Published:Updated:

டேர்ம் பிளான், மியூச்சுவல் ஃபண்ட்... குடும்பத்துக்குச் செய்யும் உண்மையான உயில்!

சோ.கார்த்திகேயன்
டேர்ம் பிளான், மியூச்சுவல் ஃபண்ட்... குடும்பத்துக்குச் செய்யும் உண்மையான உயில்!
டேர்ம் பிளான், மியூச்சுவல் ஃபண்ட்... குடும்பத்துக்குச் செய்யும் உண்மையான உயில்!

இன்றைய தேதியில் பொருள் சேர்ப்பது மட்டுமல்லாமல், அதைப் பலமடங்காகப் பெருக்குவது என்பது பெரிய சவால். இதை எளிமையாகவும் துரிதமாகவும் செய்வதற்கு ஏற்ற வழிமுறைகளை அறிந்துகொள்ளும் வகையில் சேமிப்பு மற்றும் முதலீடு குறித்து நிதி ஆலோசகர் ரவிக்குமாரிடம் கேட்டோம்... 

``முந்தைய தலைமுறையில் 22 வயதிலேயே அரசு அல்லது அரசு சார்ந்த வேலையில் சேர்ந்துவிடுவார்கள். அந்தக் காலம் மட்டுமல்ல இந்தக் காலத்தில்கூட அரசு வருமானம் என்றாலே தனி மதிப்புதான். பெண் வீட்டாரும், தங்கள் பெண்ணை அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்புவர். ஏனென்றால், அரசு வேலையில் இருக்கும்போதும், வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் நிலையான வருமானம் கிடைக்கும். அந்தக் காலகட்டத்தில் மனிதனின் தேவைகள் குறைவாக இருந்தன. கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி, குழந்தைகளைப் படிக்கவைத்து சிறப்பான முறையில் அவர்களுக்கு மணம் முடித்துவைப்பர். இதற்கெல்லாம் மூலகாரணம் உறுதியான வேலை. 22 வயதில் வேலையில் சேர்ந்தவர், 35-40 வருடங்கள் அதே வேலையில் சிலபல ஊர்களில் வேலைசெய்து பிறகு ஓய்வுபெறுவார். அந்த 40 வருட காலத்தில் அவர்களின் ஊதியத்தில் அரசு சிறு தொகையைப் (Provident Fund) பிடித்துக்கொள்ளும். வருடா வருடம் அதற்கு சிறு வட்டியும் சேர்த்துவிடும். அவர்கள் ஓய்வுபெறும்போது முதிர்வுதொகையிலிருந்து அவர்களுக்கு மாதாமாதம் ஊய்வூதியம் கிடைக்கும். 

இதைப்போல பலதரப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. குறிப்பாக, ஈக்விட்டி சார்ந்த முதலீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் டைவர்சிஃபைட் ஈக்விட்டி திட்டம் மூலம் மாதாமாதம் தங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பற்றுவைத்து முதலீடு மேற்கொள்ளலாம். இதை எப்போதும், யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். முதலீடு செய்வதை உறுதிசெய்துகொண்டு சிறு தொகையானாலும் முதலீடு செய்யலாம். மாதம் 500 ரூபாய்கூட முதலீடு செய்யலாம். விரைவாகவும் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்துவந்தால், பலன்கள் பல.  ஒவ்வொரு முதலீட்டையும் குறிக்கோளுடன் செய்துவந்தால் விரைவில் நன்மை பயக்கும். உதாரணமாக, குழந்தை பிறந்தவுடன் அவர்களின் கல்வி, தொழில், திருமணம் போன்றவற்றை நிறைவேற்றியே தீர வேண்டும். இதற்கு அதிகம் செலவாகும். அதற்குத் தேவையான பணம் மாதத்தின் அடிப்படையில் சிறுகச் சிறுக மியூச்சுவல் ஃபண்டில் சேர்த்துவந்தால், அதிலிருந்து பல லட்சம் ரூபாயை வருமானமாக ஈட்டலாம். 

இன்றைய பொழுதில் ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல சில வருடங்களே வேலை செய்வதாலும், வேலையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாலும், வளர்ந்துவரும் பொருளாதார முன்னேற்றத்தாலும், மனிதனின் தேவை அதிகரிப்பதாலும் இந்த மாதிரியான முதலீடுகள் மிகவும் அவசியம். இத்துடன் Term Plan எடுத்து தன்னை முழுமையான மதிப்புக் காப்பீட்டை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்தக் காப்பீடுதான் நீங்கள் உங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உண்மையான உயில். தற்போது எல்லா இடங்களிலும் கணினிமயமாகிவிட்டதால் நீங்கள், `எவ்வாறு சேமித்துவைத்திருக்கிறீர்கள், அதை எப்படி அடைய முடியும், அதற்கான வழிமுறைகள்' ஆகியவற்றைப் பற்றி உங்கள் மனைவியிடம் சொல்லி புரியவைத்து அவர்களையும் அதற்குத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதை, பலரும் செய்ய தவறுகின்றனர். நல்ல வருமானம் ஈட்டக்கூடிய முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால், வாழ்க்கையை வாழ்ந்து வென்றுகாட்ட முடியும்" என்றார் நிதி ஆலோசகர் ரவிக்குமார்.