலோ அல்லது சேதமடைந்தாலோ அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்காது. லாக்கரில் வாடிக்கையாளர்கள் தங்களின் பொருள்களை வைப்பது என்பது, குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான். இதனால், லாக்கரில் வைக்கப்படும் பொருள்களுக்கு வாடிக்கையாளர்தான் முழுபொறுப்பு ஏற்க வேண்டும்' என்று வங்கிகள் தெரிவித்துள்ளன. 

இந்த நிபந்தனைகள் எல்லாம் வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் தெளிவாகத் தெரிவித்துதான் தங்களின் லாக்கரில் பொருள்களை வைக்க அனுமதிக்கிறதா என்பது தெரியவில்லை. `ஒருவேளை இந்த நிபந்தனைகள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிந்திருந்தாலும், வாடிக்கையாளர்கள் ஏன் எதற்கும் பொறுப்பாகாத வங்கிகளிடம் நகைகளைக் கொடுத்துவைக்க வேண்டும்?' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இந்த நிலையில் `லாக்கரில் வைத்திருக்கும் பொருள்கள் காணாமல்போனால் வங்கிகள் அதற்குப் பொறுப்பாகாது' என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த தனியார் வங்கி அதிகாரி சுந்தராஜனிடம் கேட்டோம்... 

“லாக்கர் என்பது எல்லோருக்கும் பொதுவானது. இதற்கு எந்த விதிவிலக்கும் இல்லை. யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். வங்கியில், லாக்கர் வசதி காலியாக இருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. வாடிக்கையாளர் ஒருவருக்கு ஒரு லாக்கர்தான் என எந்த ஒரு கணக்கும் இல்லை. வங்கி லாக்கர் வசதியைப் பொறுத்து ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட லாக்கரோ வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது. 

லாக்கர் கட்டணத்தைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது. இதில் பொதுத்துறை வங்கிகள் குறிப்பிட்ட ஒரு கட்டணத்தையும், தனியார் வங்கிகள் இவர்களைவிட கொஞ்சம் அதிக கட்டணமும் வசூலிக்கின்றன. இது ஒவ்வொரு வங்கி மற்றும் வங்கி லாக்கரைப் பொறுத்துக் கட்டணம் மாறுபடும். பொதுத்துறை வங்கிகளில் வங்கி லாக்கர் 2,000 மற்றும் 2,500  ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் வங்கிகளில் 4,000 மற்றும் 5,000 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. லாக்கர்கள் சைஸ்வாரியாக உள்ளன. இதற்குத் தகுந்த மாதிரி கட்டணங்கள் வசூலிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், சென்னை போன்ற பெருநகரங்களில் லாக்கர் கட்டணம் சற்று அதிகம். இதுவே நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என ஒவ்வொரு ஏரியாவுக்கும் தகுந்த மாதிரி வங்கி லாக்கர் கட்டணம் வேறுபடும். 

லாக்கரில் வாடிக்கையாளர்கள் என்ன வைக்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். ஆகையால், வங்கி இதற்குப் பொறுப்பு ஏற்காது. RBIசிலர் வங்கி லாக்கரில் என்ன வைத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிடுவார்கள். வங்கி லாக்கரில் என்ன இருக்கிறது என்பதற்கு வாடிக்கையாளர்தான் பொறுப்பு. இது ரிசர்வ் வங்கியின் விதி. வங்கி லாக்கர் வசதியை வாடிக்கையாளருக்கு வழங்கும்போதே, அதற்கான ஆவணத்தில் `வங்கி லாக்கரில் வைத்திருக்கும் பொருள்கள் காணாமல்போனால் வங்கிகள் அதற்குப் பொறுப்பாகாது' என்ற விஷயத்தைக் குறிப்பிட்டிருப்போம். வாடிக்கையாளரிடமிருந்து கையொப்பமும் வாங்கிக்கொள்வோம். இந்த நடைமுறை ஏற்கெனவே இருப்பதுதான். ஆனால், இப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த விஷயம் வெளிவந்துள்ளதால், இது இப்போது பரவலாகப் பேசப்படுகிறது" என்றார் அவர். 

‘லாக்கரில் வைத்திருக்கும் பொருள்கள் காணாமல்போனால் வங்கிகள் அதற்குப் பொறுப்பாகாது' என என்னதான் ரிசர்வ் வங்கியின் விதியாக இருந்தாலும், `வங்கிகள் பொறுப்பேற்காதபோது வாடிக்கையாளர்கள் தங்களின் பொருள்களை ஏன் வங்கிகளில் வைக்க வேண்டும்... வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாமே' என்ற கேள்விதான் எல்லோர் மனங்களிலும் எழுகிறது. ஆனால், இந்த நடைமுறை இன்று, நேற்று அல்ல, பல நாள்களாக நீடித்துவருகிறது. எனினும், எதற்கும் பொறுப்பேற்காத வங்கிகளிடம் நம் பொருள்களையும் கொடுத்து அதைப் பாதுகாக்கப் பணமும் நாம் ஏன் கொடுக்க வேண்டும்? 

உங்களுடைய கருத்துகளை கீழே பகிரலாமே!


டிரெண்டிங் @ விகடன்