'காதுக்குள் சொல்லும் ரகசியமா மாதவிடாய்? உடலைப் பற்றிப் பேச தயக்கம் எதற்கு சகோதரிகளே!' #CelebrateWomenism | Why women hesitate to speak about their periods? #CelebrateWomenism

வெளியிடப்பட்ட நேரம்: 09:56 (28/07/2017)

கடைசி தொடர்பு:13:37 (29/07/2017)

'காதுக்குள் சொல்லும் ரகசியமா மாதவிடாய்? உடலைப் பற்றிப் பேச தயக்கம் எதற்கு சகோதரிகளே!' #CelebrateWomenism

மாதவிடாய் 

நான் ஒரு பெண். பொதுவெளியில் கழுத்துக்குக் கீழே கண்களைக் கொண்டுசெல்லாத நேர்மையான ஆண்களின் பார்வைகளுக்காக ஏங்குபவள். என்னைப்போன்ற பெண்களின் உடலைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள காரணமற்ற சுவர்களை உடைத்தெறியத் துடிப்பவள். பால் பேதமற்ற சமூகத்தில் என் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என ஆசைப்படுபவள். நானும் எல்லாவற்றுடனே வளர்ந்தேன். என் மார்பில் ஒருவன் கை வைத்துவிட்டால், அதைவிட அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்றும், அதற்காக நான் கண்ணீர்விட்டுக் கதற வேண்டும் என்றும், கை வைத்தவனைத் தட்டிக் கேட்க ஒரு கதாநாயகனுக்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் திரைப்படங்களினால் கற்றுக்கொடுக்கப்பட்டேன். ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால், நிச்சயமாகத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று அடி மனதில் பதியவைக்கப்பட்டது. அதனால், என்னவென்று அறியாத அந்தச் சிறு வயதில் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன், ‘கடவுளே! என்னால் தற்கொலை செய்துகொள்ள முடியாது. அதனால், எனக்கு அந்தமாதிரி நேர்ந்து விடக்கூடாது’ என்று. 

எனக்கு அப்போது ஒன்பதோ, பத்தோ வயதிருக்கும். ஒரு பிறந்தநாள் விழாவுக்குப் பெற்றோருடன் சென்றிருந்தேன். ஒருவன் என்னை அழைத்து, என் வாயில் முத்தம் கொடுத்தான். தாங்க முடியாத அருவருப்பு, வேதனை, அச்சம் என அப்போது எனக்குள் எழுந்த உணர்வுகளை எந்த வார்த்தைக்குள் அடக்குவது எனத் தெரியவில்லை. ‘என்ன, என்ன?’ என்று துளைத்துக்கொண்டேயிருந்த அம்மாவிடம், வீட்டுக்கு வந்த பிறகு தயங்கித் தயங்கிச் சொன்னேன். 

அன்று அம்மா என்னிடம் நீண்ட நேரம் பேசினார். அதன் சாரம்சம் இதுதான். 'இதைத் தயங்காமல் வெளியில் சொல்லலாம். இதில் உன் தவறு ஒன்றுமில்லை’ என்று புரியவைக்க மிகவும் சிரமப்பட்டார். உண்மையில், என் வீட்டு வளர்ப்பும் வாசிப்பும்தான் என் கண்களைத் திறந்தன. 

என் தோழிகள் ‘மாதவிடாய்’ என்று மெதுவாகச் சொன்னபோது, நான் இயல்பாகச் சொன்னேன், ‘மாதவிடாய்’ என்று. என் தோழிகள் மாதவிடாய் நேரத்தில் கோவிலுக்குச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டபோது, நான் கோவிலில் வழிபட்டேன். உண்மையில், ஆண் பெண் உறவுகளுக்குள் எழும் வேறுபாடுகளைக் களைவதற்கு, பெண் உடலைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள தேவையற்ற கற்பிதங்களை முதலில் தகர்க்க வேண்டும், இயற்கையை ஏன் மறைக்க வேண்டும்? பெண் என்றால் அவளுக்குக் கர்ப்பப்பை இருக்கும், மார்பகங்கள் இருக்கும். அதுபோல ஆண்களுக்குச் சில உறுப்புகள் இருக்கும். பிறகு, பெண் மட்டும் ஏன் இதையெல்லாம் காதுக்குள் சொல்ல வேண்டும், மறைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறாள்? 

பெண்

இந்தியாவில் வாழும் ஒரு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள்போலவே உடையணிவார்கள். அதாவது, கீழ்ப் பகுதியில் மட்டுமே உடை உடுத்துவார்கள். அங்கே இதுவரை எந்தப் பாலியல் வன்முறைகளும் நிகழ்ந்ததில்லை என்று படித்திருக்கிறேன். அங்கே பெண்கள் தங்கள் மார்பகங்களை வெறும் ஆபரணங்களால் மட்டுமே மறைத்திருந்தபோதிலும், அவர்களை வக்கிரமாகப் பார்ப்பதில்லை. இங்கோ தலைகீழ் நிலைமை. ‘நீ என் பிட்டுப் படம்டி” என்று பாடினால், அது பட்டித்தொட்டி எங்கும் புகழ்பெறுகிறது. ‘பிட்டுப் படம்’ என்றால், என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். பிறகு எப்படிச் சிறிதுகூட மன உறுத்தலின்றி, பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் இந்தியச் சமூகத்தில் இதுபோன்ற பாடல்களை ரசித்துக் கேட்க முடிகிறது? ‘பிட்டுப் படம்’ என ஜாலிக்காகப் பாடிவிட்டு நாம் எளிதில் அடுத்த வேலையில் மூழ்கிவிடலாம். ஆனால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நம் மகள்கள், சகோதரிகளை எண்ணிப் பார்த்தால், வெறிகொண்ட நாய்களால் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டது உறைக்கும். பெண்களைச் சீண்டும் வசனங்களுக்குத்தானே, இங்கே கைதட்டல் அதிகம் விழுகிறது. ‘பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ எனப் பாடி வளர்ந்தவர்கள், வளர்ப்பவர்கள்தானே நாம்? பிறகு எப்படி நம்மால் தவறான பதிவுகளைக் கண்டிக்காமல் கொண்டாட முடிகிறது? 

பெண்கள் இப்போதுதான் வெளியில் வரத்தொடங்கி இருக்கிறார்கள். இந்தத் திடீர் மாற்றத்தை ஆண்கள் எதிர்கொள்ள, புரிந்துகொள்ள நேரமாகும் என்பது உண்மைதான். ஆனால், நண்பர்களே! அதற்கான முயற்சியையாவது முன்னெடுக்க வேண்டுமல்லவா? இன்னும் எவ்வளவு காலம்தான் எங்களது வானத்தை நாங்கள் ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருப்போம்? நாங்கள் எங்கள் சிறகுகளை விரித்துவிட்டோம். எங்களை வாழ்த்துங்கள். எங்கள் பயணத்தில் நாங்கள் வக்கிரமான பார்வைகளைச் சந்திக்க விரும்பவில்லை. சிநேகமாகத் தோள்கொடுக்கும் உங்கள் துணையை எதிர்பார்க்கிறோம். 

வாருங்கள்... அன்பினால் ஓர் உலகம் சமைப்போம். அதில், நம் மகன்களும் மகள்களும் ஒன்றாக விளையாடி நட்பாகக் கதைகள் பேசி வேறுபாடுகளற்று உலா வருவார்கள். 

 


டிரெண்டிங் @ விகடன்