Published:Updated:

விபத்தை ஏற்படுத்தும் பாம்பன் பாலம்..! உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

விபத்தை ஏற்படுத்தும் பாம்பன் பாலம்..! உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
விபத்தை ஏற்படுத்தும் பாம்பன் பாலம்..! உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

விபத்தை ஏற்படுத்தும் பாம்பன் பாலம்..! உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

பாம்பன் பாலத்தில், விபத்தை ஏற்படுத்தும் ரப்பர் சாலைக்குப் பதிலாக, நிபுணர் குழு அமைத்து புதிய சாலை அமைக்கக்கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து முதன்மைச் செயலர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.


 நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது, அன்னை இந்திராகாந்தி பாலம். பாலத்தின் மேல் வாகனங்கள் செல்லும் வகையிலும், அதன் கீழ் கப்பல்கள் கடந்து செல்லும் வகையிலும் அமைக்கப்பட்ட இந்தப் பாலம், கடந்த 1988-ம் ஆண்டு போக்குவரத்திற்காகத் திறந்துவிடப்பட்டது. பெருகிவரும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்தாலும், கடல் உப்புக்காற்றின் விளைவாகவும் இந்தப் பாலத்தின் மையப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு இணைப்புகள் சேதமடைந்து, பாலத்தில் அதிர்வு ஏற்பட்டு வந்தது. மேலும், பாலத்தின் இரும்பு ராடுகள் விபத்து ஏற்படுத்தும் வகையில் வெளிக்கிளம்பின. இதைச் சரி செய்வதற்கு முதலில் 18.56 கோடியிலும், பின்னர் 2.70 கோடியிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ரப்பர் சாலையினால், தொடர்ச்சியாக விபத்துகள் நடந்துவருகின்றன.


இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தும் ரப்பர் சாலைக்குப் பதில் புதிய சாலை அமைக்க உத்தரவிடக் கோரி, திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தின் பெரும் பகுதியையும் ராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இங்கு தரைவழி, கடல்வழி, கப்பல் வழி அமைக்கப்பட்டுள்ளது. இதில், தரைவழி அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் தொலைவு, சுமார் 2.3 கி.மீ தூரமாக உள்ளது. பாம்பன் பாலத்தில் கடந்த சில நாள்களாக தொடர்விபத்துகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 விபத்துகள் நடந்துள்ளன.

இதற்கான காரணம், பாம்பன் பாலத்தில் புதிதாகப் போடப்பட்ட ரப்பர் சாலை, நெடுஞ்சாலைத்துறையின் சரியான விதிமுறைகளைப் பின்பற்றாமல், சுண்ணாம்பு மற்றும் தார், குவாரித் துகள்கள்கொண்டு அமைக்கப்பட்ட இந்தச் சாலை, வாகனங்களை இயக்குவதற்கு ஏதுவாக இல்லை. மேலும், வாகனத்தின் சக்கரத்திற்கும் சாலைக்கும் பிடிமானம் இல்லாமல் போய்விடுகிறது. வேகமாக வரும் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்டவை, வேகத்தைக் கட்டுபடுத்த முடியாமல் விபத்துகுள்ளாகின்றன.

ஆகவே, இந்தப் பாலத்தில் புதிய சாலை அமைக்க நிபுணர் குழு அமைத்து, ஆய்வு நடத்தி, முறையான சாலை அமைக்க வேண்டுமெனக் கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகையில், கப்பல்,சாலை மற்றும் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு