Published:Updated:

''முற்போக்கு இலக்கியத்தின் முகம்... மேலாண்மை பொன்னுச்சாமி!'' - உதயசங்கர்

''முற்போக்கு இலக்கியத்தின் முகம்...  மேலாண்மை பொன்னுச்சாமி!'' - உதயசங்கர்
News
''முற்போக்கு இலக்கியத்தின் முகம்... மேலாண்மை பொன்னுச்சாமி!'' - உதயசங்கர்

''முற்போக்கு இலக்கியத்தின் முகம்... மேலாண்மை பொன்னுச்சாமி!'' - உதயசங்கர்

சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவருமான மேலாண்மை பொன்னுச்சாமியின் மறைவுக்கு, எழுத்தாளர் உதயசங்கர் எழுதியுள்ள அஞ்சலிக்கட்டுரை.

கிராமப்புற எளிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளை தன்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் உரத்துப் பேசும் குரலாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் பெயர். தமிழ் இலக்கியத்திலும் சரி, முற்போக்கு இலக்கியத்திலும் சரி, மேலாண்மை பொன்னுச்சாமியின் பங்களிப்பு அளப்பரியது. எளிய பின்புலத்திலிருந்து பள்ளிக்கூடப் படிப்பையே முடிக்க முடியாத வறுமைச் சூழலில், சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று புளி விற்றார். அவருடைய வாசிப்பின் ஆர்வமே அவரை எழுதத் தூண்டியது. 

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியராக அவர் பணியாற்றியபோது `தான் கண்ட காட்சிகளை எழுதிப்பார்த்தால் என்ன?' எனத் தோன்றியதன் விளைவு, அவர் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். 1970-களில் தொடங்கப்பட்ட `செம்மலர்' இலக்கிய இதழின் ஆசிரியர் கே.எம்.முத்தையாவை, தன்னுடைய ஞானத்தந்தையாகக்கொண்டார் மேலாண்மை பொன்னுச்சாமி. கே.எம்.முத்தையாவின் ஊக்கமும் உற்சாகமும் அவரை நேரடி அரசியலிலிருந்து தீவிர எழுத்துப்பணிக்குத் திருப்பின. அதன் பிறகே ஏராளமான சிறுகதைகளை எழுதினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நவீன இலக்கியம் பரிச்சயமானபிறகு, `செம்மலர்' பத்திரிகையில் வரக்கூடிய அவருடைய கதைகளை வாசித்து அவரிடமே விமர்சித்திருக்கிறேன். கோவில்பட்டியில் இருந்த பால்வண்ணம், ஆர்.எஸ்.மணி, தேவப்ரகாஷ் போன்ற நண்பர்களிடம், செம்மலரில் ஒவ்வொரு மாதமும் வெளிவரும் அவருடைய கதைகளுக்கான கருத்துகளையும் விமர்சனங்களையும் கேட்பதற்காக, திருவேங்கடத்துக்கு அருகில் உள்ள மேலாண்மறை நாட்டிலிருந்து சைக்கிளை மிதித்துக்கொண்டு வருவாராம். அவர்களும் இவருக்கு டீ, வடை வாங்கிக் கொடுத்து கடுமையான விமர்சனங்களை அவரிடம் சொல்வார்களாம். எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வாராம். அவர்கள் சொன்னவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு அடுத்த கதையை எழுதி செம்மலருக்கு அனுப்பிவைப்பார். அந்தக் கதை வந்ததும் மறுபடியும் கோவில்பட்டிக்கு வருவார்.

விமர்சனங்களைக் கண்டு அஞ்சி நடுங்கும், விமர்சனங்களைத் தவிர்க்க நினைக்கும் எழுத்தாளர்கள் மத்தியில் விமர்சனங்களைத் தேடிப் போய் வாங்கும் எழுத்தாளராக இருந்தார் மேலாண்மை பொன்னுச்சாமி. நாளடைவில் சாகித்ய அகாடமி விருது வாங்கும் அளவுக்கான படைப்புகளை எழுதிய மேலாண்மையின் அர்ப்பணிப்பு, எல்லோரும் பின்பற்றத்தக்கது. கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனின் வழியே தன்னை ஒரு கதைசொல்லியாக நிலைநிறுத்திக்கொண்டவர். யதார்த்தவாதம், விமர்சன யதார்த்தவாதம், சோஷியலிச யதார்த்தவாதம் என்ற இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில் உரத்து நின்று எழுதியவர்.

அவருடைய எளிய முறையிலான கதை சொல்லலும், கிராமங்களில் வாழும் விவசாயிகளின் பிரச்னைகளை அவருடைய கதைகளில் கையாண்டவிதமும், மனித உணர்வுகளின் பேதங்களை மட்டுமல்ல, உன்னதங்களையும் உணர்ச்சித் ததும்பல்களையும் உரத்துச் சொன்ன மகத்தான படைப்பாளி. தன்னுடைய படைப்புகளில் கலை அமைதி, வடிவ நேர்த்தி, உள்ளடக்கப் பொருத்தம் எனப் பெரிய அளவில் கவலைப்பட்டவர் அல்ல. உணர்ச்சி கொப்புளிக்கும் நிகழ்வுகள், உரத்துப் பேசும் கரிசல் மனிதர்களை தன்னுடைய படைப்புகளில் உலவவிட்டவர்.

கல்கியின் மூலம் பரந்த வாகசப் பரப்புக்குள் வந்த மேலாண்மை பொன்னுச்சாமி, ஆனந்த விகடனில் முத்திரைக் கதைகள் எழுதி பெரும் புகழ்பெற்றார். `சிபிகள்', `கூரை', `உள்மனிதன்', `பூக்காத மாலை' போன்ற ஏராளமான கதைகளையும், நாவல்களையும், சிறுகதை எப்படி எழுத வேண்டும் என இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் நூல்களையும் எழுதியுள்ளார் மேலாண்மை பொன்னுச்சாமி. தான் ஓர் இடதுசாரி எழுத்தாளன் என்பதை உரத்துப் பேசுபவர். எல்லோர் மீதும் மிகவும் உரிமையுடன் பழகும், ஆலோசனை சொல்லும் / கேட்கும் எளிய மனிதர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே அமைப்பை வளர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் பெரும் ஈடுபாடுகொண்டவர். த.மு.எ.க.ச-வின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டவர். முற்போக்கு எழுத்தாளர் படை ஒன்றை உருவாக்க, கடுமையாக உழைத்தவர். எழுத்தும் இயக்கமும் என இடையுறாது இயங்கியவர். ஐந்தாம் வகுப்பு முடிக்காத மேலாண்மை பொன்னுச்சாமியின் படைப்புகளை, ஏராளமான ஆய்வு மாணவர்கள் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார்கள்.

என்மீது தனிப்பட்ட அக்கறையும் அன்பும்கொண்ட மேலாண்மை பொன்னுச்சாமியிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு டீ குடிப்பார். வெளிப்படையான வெள்ளந்தியான அவருடைய எளிய குணம், என்னை ஆச்சர்யப்படுத்தும். இதோ டீக்கடையில் நின்று டீ குடித்துக்கொண்டிருக்கிறேன். என் அருகில் இருந்த நண்பர் கேட்டார்,

``என்ன... அடுத்தடுத்து ரெண்டு டீ குடிக்கிறீங்க?”

நான், `மேலாண்மை பொன்னுச்சாமி' என்கிற மகத்தான படைப்பாளிக்கு, முற்போக்கு இலக்கியத்தின் முகமாய்த் திகழும் எழுத்தாளுமைக்கு விடை கொடுத்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் அருமைத் தோழரே... உங்கள் எழுத்துகள்தான்  எங்களை வழிநடத்துகின்றன  அப்போதும்... இப்போதும்!''